செவ்வாய், 23 ஏப்ரல், 2019

இன்று உலக புத்தக தினம்

     தந்தை பெரியார் ஒரு முறை கூறும்பொழுது நான்காம் வகுப்புக்கு மேல் உள்ள பள்ளிகளை மூடி விடுங்கள் அதற்கு பதிலாக நூலகங்களை திறந்து வையுங்கள் நாட்டிற்கு சிறந்த விஞ்ஞானிகளும் மேதைகளும் கிடைப்பார்கள் என்றார்.

    அந்த அளவிற்கு புத்தக வாசிப்பு பழக்கம் மனிதனை மனிதனாக மட்டுமல்லாமல் அதற்கும்மேல் ஒரு சித்தாந்தவாதியாக மாற்றக்கூடிய வல்லமை கொண்டதாகும்.
    இவ்வுலகில் நடைபெற்றுள்ள பல்வேறு சமூக சீர்திருத்தங்கள், வரலாற்று எழுச்சி நிகழ்வுகள் போன்ற பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுக்கு அவற்றின் பின்னணியில் ஏதேனும் ஒரு அறிஞரின் சொல் அல்லது அறிஞர்களின்  புத்தகங்கள் காரணமாக இருக்கும். கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நூலகங்கள் மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு பசியாற்றிக் கொண்டு இருந்தன. ஆனால் இன்று  அவ்வாறான மாணவர்கள் இருப்பதில்லை. இதற்கு தற்போதைய கல்வி முறைகளும் நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் குறிப்பாக முகநூல் whatsapp போன்ற சமூக ஊடகங்கள் இளைஞர்களின் பொழுதுபோக்கை அபகரித்துக் கொண்டு விட்டன. இதன் காரணமாக சில நல்ல விளைவுகள் ஏற்பட்டாலும் பெரும்பாலும் தேவையற்ற  செய்திகள் மற்றும் வதந்திகள்   ஆகியவற்றை பகிர்வதற்கே  இவை பயன்படுகின்றன. இதனால் எவ்விதத்திலும் அறிவு வளர்ச்சியும் சிந்தனைத் திறனும் மேம்பாடு அடைவதில்லை. முகநூல் மற்றும் கட்செவி (WhatsApp) போன்ற ஊடகங்கள் வாயிலாக எவ்வளவோ நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்து சொல்ல இயலும், ஆனால் பெரும்பாலும் இவ்வூடகங்கள் எதிர்மறை சிந்தனைகளை பகிர்வதற்கு பயன்படுகிறது என்பது ஒரு வேதனையான விஷயம்.

     ஆனால் புத்தகங்கள் என்பவை பல்வேறு நற் கருத்துக்களையும் சிறந்த சீர்திருத்த கருத்துக்களையும் தன்பால் கொண்டிருக்கின்றன இவற்றை சேதமுறாமல் வைத்திருப்பின் எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தலாம் இவற்றின் செய்திகளை மக்களுக்கு எடுத்தியம்பலாம்.

     எனவே மாணவர்களுக்கும்,  இளைஞர்களுக்கும் புத்தக வாசிப்பின் அருமையையும் நூலகத்தின் பெருமையையும் எடுத்துச் சொல்லி நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை உருவாக்க வேண்டும், மட்டுமல்லாது சிறந்த புத்தகங்களைக் கொண்ட சிறிய நூலகம் ஒன்றை தன்னளவில் ஒவ்வொருவரும் தங்களது இல்லங்களில் அமைப்பதன்மூலம்  அவர்களின் சந்ததியினர் அறிவுச் செல்வத்தை அள்ளிப் பருகிட வழிவகை ஏற்படுத்திட வேண்டும். இதைத்தான்  அறிஞர் அண்ணா அவர்களும் வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம் என்று கூறியுள்ளார். தினமும் ஒரு புத்தகம் அல்லது சில பக்கங்களையாவது வாசிப்போம்.