செவ்வாய், 18 நவம்பர், 2025

IDAYAKOTTAI - நன்றி ❤️ நன்றி❤️


 ஒரு பழமை வாய்ந்த சின்னஞ்சிறிய கிராமத்தை இணைய வழியாக உலகெங்கும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் சொல்லப்போனால் பேராசையில் விளைந்தது இடையகோட்டை வலைப்பூ.

 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வலைப்பூவினை பல்வேறு தடைகளையும், சிரமங்களையும் கடந்து நடத்தி வருகிறோம். இதுவரை 121 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பதிவுகளுடன் ஊர் வரலாறு, செய்திகள் என இரு தனித்தனி பக்கங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
 இந்த இடையகோட்டை வலைப்பூவுக்கு இன்று ஒரு மகத்தான நாள் 50 ஆயிரம் பார்வைகளைத் தாண்டி (50087 views) மக்களை சென்றடைந்துள்ளது. 


 



இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் இடையகோட்டை ஊர் வரலாறு பக்கம் 2300 பார்வைகளை கடந்து முதல் இடத்திலும்,   இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அமரர் திரு. விஸ்வநாதன் அவர்கள் குறித்த பதிவு1670 பார்வைகள்,  ஆசிரியர் ராஜேந்திரன் அவர்கள் குறித்த பதிவு 1180 பார்வைகள் என வாசிப்புப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதை பார்க்கும்போது நமது ஊர் மக்கள் கல்வியில் மீதும், ஆசிரியர்களிடம் கொண்டுள்ள பற்று வியக்க வைக்கிறது.

 
 


 நாடு கடந்து, கண்டம் விட்டு கண்டம் கடந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் நமது ஊர்க்காரர்கள் உள்ளனர் என்பதும், அவர்கள் நமது ஊர் குறித்த செய்திகளை அறிவதில் ஆர்வமாக உள்ளார்கள் என்பதும் பெருமகிழ்ச்சி அடையச் செய்கிறது.
 
 சிசேல் தீவுகள், பிரிட்டிஷ் கயானா, ருமேனியா, சுவிட்சர்லந்து ஆகிய நாடுகளிலிருந்தும் கூட இடையகோட்டை குறித்த பதிவுகளை இணைய உலகில் வாசிக்கின்றனர் என்பது ஆச்சரியம்.

 நான்  முன்னர் ஒரு பதிவில் கூறியுள்ளது போல் சுமார் 5000 பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய கிராமம் குறித்த இணைய தேடல் ஐம்பதாயிரம் பார்வையை கடந்துள்ளது என்பது வியப்பூட்டும் நிதர்சனம். பிறந்த ஊரை உலகெங்கும் பிரபலப்படுத்தும் இந்த முயற்சிக்கு இந்த அளவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 

 




தொடக்கத்தில் இத்தகைய ஆர்வத்தை எனக்கு ஊட்டிய பணி நிறைவு பெற்ற  நெடுஞ்சாலைத்துறை ஊழியர் திரு.முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கும், என் முயற்சிக்கு பெரிதும் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு நல்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இடையகோட்டை ஜமீன்தார் அமரர் ராவ்பகதூர் கே. எஸ். லட்சுமிபதி நாயக்கர் குடும்பத்தினருக்கும், உடல் இங்கே உள்ளம் அங்கே என இடையகோட்டையை எந்த நேரமும் இதயத்தில் சுமக்கும்   இடையகோட்டை வரலாற்று தொகுப்பு மையம் (பூவிருந்தவல்லி) நல்லாசிரியர் ஹாஜா சரிப் & சௌகத் அலி ஆகியோருக்கும், தொடர்ந்து வலைப்பபூவை வாசித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருப்போம்.

--அன்புடன்,

அட்மின்.

திங்கள், 3 நவம்பர், 2025

IDAYAKOTTAI மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு










மதங்களின் பெயரால் பல கலவரங்கள், பல போராட்டங்கள் நடந்து வரும் இன்றைய சூழலில் தொப்புள் கொடி உறவுகளாக வாழ்ந்து இடையகோட்டை மக்கள் வியக்க வைக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை ஜமீன் மகாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு, இடையகோட்டை ஜமாத்தார்கள் வாத்தியங்கள், கொம்பு முழங்க, தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பழங்கள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை இடையகோட்டை ஜமீன்தார் சரவண எரதொம்ம நாயக்கர் தலைமையிலான விழா குழுவினரை சந்தித்து  குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

இடையகோட்டையில் ஜமீனுக்கு சொந்தமாக உள்ள மகா மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் உறவாலும் உணர்வாலும் இரண்டற கலந்துள்ள இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அதனை ஏற்று இடையகோட்டை ஜும்மா பள்ளிவாசல் தலைமை பராமரிப்பாராக திகழும் கமால் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.
 இது ஒவ்வொரு முறை திருவிழாவின் போது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி ஜமீன் குடும்பத்தில் நடைபெறக்கூடிய தனிப்பட்ட நிகழ்வுகளான திருமணம், குழந்தை பெயர் சூட்டுதல் போன்ற நிகழ்வுகளுக்கும் கமால் வகையறாவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, சீர்வரிசையுடன் கலந்து கொள்வது வழக்கம்.

மேலும் புதிய ஜமீன்தார் பட்டம் சூட்டும் நிகழ்வில் மிகச் சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், அதிலும் கமால் வகையறாவினர் (போர் கருவிகள் உள்ளிட்ட)  ஜமீன் சின்னங்களை ஏந்தி கலந்து கொள்ள  புதிய ஜமீன் பதவி ஏற்றுக்கொள்வார்.
 
(சுமார் 20ஆண்டுகளுக்கு முன் இப்போதைய ஜமீன்தார் சரவணன் அவர்கள் பதவியேற்பு விழாவில் கமால் அப்துல் காதர் அவர்கள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது )

அதுபோலவே இடையகோட்டை முகைதீன் ஆண்டவர் உரூஸ் விழாவிலும் கொடியேற்றம் முதல் அனைத்து நிகழ்வுகளிலும் ஜமீன்தார் சார்பாக அவரது பிரதிநிதிகள் கலந்து கொள்வது வழக்கம். குறிப்பாக தர்காவின் அசா எனப்படும் செங்கோல் ஏந்தி வரும் பொறுப்பு ஜமீன் பரம்பரை மெய்க்காவலர்களுடையதாகும். 

உரூஸ் விழா ஊர்வலங்கள் அரண்மனை வரை சென்று திரும்புவதும், வாசனை மாலை சந்தனக்கூடு ஆகியவை அங்கு அதிக நேரம் நிறுத்தப்பட்டு ஜமீன் குடும்பத்தினரால் சிறப்பு செய்யப்பட்டு அனுப்பப்படுவதும் இன்று வரை தொடர்கிறது.

ஜமீன் குடும்பத்திற்கு சொந்தமான
பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பு இன்று நடைபெறுகிறது. இந்த விழாவிலும் இடையகோட்டை ஜமாஅத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நாங்கள் சென்று விழாவினை சிறப்பித்து வந்தோம்.
 
 வழக்கம்போல் கமால் வகையறாவை சார்ந்த குலாம்மைதீன், ஜாபர் சாதிக் ஆகியோருடன் சீர்வரிசை தட்டுகள் ஏந்திவர, தொழில் அதிபர் S.அக்பர் சாதிக்,  கூட்டுறவு வங்கி முன்னாள் செயலாளர் M.முகமது இஸ்மாயில், S.அப்துல் கபூர்,  K. V. E. S. அப்துல் காதர் & ஷாகுல் ஹமீது, Y. A. M. ஷாகுல் ஹமீது, A. H சாகுல் ஹமீது, A.ராஜா மைதீன், S.ஷாஜகான் உள்ளிட்ட ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 














சுமார் ஐந்து நூற்றாண்டு வரலாறு கொண்ட இடையகோட்டையில் உள்ள மகா மாரியம்மன் திருக்கோவில், இ. புதூர் காளியம்மன் கோவில் மற்றும் முஹைதீன் ஆண்டவர் தர்கா ஆகியவை காலம் காலமாக இப்பகுதியில்  நல்லிணக்கத்தின் மையப் புள்ளிகளாக திகழ்ந்து  வருகின்றன என்பது நெகிழ்வூட்டும் உண்மை.

S.Shahul Hameed





செவ்வாய், 14 அக்டோபர், 2025

கண்ணீர் அஞ்சலி



 



சுமார் 30, 35 வயது கொண்ட  இளைஞரின் எண்ணம், லட்சியம் என்னவாக இருக்கும்?

 கை நிறைய சம்பாத்தியம், கலர்ஃபுல்லான & ஸ்டைலிஷ் ஆன வாழ்க்கை இவை தானே இன்றைய இளைஞர்கள் லட்சியம்.
 ஆனால்  இன்றைக்கு  60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞர் கனவு கண்டார், தனது தனது ஊர் சிறுவர்களின் எதிர்காலத்தை சிறப்படையச் செய்ய எண்ணினார், தன்னைப் போலவே ஒத்த எண்ணமும், பெயரும் கொண்ட இளைஞருடன் இணைந்து, இருவரும் தங்களது விளை நிலத்தை (இன்றைய நிலவரத்தில் பல கோடி பெறும்) கல்விக்காக கொடையாக அளித்தனர். 

விளைவு, பொருளாதாரத்திலும், விவசாயத்திலும் மிகவும் பின்தங்கிய பகுதியான முத்துநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உருவானது. 

மருத்துவர்கள், ஆசிரியர்கள்,  அரசு உயர் அதிகாரிகள்,  விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பல்துறை வித்தகர்கள் இப்பள்ளியிலிருந்து உருவானார்கள். ஆயிரக்கணக்கான ஏழை- எளிய, நடுத்தர மாணவர்களுக்கு கல்வித்தாகம் தணிக்கும் ஞான ஊற்றாக  கல்விக் கருவறையாக இன்றும் திகழ்கிறது முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.

பள்ளி உருவான நாள் முதல் பெற்றோர் ஆசிரியர்  கழகத் தலைவராக இருந்து உயர்நிலைப் பள்ளியை  ஒவ்வொரு கட்டத்திலும் மேம்படுத்தி, மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தி கல்விச் சேவை புரிந்ததுடன், ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடை நடத்தி கடைக்காரர் என மக்களால் அழைக்கப்பட்டு, நூற்றாண்டு கண்ட ஐயா காளியப்பக் கவுண்டர் அவர்கள் நேற்று (14.10.2025) காலமானார்.

அவரைப் போல் நம்மால் இயன்ற அளவு அறப்பணிகளில் ஈடுபடுவதே அன்னாருக்குச் செலுத்தப்படும் உண்மையான நினைவஞ்சலியாகும்.

 அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது இடையகோட்டை வலைப்பூ.

சை. ஷாகுல் ஹமீது

வியாழன், 25 செப்டம்பர், 2025

பொன்னியின் செல்வன்

    கொஞ்சம் நீண்ட பதிவுதான், நேரமும் பொறுமையும் இருப்பின் வாசிக்கலாம்.
    சோழ மன்னர் கண்டராதித்தருக்கு வாரிசு இல்லாததால் தனக்குப் பிறகு தனது தம்பிக்கு சோழ நாட்டின் அரியணையை வழங்குகிறார். ஆனால் தனது மனைவிக்குப் பிறந்த குழந்தை அசைவின்றி இருந்ததால் இறந்து விட்டதாகக் கருதி புதைக்க உத்தரவிடப்பட்ட குழந்தை உயிருடன் இருக்கும் தகவலறிந்து, அந்த குழந்தைக்கு மதுராந்தகன் எனப்பெயரிட்டு வளர்க்கிறார். தனது மரணத் தருவாயில் மனைவி செம்பியன் மாதேவியிடம், மதுராந்தகனை ஒரு போதும் அரசனாக்கக் கூடாது, தம்பியும் அவனது வாரிசுகளுக்கும் மட்டுமே அரசபட்டம் சூட்டவேண்டும் என சத்தியம் வாங்குகிறார். செம்பியன் மாதேவியும் தனது சத்தியத்தை காப்பாற்றி வருகிறார். 
 
    கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயருக்குப்பின் அரிஞ்சயரின் மகன் சுந்தரசோழர் பட்டமேற்கிறார். அவருக்கு ஆதித்த கரிகாலன், குந்தவை, அருண்மொழி வர்மன் என மூன்று குழந்தைகள், இவர்களின் குழந்தைப்பருவத்தில் காவிரி ஆற்றில் குடும்பத்துடன் படகில் செல்லும் போது ஆற்றில் தவறி விழுந்த அருண்மொழி வர்மனை ஒரு பெண் காப்பாற்றி படகில் சேர்த்துவிட்டு மறைகிறாள். காவிரித்தாயே காப்பாற்றியதாகக் கருதி பொன்னியின் செல்வன் என அழைக்கப்படுகிறான்.

     சோழ நாட்டு கோட்டைக்காவலரான சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணக்கும் மதுராந்தகன், பெரிய மாமனார் பெரிய பழுவேட்டரையர், கடம்பூர் சம்பூவரையர் உள்ளிட்ட சிற்றரசர்களின் துணையுடன் சோழ அரசின் மன்னராகத்துடிக்கிறான். இதற்க்கு அவனது தாய் செம்பியன் மாதேவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். காரணம் கணவருக்கு வழங்கிய சத்தியம் மட்டுமின்றி இன.னொரு காரணமும் உள்ளது. அது, சுடுகாட்டிலிருந்து மீட்கப்பட்டு தன்மகனாக வளரும் மதுராந்தகன் உண்மையில் தன் மகனல்ல என்பதும், கோட்டைக்குள் பூ விற்கும் சேந்தன் அமுதன்தான் தன்னுடைய உண்மையான மகன் என்பதும் கணவரின் மரணத்துக்குப் பிறகு தெரியவந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மதுராந்தகனை வளர்த்து வருகிறார்.

        சுந்தர சோழருக்கு வயதாகிவிட மூத்த மகன் ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசனாகிறான். ஆனால் ஆதித்தனோ காஞ்சியில் தான் கட்டிய பொன்மாளிகைக்கு வந்துவிடுமாறு சுந்தரசோழரை அழைத்துவர தனது நண்பன் வந்தியத்தேவனை அனுப்புகிறான். ஆடிப்பெருக்கு தினத்தில் கிளம்பும் வந்தியத்தேவன் வழியில் கடம்பூர் அரண்மனையில் நடைபெறும் பெரிய பழுவேட்டரையர், கடம்பூர் சம்பூவரையர் உள்ளிட்ட சிற்றரசர்களின் சதியாலோசனையை அறிந்து சுந்தரசோழரிடம் தெரிவிக்கிறான். அங்கு வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் காதல் மலர்கிறது.
 இதற்கிடையே ஆதித்தனால் கொல்லப்பட்ட பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் ஆபத்துதவி(மெய்க்காவல்) படையினர் நந்தினியின் தலைமையில் ஆதித்தன், சுந்தரசோழர், அருண்மொழி ஆகியோரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகின்றனர்.
 
    இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த அருண்மொழியை குந்தவையின் தூதனாக சந்திக்கும் வந்தியத்தேவன் அரசியல் குழப்பங்களை தெரிவிக்கிறான். கொலை முயற்சியில் தப்பி நாடுதிரும்பும் அருண்மொழி வழியில் புயலில் சிக்கி நாகபட்டின சூடாமணி விகாரத்தில் தங்கி நிலவரம் அறிந்து தஞ்சை திரும்புகிறான்
 தஞ்சையில் சுந்தரசோழரை கொல்லும் முயற்சி ஊமைராணி மந்தாகினியின் உயிர்தியாகத்தால் முறியடிக்கப்படுகிறது.இந்த மந்தாகினிதான் சுந்தரசோழரின் இளம்வயது காதலி என்பதுடன், நந்தினியின் தாயும் ஆவாள்.
 
    கடம்பூர் அரண்மனையில் நடைபெறும் சூழ்ச்சியறிந்து அங்கு செல்லும் ஆதித்த கரிகாலன், கொல்லப்படுகிறான், வந்தியத்தேவனின் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்து கொலைப்பழியுடன் கைது செய்யப்படுகிறான். கொடும்பாளூர் பெரிய வேளாரின் தம்பி மகளும், தனது காதலியுமான வானதியுடன் யானைப் பாகன் வேடத்தில் தஞ்சை அரண்மனையில் நுழைகிறான். தன்னுடைய சதித்திட்டங்களின் சொதப்பலால் மனமுடைந்த நந்தினி பெரிய பழுவேட்டரையரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு குதிரையேறி நாட்டை விட்டு வெளியேறுகிறாள்

  சுந்தரசோழர் முன்னிலையில் நடைபெறும் ஆதித்த கரிகாலன் கொலை குறித்த விசாரணையில், அப்பாவியான வந்தியத்தேவனைக் காப்பாற்ற, கொலையை தான் செய்ததாகக் கூறி பெரிய பழுவேட்டரையர் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு மரணிக்கிறார். செம்பியன் மாதேவியின் மகனாக வளரும் மதுராந்தகன், கருத்திருமன் மூலம் தான் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் மகன் என்ற உண்மையறிந்து மனைவியுடன் வெளியேறி சோழ குலாந்தகப் பெருவழுதி என்ற பெயருடன் பாண்டியர் படையுடன் சேர்ந்து கொள்கிறான்.
 
    இதையறியாத சுந்தர சோழர், அருண்மொழி வர்மன், குந்தவை ஆகியோர் மதுராந்தகனை மன்னராக்க ஆலோசிக்கின்றனர். இதற்கு செம்பியன் மாதேவி மறுக்க, அங்கு வரும் மந்திரி அநிருத்தர் தனது ஒற்றன் ஆழ்வார்க்கடியான் திருமலை நம்பி உதவியுடன் சேந்தன் அமுதன்தான் செம்பியன் மாதேவியின் உண்மையான மகன் என நிருபிக்கிறார். சேந்தன் அமுதன் அரசபட்டத்தை மறுத்து தாய்-தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றவும், படகோட்டும் பூங்குழலியை மணக்கவும் விரும்புகிறான்.
 
     அனைவரின் சம்மதத்துடன் அருண்மொழி வர்மனை மன்னனாக முடிசூட்டும் நேரத்தில் அருண்மொழி வர்மன் வந்தியத்தேவனுடன் சேர்ந்து யாரும் எதிர்பாராத வண்ணம் சேந்தன் அமுதன் தலையில் அரசகிரீடம் அணிவித்து மதுராந்தக உத்தம சோழன் என்ற பெயர்வழங்கி மன்னனாக்குகிறான். ராணியாக வாழ்வதை லட்சியமாகக் கொண்டிருந்து பின்னர் சேந்தன் அமுதனை மணந்த பூங்குழலி தன்னுடைய லட்சியப்படி ராணியாகிறாள்

    முன்பு கடம்பூர் அரண்மனையில் தங்கியிருந்த போது வந்தியத்தேவன் மீது ஒருதலையாக காதல் கொண்டிருந்த கந்தமாறனின் தங்கை மணிமேகலைக்கு வந்தியத்தேவன் கொல்லப்பட்டதாக கிடைத்த வதந்தி காரணமாக மனம் பேதலித்து உடல் நலிகிறாள். செய்தியறிந்து வரும் வந்தியத்தேவனைக்கூட அடையாளம் தெரியாமல் உளறியவாறு மரணம் அடைகிறாள். கனத்த இதயத்துடன் வந்தியத்தேவன் அங்கிருந்து செல்வதுடன் பொன்னியின் செல்வன் நாவல் முடிவடையும். 

குறிப்பு
    குந்தவை-வந்தியத்தேவன் காதல், அருண்மொழி வர்மன்-வானதி காதல் யானைப்பாகனாக அருண்மொழி வர்மன்-வானதியுடன் தஞ்சை கோட்டைக்குள் நுழைதல் ஆகியவை நாவலில் மிகுந்த சுவைபட வடித்திருப்பார் அமரர் கல்கி.

    ஐந்து தொகுதிகளையும் பலமுறை வாசித்து இருந்தாலும் கடைசியாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தது, நினைவிலிருந்ததை பதிவிட்டுள்ளேன்.

    கர்நாடகாவின் வடக்கு பகுதியில் ஒரு சிறு நகரத்தில் வியாபாரம் செய்து வந்த எனது தந்தையாருக்கு கிடைத்த ஒரே பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது. ஆனால் அங்கு தமிழர்கள் அதிகம் இல்லாததால் தமிழ் புத்தகங்கள் கிடைப்பது அரிது, தினமணி நாளிதழ் பெங்களூர் பதிப்பு மட்டுமே ஒரு நாள் தாமதமாக கிடைக்கும் எனவே தேவையான புத்தகங்களை அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்வார். 
 
    அந்த வகையில் கல்கி இதழுக்கு சந்தா செலுத்தி வாங்குவது வழக்கம். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் சுமார் இரண்டரை ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. தொடரின் எந்த ஒரு அத்தியாயம் விடுபடாமல் அனைத்து புத்தகங்களையும் சேர்த்து வைத்திருந்து அவற்றிலிருந்து நாவலின் அத்தியாயங்களை மட்டும் பிரித்து ஐந்து பாகங்களையும் நேர்த்தியாக பைண்ட் செய்து ஊருக்கு கொண்டு வந்தார் எனது தந்தை. 
 
    ஆரம்பத்தில் முதல் அத்தியாயத்தின் ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து ஒதுக்கி வைத்து விட்டாலும் பின்னர் ஓய்வு நேரங்களில் அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன் ஒரு சில அத்தியாயங்கள் மட்டும் சற்று சோர்வடைய செய்தாலும் நாவலின் நேர்த்தியான ஓட்டம் மிகவும் என்னை கவர்ந்தது ஆறு மாத காலத்தில் நடந்த கதை நிகழ்வுகளை இரண்டரை ஆண்டுகள் வெளிவந்த நாவலில் சோர்வு ஏற்படாமல் வாசிக்கும்படி எழுதியது கல்கி அவர்களின்  எழுத்து. 
 
    கதை தொடர்புடைய முற்கால சம்பவங்களை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பார் குறிப்பாக வீராணம் ஏரி உருவானது, தக்கோல போர், திருபுறம்பியம் போர் ஆகியவற்றை இடையிடையே விவரித்து இருப்பார். பொன்னியின் செல்வன் என்று அருண்மொழிவர்மனை குறிப்பிட்டாலும் நாவலின் நாயகன் என்னவோ வந்தியத்தவன் தான். வந்தியத்தேவனின் குறும்பும் துணிச்சலும் கலந்த செயல்கள் வாசகர்களை நாவலில் கட்டிப்போட செய்யும். குந்தவையும் வானதியும் தங்களது எதிர்கால கணவர் குறித்த உரையாடலின் போது சரியான நேரத்தில் கூரையை பொத்துக் கொண்டு விழுவது போல் வரும் வந்திய தேவனின் செயல், வந்தியத்தேவன் குந்தவை காதல் உரையாடல்கள் வாசிப்போரை தாங்களே அக்கறை மாந்தர்களாக உணரும்படி இருக்கும். வந்தியத்தேவன் ஆழ்வார்கடியான் இருவருக்கும் இடையே ஏற்படக்கூடிய லடாய்கள் புன்னகை பூக்கும்  ஒவ்வொரு முறையும் வந்தியத்தேவன் பிரச்சனையில் சிக்குவதும் ஆழ்வார்கடியான் தீர்த்து வைப்பதும் மிகவும் ரசனைக்குரிய வை. 
 
    திரைப்படத்தில் மிகுந்த மொக்கையாக காண்பிக்கப்பட்ட வானதி கதாபாத்திரம் நாவலின் மிகச்சிறந்த கதாபாத்திரம் ஆகும். குறிப்பாக அருண்மொழிவர்மன் உடன் காதல் காட்சிகளும் தஞ்சை கோட்டையில் தனது பெரியப்பாவின் உத்தரவை மீறி சின்ன பழுவேட்டறையரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கெத்தாக பிரவேசிக்கும் காட்சி நாவல் வாசிப்பவர்கள் மனக்கண்ணில் படமாக ஓடும் என்பது நிச்சயம். 
     
    முதல் மந்திரி அனிருத்தர், சேந்தன் அமுதனை மதுராந்தக சோழன் என சுந்தர சோழரின் முன்னிலையில் அழைத்து வருவது மிகச் சிறந்த திருப்புமுனை. அதே போல் ஆதித்த கரிகாலன் எவ்வாறு கொல்லப்பட்டான்  நந்தினி என்னவானாள் என்பதை குறிப்பிடாமல் நாவலை முடித்து இருப்பது சிறந்த சஸ்பென்ஸ். இறுதியில் மணிமேகலையின் மரணம் வாசிப்பவர் மனதில் சோகத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம் முந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தது என்பதால் நினைவில் இருந்தவற்றை கொண்டு வாசிப்பு அனுபவத்தை நிறைவு செய்துள்ளேன் புத்தகம் அனைத்து பாகங்களும் இரவல் கொடுத்து தொலைந்து போய் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன  ஒரு மிகச்சிறந்த நாவலை இவ்வளவு மொக்கையாக திரைப்படமாக்கி இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் எழுதியது தான் இப்பதிவுகள்.
 
04.03.2023 அன்று முகநூலில் வாசிப்பை நேசிப்போம் குழுவில் நான் எழுதிய பதிவுகள் 
 
S.Shahul Hameed

சனி, 24 மே, 2025

IDAYAKOTTAI அனைவருக்கும் நன்றி

 15 ஆண்டுகள்

117  பதிவுகள்
 
45753 பார்வைகள் ( 24.05.2025  காலை 9.00 மணிக்கு) 
 
2010 ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்டது நமது இடையகோட்டை வலைப்பூ🌺
 பதினாறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது வலைப்பக்கத்தில்
இடையகோட்டை குறித்த வரலாற்று குறிப்புகள், இடையகோட்டையின் சான்றோர் பெருமக்கள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை இணைய வழி மூலம் உலகெங்கும் எடுத்துச் செல்ல மேற்கொண்ட முயற்சி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை பிளாக்கர் புள்ளிவிவரம் மூலம் அறிய முடிகிறது ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா என நான்கு கண்டங்களில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது பணிச்சுமை உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் பதிவுகளுக்கான ஆதாரங்கள் திரட்டுவதிலும், பதிவுகள் எழுதுவதிலும் சற்று தோய்வு ஏற்பட்டுள்ளது வாஸ்தவம் தான். 

இனி வரும் காலங்களில் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் பதிவுகள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் சேகரிக்கும் முயற்சி நடைபெறுகிறது. இந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து நமது வலைப்பூவை வாசித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 🎉🎉🎉🎉

ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளது போல் நீங்களும் இடையகோட்டை சார்ந்த தகவல்கள், ஆவணங்கள், நிழற்படங்கள் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் மூலமாக அல்லது whatsapp மூலமாக அனுப்பும் பட்சத்தில் அனுப்புபவரது படம் மற்றும் பெயருடன் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

🌹🌹🌹🌹வாருங்கள் நமது ஊரை உலகறிய செய்வோம். 
👍👍👍
 
அனைவருக்கும் நன்றி.      




வியாழன், 8 மே, 2025

IDAYAKOTTAI சுசீலா டீச்சர்

 "மிகவும் கண்டிப்பான, மிகுந்த அக்கறையுள்ள, பாசமானவர்" இப்படித்தான் கூற வேண்டும் எனது முதல் வகுப்பு (ஒண்ணாப்பு டீச்சர்) ஆசிரியர் திருமதி சுசிலா பாய் அவர்களை பற்றி.


வீட்டுக்கு எதிரிலேயே பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தை ஒட்டிய சந்திலேயே அங்கிருந்து பார்த்தால் எங்களது வீடு தெரியும் என்ற அளவில் அவரது வீடு.
 ஏதேனும் சேட்டை செய்தால் டீச்சர்ட்ட சொல்லிடுவேன் என்பது எனது தாயாரின் குறைந்தபட்ச மிரட்டல்.


டீச்சர்ர்ர்... அம்மா சற்று உரத்து அழைக்க, என்ன கஜ்ஜாம்மான்னு ஒரு டெரர் ரிப்ளையில் நானும், அண்ணன்களும் இருக்குமிடம் தெரியாமல் அடங்கிவிடுவோம்.
 ஆசிரியர் என்பதை தாண்டி எனது தாயாரின் மிகச்சிறந்த தோழியும் அவரே; எனவே டீச்சர் அடிச்சுட்டாங்ன்னு அம்மாவிடம் சொல்ல முடியாது. கஜ்ஜாம்மா (கதீஜா பீவி என்பது பேச்சு வழக்கில் கஜ்ஜாம்மா எனவும் வயதில் இளையவர்கள் கஜ்ஜாக்கா எனவும் அழைப்பர்) "உன் பையன் ஷாகுல் வீட்டுப்பாடம் எழுதாம வந்து எங்கிட்ட அடிவாங்கினான்"னு சாயந்தரம் வீட்ல வந்து சொல்லிடுவாங்க. அப்புறம் என்ன Punishment 2.0  வீட்ல சிறப்பா நடக்கும். அந்த பள்ளியில் வெள்ளி, சனி் வார விடுமுறை.
மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, ஒருதடவை விடுமுறை நாட்களில் வீட்டுப்பாடம் எழுதிவரச்சொல்லியிருக்க நானோ எழுதாமல் சென்று விட்டேன்.
வகுப்பில் நுழைந்ததும் வீட்டுப்பாடம் எழுதாத எனக்கு மாலை வரை அவகாசம் நீட்டிப்பு செய்தும் (அவருடைய வழக்கமான வயிற்றில் கிள்ளுடன்)  என்னால் எழுத முடிய வில்லை. பள்ளியின் வெளித்திண்ணை நெடுக இரும்புக் கம்பிகளால் அரண் அமைக்கபபட்டு இருக்கும். பள்ளி முடிந்ததும் என்னை மட்டும் திண்ணையில் அமர வைத்து வெளியே பூட்டிச் சென்று விட்டார்(சிறைத்தண்டனை).

நாளை எழுதிட்டு வந்துருவான்னு எனது வளத்தம்மா (தாயாரின் தாயார்) ஜாமீன் வழங்க, ஒருமணி நேரம் கழித்து விடுதலையானேன்.
2 K kids போல் ஸ்ட்ரெஸ் அறியா காலமது.

வேடிக்கை என்னவென்றால் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் அவரது மகன்கள் பிரின்ஸ், பிரசன்னா இருவருடனும்தான் எங்களுக்கு பொழுதுபோக்கே.


                              
டீச்சர் அவர்களின் கணவர் திரு.எட்வர்ட் பால் அவர்கள் இ.கல்லுப்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் ஆசிரியர்களாக இருந்ததால் அவ்வப்போது பணிநிமித்தம் வெளியூர் சென்று விட்டால் போதும் அவர்களின் வீடே அதகளமாகிவிடு்ம்.
எட்வரட் சார் அவர்களின் கலகலப்பான பேச்சுகளுடன் டென்சன் இல்லாத டியூசன் மறக்க இயலா மலரும் நினைவுகள்.



பெற்றோரின் மேன்மைகளை மாணவர்கள் உணரும்வண்ணம்
”அகத்தியர்” திரைப்படத்தில் வரும்
 “தாயிற்சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை”
என்ற அருமையான பாடலை பள்ளியில் தினமும் மதியம் சத்துணவு சாப்பிடும் முன்பாக மாணவர்களைபாடச் செய்தார். (இவ்வழக்கம் தற்போது இல்லை)

அதேபோல் காலை பள்ளி வழிபாட்டுக்கூட்டத்தில் 
மாணவர்கள் 
 "எல்லோரும் ” "கற்போம்"  

 ஒன்றாக” ," கற்போம்" 

" நன்றாக " கற்போம்" 

எல்லோரும் ” "உழைப்போம்"  

 ஒன்றாக” ," உழைப்போம்" 

" நன்றாக " உழைப்போம் ”" 
"
எல்லோரும் ” "வாழ்வோம்"  

 ஒன்றாக” ," வாழ்வோம்" 

" நன்றாக " வாழ்வோம் ”

என முழக்கமிடுவது வழக்கமாக்கப்பட்டது.


பிள்ளைகளின் படிப்புக்காக திண்டுக்கல்லில் குடும்பத்துடன் குடியேறிவிட்டாலும், இடையகோட்டையில் ஆசிரியர் பணியும், எங்கள் குடும்பத்துடனான நட்புறவும் மாறவேயில்லை.

                                 

அவ்வப்போது நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் எனது தாயாரிடம் பேசி நல்ல பல ஆலோசனைகளையும் வழங்கி, எனது தாயாரின் மரணம்வரை சிறந்த தோழியாகத் திகழ்ந்தவர் திருமதி. சுசிலாபாய் எட்வர்ட் அவர்கள் நலமுடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திிக்கிறேன்.

அன்புடன்,

சை.ஷாகுல் ஹமீது.