செவ்வாய், 18 நவம்பர், 2025

IDAYAKOTTAI - நன்றி ❤️ நன்றி❤️


 ஒரு பழமை வாய்ந்த சின்னஞ்சிறிய கிராமத்தை இணைய வழியாக உலகெங்கும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் சொல்லப்போனால் பேராசையில் விளைந்தது இடையகோட்டை வலைப்பூ.

 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வலைப்பூவினை பல்வேறு தடைகளையும், சிரமங்களையும் கடந்து நடத்தி வருகிறோம். இதுவரை 121 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பதிவுகளுடன் ஊர் வரலாறு, செய்திகள் என இரு தனித்தனி பக்கங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
 இந்த இடையகோட்டை வலைப்பூவுக்கு இன்று ஒரு மகத்தான நாள் 50 ஆயிரம் பார்வைகளைத் தாண்டி (50087 views) மக்களை சென்றடைந்துள்ளது. 


 



இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் இடையகோட்டை ஊர் வரலாறு பக்கம் 2300 பார்வைகளை கடந்து முதல் இடத்திலும்,   இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அமரர் திரு. விஸ்வநாதன் அவர்கள் குறித்த பதிவு1670 பார்வைகள்,  ஆசிரியர் ராஜேந்திரன் அவர்கள் குறித்த பதிவு 1180 பார்வைகள் என வாசிப்புப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதை பார்க்கும்போது நமது ஊர் மக்கள் கல்வியில் மீதும், ஆசிரியர்களிடம் கொண்டுள்ள பற்று வியக்க வைக்கிறது.

 
 


 நாடு கடந்து, கண்டம் விட்டு கண்டம் கடந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் நமது ஊர்க்காரர்கள் உள்ளனர் என்பதும், அவர்கள் நமது ஊர் குறித்த செய்திகளை அறிவதில் ஆர்வமாக உள்ளார்கள் என்பதும் பெருமகிழ்ச்சி அடையச் செய்கிறது.
 
 சிசேல் தீவுகள், பிரிட்டிஷ் கயானா, ருமேனியா, சுவிட்சர்லந்து ஆகிய நாடுகளிலிருந்தும் கூட இடையகோட்டை குறித்த பதிவுகளை இணைய உலகில் வாசிக்கின்றனர் என்பது ஆச்சரியம்.

 நான்  முன்னர் ஒரு பதிவில் கூறியுள்ளது போல் சுமார் 5000 பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய கிராமம் குறித்த இணைய தேடல் ஐம்பதாயிரம் பார்வையை கடந்துள்ளது என்பது வியப்பூட்டும் நிதர்சனம். பிறந்த ஊரை உலகெங்கும் பிரபலப்படுத்தும் இந்த முயற்சிக்கு இந்த அளவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 

 




தொடக்கத்தில் இத்தகைய ஆர்வத்தை எனக்கு ஊட்டிய பணி நிறைவு பெற்ற  நெடுஞ்சாலைத்துறை ஊழியர் திரு.முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கும், என் முயற்சிக்கு பெரிதும் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு நல்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இடையகோட்டை ஜமீன்தார் அமரர் ராவ்பகதூர் கே. எஸ். லட்சுமிபதி நாயக்கர் குடும்பத்தினருக்கும், உடல் இங்கே உள்ளம் அங்கே என இடையகோட்டையை எந்த நேரமும் இதயத்தில் சுமக்கும்   இடையகோட்டை வரலாற்று தொகுப்பு மையம் (பூவிருந்தவல்லி) நல்லாசிரியர் ஹாஜா சரிப் & சௌகத் அலி ஆகியோருக்கும், தொடர்ந்து வலைப்பபூவை வாசித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருப்போம்.

--அன்புடன்,

அட்மின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக