வியாழன், 25 செப்டம்பர், 2025

பொன்னியின் செல்வன்

    கொஞ்சம் நீண்ட பதிவுதான், நேரமும் பொறுமையும் இருப்பின் வாசிக்கலாம்.
    சோழ மன்னர் கண்டராதித்தருக்கு வாரிசு இல்லாததால் தனக்குப் பிறகு தனது தம்பிக்கு சோழ நாட்டின் அரியணையை வழங்குகிறார். ஆனால் தனது மனைவிக்குப் பிறந்த குழந்தை அசைவின்றி இருந்ததால் இறந்து விட்டதாகக் கருதி புதைக்க உத்தரவிடப்பட்ட குழந்தை உயிருடன் இருக்கும் தகவலறிந்து, அந்த குழந்தைக்கு மதுராந்தகன் எனப்பெயரிட்டு வளர்க்கிறார். தனது மரணத் தருவாயில் மனைவி செம்பியன் மாதேவியிடம், மதுராந்தகனை ஒரு போதும் அரசனாக்கக் கூடாது, தம்பியும் அவனது வாரிசுகளுக்கும் மட்டுமே அரசபட்டம் சூட்டவேண்டும் என சத்தியம் வாங்குகிறார். செம்பியன் மாதேவியும் தனது சத்தியத்தை காப்பாற்றி வருகிறார். 
 
    கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயருக்குப்பின் அரிஞ்சயரின் மகன் சுந்தரசோழர் பட்டமேற்கிறார். அவருக்கு ஆதித்த கரிகாலன், குந்தவை, அருண்மொழி வர்மன் என மூன்று குழந்தைகள், இவர்களின் குழந்தைப்பருவத்தில் காவிரி ஆற்றில் குடும்பத்துடன் படகில் செல்லும் போது ஆற்றில் தவறி விழுந்த அருண்மொழி வர்மனை ஒரு பெண் காப்பாற்றி படகில் சேர்த்துவிட்டு மறைகிறாள். காவிரித்தாயே காப்பாற்றியதாகக் கருதி பொன்னியின் செல்வன் என அழைக்கப்படுகிறான்.

     சோழ நாட்டு கோட்டைக்காவலரான சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணக்கும் மதுராந்தகன், பெரிய மாமனார் பெரிய பழுவேட்டரையர், கடம்பூர் சம்பூவரையர் உள்ளிட்ட சிற்றரசர்களின் துணையுடன் சோழ அரசின் மன்னராகத்துடிக்கிறான். இதற்க்கு அவனது தாய் செம்பியன் மாதேவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். காரணம் கணவருக்கு வழங்கிய சத்தியம் மட்டுமின்றி இன.னொரு காரணமும் உள்ளது. அது, சுடுகாட்டிலிருந்து மீட்கப்பட்டு தன்மகனாக வளரும் மதுராந்தகன் உண்மையில் தன் மகனல்ல என்பதும், கோட்டைக்குள் பூ விற்கும் சேந்தன் அமுதன்தான் தன்னுடைய உண்மையான மகன் என்பதும் கணவரின் மரணத்துக்குப் பிறகு தெரியவந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மதுராந்தகனை வளர்த்து வருகிறார்.

        சுந்தர சோழருக்கு வயதாகிவிட மூத்த மகன் ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசனாகிறான். ஆனால் ஆதித்தனோ காஞ்சியில் தான் கட்டிய பொன்மாளிகைக்கு வந்துவிடுமாறு சுந்தரசோழரை அழைத்துவர தனது நண்பன் வந்தியத்தேவனை அனுப்புகிறான். ஆடிப்பெருக்கு தினத்தில் கிளம்பும் வந்தியத்தேவன் வழியில் கடம்பூர் அரண்மனையில் நடைபெறும் பெரிய பழுவேட்டரையர், கடம்பூர் சம்பூவரையர் உள்ளிட்ட சிற்றரசர்களின் சதியாலோசனையை அறிந்து சுந்தரசோழரிடம் தெரிவிக்கிறான். அங்கு வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் காதல் மலர்கிறது.
 இதற்கிடையே ஆதித்தனால் கொல்லப்பட்ட பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் ஆபத்துதவி(மெய்க்காவல்) படையினர் நந்தினியின் தலைமையில் ஆதித்தன், சுந்தரசோழர், அருண்மொழி ஆகியோரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகின்றனர்.
 
    இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த அருண்மொழியை குந்தவையின் தூதனாக சந்திக்கும் வந்தியத்தேவன் அரசியல் குழப்பங்களை தெரிவிக்கிறான். கொலை முயற்சியில் தப்பி நாடுதிரும்பும் அருண்மொழி வழியில் புயலில் சிக்கி நாகபட்டின சூடாமணி விகாரத்தில் தங்கி நிலவரம் அறிந்து தஞ்சை திரும்புகிறான்
 தஞ்சையில் சுந்தரசோழரை கொல்லும் முயற்சி ஊமைராணி மந்தாகினியின் உயிர்தியாகத்தால் முறியடிக்கப்படுகிறது.இந்த மந்தாகினிதான் சுந்தரசோழரின் இளம்வயது காதலி என்பதுடன், நந்தினியின் தாயும் ஆவாள்.
 
    கடம்பூர் அரண்மனையில் நடைபெறும் சூழ்ச்சியறிந்து அங்கு செல்லும் ஆதித்த கரிகாலன், கொல்லப்படுகிறான், வந்தியத்தேவனின் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்து கொலைப்பழியுடன் கைது செய்யப்படுகிறான். கொடும்பாளூர் பெரிய வேளாரின் தம்பி மகளும், தனது காதலியுமான வானதியுடன் யானைப் பாகன் வேடத்தில் தஞ்சை அரண்மனையில் நுழைகிறான். தன்னுடைய சதித்திட்டங்களின் சொதப்பலால் மனமுடைந்த நந்தினி பெரிய பழுவேட்டரையரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு குதிரையேறி நாட்டை விட்டு வெளியேறுகிறாள்

  சுந்தரசோழர் முன்னிலையில் நடைபெறும் ஆதித்த கரிகாலன் கொலை குறித்த விசாரணையில், அப்பாவியான வந்தியத்தேவனைக் காப்பாற்ற, கொலையை தான் செய்ததாகக் கூறி பெரிய பழுவேட்டரையர் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு மரணிக்கிறார். செம்பியன் மாதேவியின் மகனாக வளரும் மதுராந்தகன், கருத்திருமன் மூலம் தான் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் மகன் என்ற உண்மையறிந்து மனைவியுடன் வெளியேறி சோழ குலாந்தகப் பெருவழுதி என்ற பெயருடன் பாண்டியர் படையுடன் சேர்ந்து கொள்கிறான்.
 
    இதையறியாத சுந்தர சோழர், அருண்மொழி வர்மன், குந்தவை ஆகியோர் மதுராந்தகனை மன்னராக்க ஆலோசிக்கின்றனர். இதற்கு செம்பியன் மாதேவி மறுக்க, அங்கு வரும் மந்திரி அநிருத்தர் தனது ஒற்றன் ஆழ்வார்க்கடியான் திருமலை நம்பி உதவியுடன் சேந்தன் அமுதன்தான் செம்பியன் மாதேவியின் உண்மையான மகன் என நிருபிக்கிறார். சேந்தன் அமுதன் அரசபட்டத்தை மறுத்து தாய்-தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றவும், படகோட்டும் பூங்குழலியை மணக்கவும் விரும்புகிறான்.
 
     அனைவரின் சம்மதத்துடன் அருண்மொழி வர்மனை மன்னனாக முடிசூட்டும் நேரத்தில் அருண்மொழி வர்மன் வந்தியத்தேவனுடன் சேர்ந்து யாரும் எதிர்பாராத வண்ணம் சேந்தன் அமுதன் தலையில் அரசகிரீடம் அணிவித்து மதுராந்தக உத்தம சோழன் என்ற பெயர்வழங்கி மன்னனாக்குகிறான். ராணியாக வாழ்வதை லட்சியமாகக் கொண்டிருந்து பின்னர் சேந்தன் அமுதனை மணந்த பூங்குழலி தன்னுடைய லட்சியப்படி ராணியாகிறாள்

    முன்பு கடம்பூர் அரண்மனையில் தங்கியிருந்த போது வந்தியத்தேவன் மீது ஒருதலையாக காதல் கொண்டிருந்த கந்தமாறனின் தங்கை மணிமேகலைக்கு வந்தியத்தேவன் கொல்லப்பட்டதாக கிடைத்த வதந்தி காரணமாக மனம் பேதலித்து உடல் நலிகிறாள். செய்தியறிந்து வரும் வந்தியத்தேவனைக்கூட அடையாளம் தெரியாமல் உளறியவாறு மரணம் அடைகிறாள். கனத்த இதயத்துடன் வந்தியத்தேவன் அங்கிருந்து செல்வதுடன் பொன்னியின் செல்வன் நாவல் முடிவடையும். 

குறிப்பு
    குந்தவை-வந்தியத்தேவன் காதல், அருண்மொழி வர்மன்-வானதி காதல் யானைப்பாகனாக அருண்மொழி வர்மன்-வானதியுடன் தஞ்சை கோட்டைக்குள் நுழைதல் ஆகியவை நாவலில் மிகுந்த சுவைபட வடித்திருப்பார் அமரர் கல்கி.

    ஐந்து தொகுதிகளையும் பலமுறை வாசித்து இருந்தாலும் கடைசியாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தது, நினைவிலிருந்ததை பதிவிட்டுள்ளேன்.

    கர்நாடகாவின் வடக்கு பகுதியில் ஒரு சிறு நகரத்தில் வியாபாரம் செய்து வந்த எனது தந்தையாருக்கு கிடைத்த ஒரே பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது. ஆனால் அங்கு தமிழர்கள் அதிகம் இல்லாததால் தமிழ் புத்தகங்கள் கிடைப்பது அரிது, தினமணி நாளிதழ் பெங்களூர் பதிப்பு மட்டுமே ஒரு நாள் தாமதமாக கிடைக்கும் எனவே தேவையான புத்தகங்களை அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்வார். 
 
    அந்த வகையில் கல்கி இதழுக்கு சந்தா செலுத்தி வாங்குவது வழக்கம். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் சுமார் இரண்டரை ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. தொடரின் எந்த ஒரு அத்தியாயம் விடுபடாமல் அனைத்து புத்தகங்களையும் சேர்த்து வைத்திருந்து அவற்றிலிருந்து நாவலின் அத்தியாயங்களை மட்டும் பிரித்து ஐந்து பாகங்களையும் நேர்த்தியாக பைண்ட் செய்து ஊருக்கு கொண்டு வந்தார் எனது தந்தை. 
 
    ஆரம்பத்தில் முதல் அத்தியாயத்தின் ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து ஒதுக்கி வைத்து விட்டாலும் பின்னர் ஓய்வு நேரங்களில் அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன் ஒரு சில அத்தியாயங்கள் மட்டும் சற்று சோர்வடைய செய்தாலும் நாவலின் நேர்த்தியான ஓட்டம் மிகவும் என்னை கவர்ந்தது ஆறு மாத காலத்தில் நடந்த கதை நிகழ்வுகளை இரண்டரை ஆண்டுகள் வெளிவந்த நாவலில் சோர்வு ஏற்படாமல் வாசிக்கும்படி எழுதியது கல்கி அவர்களின்  எழுத்து. 
 
    கதை தொடர்புடைய முற்கால சம்பவங்களை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பார் குறிப்பாக வீராணம் ஏரி உருவானது, தக்கோல போர், திருபுறம்பியம் போர் ஆகியவற்றை இடையிடையே விவரித்து இருப்பார். பொன்னியின் செல்வன் என்று அருண்மொழிவர்மனை குறிப்பிட்டாலும் நாவலின் நாயகன் என்னவோ வந்தியத்தவன் தான். வந்தியத்தேவனின் குறும்பும் துணிச்சலும் கலந்த செயல்கள் வாசகர்களை நாவலில் கட்டிப்போட செய்யும். குந்தவையும் வானதியும் தங்களது எதிர்கால கணவர் குறித்த உரையாடலின் போது சரியான நேரத்தில் கூரையை பொத்துக் கொண்டு விழுவது போல் வரும் வந்திய தேவனின் செயல், வந்தியத்தேவன் குந்தவை காதல் உரையாடல்கள் வாசிப்போரை தாங்களே அக்கறை மாந்தர்களாக உணரும்படி இருக்கும். வந்தியத்தேவன் ஆழ்வார்கடியான் இருவருக்கும் இடையே ஏற்படக்கூடிய லடாய்கள் புன்னகை பூக்கும்  ஒவ்வொரு முறையும் வந்தியத்தேவன் பிரச்சனையில் சிக்குவதும் ஆழ்வார்கடியான் தீர்த்து வைப்பதும் மிகவும் ரசனைக்குரிய வை. 
 
    திரைப்படத்தில் மிகுந்த மொக்கையாக காண்பிக்கப்பட்ட வானதி கதாபாத்திரம் நாவலின் மிகச்சிறந்த கதாபாத்திரம் ஆகும். குறிப்பாக அருண்மொழிவர்மன் உடன் காதல் காட்சிகளும் தஞ்சை கோட்டையில் தனது பெரியப்பாவின் உத்தரவை மீறி சின்ன பழுவேட்டறையரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கெத்தாக பிரவேசிக்கும் காட்சி நாவல் வாசிப்பவர்கள் மனக்கண்ணில் படமாக ஓடும் என்பது நிச்சயம். 
     
    முதல் மந்திரி அனிருத்தர், சேந்தன் அமுதனை மதுராந்தக சோழன் என சுந்தர சோழரின் முன்னிலையில் அழைத்து வருவது மிகச் சிறந்த திருப்புமுனை. அதே போல் ஆதித்த கரிகாலன் எவ்வாறு கொல்லப்பட்டான்  நந்தினி என்னவானாள் என்பதை குறிப்பிடாமல் நாவலை முடித்து இருப்பது சிறந்த சஸ்பென்ஸ். இறுதியில் மணிமேகலையின் மரணம் வாசிப்பவர் மனதில் சோகத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம் முந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தது என்பதால் நினைவில் இருந்தவற்றை கொண்டு வாசிப்பு அனுபவத்தை நிறைவு செய்துள்ளேன் புத்தகம் அனைத்து பாகங்களும் இரவல் கொடுத்து தொலைந்து போய் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன  ஒரு மிகச்சிறந்த நாவலை இவ்வளவு மொக்கையாக திரைப்படமாக்கி இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் எழுதியது தான் இப்பதிவுகள்.
 
04.03.2023 அன்று முகநூலில் வாசிப்பை நேசிப்போம் குழுவில் நான் எழுதிய பதிவுகள் 
 
S.Shahul Hameed