திங்கள், 3 நவம்பர், 2025

IDAYAKOTTAI மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு










மதங்களின் பெயரால் பல கலவரங்கள், பல போராட்டங்கள் நடந்து வரும் இன்றைய சூழலில் தொப்புள் கொடி உறவுகளாக வாழ்ந்து இடையகோட்டை மக்கள் வியக்க வைக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை ஜமீன் மகாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு, இடையகோட்டை ஜமாத்தார்கள் வாத்தியங்கள், கொம்பு முழங்க, தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பழங்கள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை இடையகோட்டை ஜமீன்தார் சரவண எரதொம்ம நாயக்கர் தலைமையிலான விழா குழுவினரை சந்தித்து  குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

இடையகோட்டையில் ஜமீனுக்கு சொந்தமாக உள்ள மகா மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் உறவாலும் உணர்வாலும் இரண்டற கலந்துள்ள இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அதனை ஏற்று இடையகோட்டை ஜும்மா பள்ளிவாசல் தலைமை பராமரிப்பாராக திகழும் கமால் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.
 இது ஒவ்வொரு முறை திருவிழாவின் போது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி ஜமீன் குடும்பத்தில் நடைபெறக்கூடிய தனிப்பட்ட நிகழ்வுகளான திருமணம், குழந்தை பெயர் சூட்டுதல் போன்ற நிகழ்வுகளுக்கும் கமால் வகையறாவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, சீர்வரிசையுடன் கலந்து கொள்வது வழக்கம்.

மேலும் புதிய ஜமீன்தார் பட்டம் சூட்டும் நிகழ்வில் மிகச் சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், அதிலும் கமால் வகையறாவினர் (போர் கருவிகள் உள்ளிட்ட)  ஜமீன் சின்னங்களை ஏந்தி கலந்து கொள்ள  புதிய ஜமீன் பதவி ஏற்றுக்கொள்வார்.
 
(சுமார் 20ஆண்டுகளுக்கு முன் இப்போதைய ஜமீன்தார் சரவணன் அவர்கள் பதவியேற்பு விழாவில் கமால் அப்துல் காதர் அவர்கள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது )

அதுபோலவே இடையகோட்டை முகைதீன் ஆண்டவர் உரூஸ் விழாவிலும் கொடியேற்றம் முதல் அனைத்து நிகழ்வுகளிலும் ஜமீன்தார் சார்பாக அவரது பிரதிநிதிகள் கலந்து கொள்வது வழக்கம். குறிப்பாக தர்காவின் அசா எனப்படும் செங்கோல் ஏந்தி வரும் பொறுப்பு ஜமீன் பரம்பரை மெய்க்காவலர்களுடையதாகும். 

உரூஸ் விழா ஊர்வலங்கள் அரண்மனை வரை சென்று திரும்புவதும், வாசனை மாலை சந்தனக்கூடு ஆகியவை அங்கு அதிக நேரம் நிறுத்தப்பட்டு ஜமீன் குடும்பத்தினரால் சிறப்பு செய்யப்பட்டு அனுப்பப்படுவதும் இன்று வரை தொடர்கிறது.

ஜமீன் குடும்பத்திற்கு சொந்தமான
பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பு இன்று நடைபெறுகிறது. இந்த விழாவிலும் இடையகோட்டை ஜமாஅத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நாங்கள் சென்று விழாவினை சிறப்பித்து வந்தோம்.
 
 வழக்கம்போல் கமால் வகையறாவை சார்ந்த குலாம்மைதீன், ஜாபர் சாதிக் ஆகியோருடன் சீர்வரிசை தட்டுகள் ஏந்திவர, தொழில் அதிபர் S.அக்பர் சாதிக்,  கூட்டுறவு வங்கி முன்னாள் செயலாளர் M.முகமது இஸ்மாயில், S.அப்துல் கபூர்,  K. V. E. S. அப்துல் காதர் & ஷாகுல் ஹமீது, Y. A. M. ஷாகுல் ஹமீது, A. H சாகுல் ஹமீது, A.ராஜா மைதீன், S.ஷாஜகான் உள்ளிட்ட ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 














சுமார் ஐந்து நூற்றாண்டு வரலாறு கொண்ட இடையகோட்டையில் உள்ள மகா மாரியம்மன் திருக்கோவில், இ. புதூர் காளியம்மன் கோவில் மற்றும் முஹைதீன் ஆண்டவர் தர்கா ஆகியவை காலம் காலமாக இப்பகுதியில்  நல்லிணக்கத்தின் மையப் புள்ளிகளாக திகழ்ந்து  வருகின்றன என்பது நெகிழ்வூட்டும் உண்மை.

S.Shahul Hameed





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக