திங்கள், 2 மே, 2022

IDAYAKOTTAI ரமலான் நினைவலைகள்

   சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது ஊரில் ரமலான் எப்படி இருந்தது? ரமலான் மாதம் துவங்குவதற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பாகவே முன்தயாரிப்புகள் தொடங்கி விடும். நோன்பு கஞ்சி (செம்பாலான) பாத்திரங்கள் அலுமினியம் பூசப்பட்டு, நகரா (முரசு) வெயிலில் வைத்து சுதி கூட்டி தயார் நிலையில் மசூதி மாடியில் உள்ள பாங்கு மேடைக்கு எடுத்து செல்லப்படும். ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பவர்களை அதிகாலை எழுப்பி விடுவதற்காக ஃபக்கீர்ஷா அதிகாலை 2.00 மணியில் இருந்து தெருக்கள் தோறும் தாயிரா இசைத்தவாறு அழகுத் தமிழில் இறைவனை போற்றியும், நபிகள் நாயகம் அவர்களை வாழ்த்தியும் பாடல்களை பாடியவாறு வலம் வருவார். ஃபக்கீர்ஷாவையும், அவருக்குத் துணையாக பெட்ரோமாக்ஸ் விளக்கு சுமந்து வரும் திண்டுக்கல்லான் (அவரது உண்மையான பெயர் தெரியாது) ஆகியோர் 40 களுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மலரும் நினைவுகள். அது மட்டும் அல்ல அதிகாலை நேரம் தெரிந்து கொள்ள ஒரு மணி, மூன்று மணி, ஸகர் முடியும் நேரம் என நகரா ஓசை முழங்கும். நோன்பு திறக்கும் போதும் நகரா முழக்கம் தான் அலாரம். நகரா அடிக்க அவ்வப்போது சிறுவர்களுக்கும் சான்ஸ் உண்டு. தற்போது போலவே 30 நாட்களுக்கும் தினம் ஒருவர் என நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்க, நன்கொடையாளர் பற்றாக்குறை காரணமாக சுமார் 8 முதல் 10 நாட்களுக்கு பொதுக்கஞ்சியாக காய்ச்சி வழங்கப்படும். வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் கமகமக்கும். கடைசி நாளில் அலங்காரத்துக்கு மருதாணியும், காலை டிபனுக்கு (பணியாரம்) மாவு தயாரிப்பும் மும்முரமாகும்.    

பணியாரம் என்றவுடன் தற்போது நாம் பார்க்கும் சைஸ் அல்ல  தான் சிறிய பணியாரமே கிரிக்கெட் பந்து அளவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாலையிலேயே  குளித்து புது துணிமணிகளுடன் அந்த பணியாரத்தை நாட்டுச்சக்கரை, வாழைப்பழம் கலந்து பிசைந்து ஒரு பிடி பிடித்து விட்டுத்தான் அதிகாலை சுபுஹ் தொழுகை  அத்தர் மணக்க நடைபெறும். மசூதியிலிருந்து தக்பீர் முழக்கத்துடன் ஊர்வலம் கிளம்பி ஊருக்கு வெளியில் நங்காஞ்சி ஆற்றின் நடுவே அமைந்துள்ள ஈத்ஹா பள்ளியில் தொழுகையை நிறைவேற்றுவதும், முன்னதாக தோப்புத் தோட்ட கிணற்று பம்ப் செட்டில் ஒளு செய்வதும் இன்றைக்கும் மனதில் காவியமான நினைவுகள். தொழுகையை முடித்து வரும் வழியில் குச்சி ஐஸ் ருசித்தவாறு வரும் சிறுவர்கள், வெயில் கொடுமை தவிர்க்க புதூர் பால்காரர் வீட்டில் உரிமையுடன் அமர்ந்து தண்ணீர் அருந்தி வரும் பெருசுகள், தொழுது விட்டு வீட்டுக்கு வரும் தனது குடும்பத்தாரை ஆரத்தி எடுத்து வரவேற்கும் புத்தாடை மகளிர் என சொல்லிக் கொண்டே போகலாம்.  பெருநாள் அன்றும் தொடர்ந்து வரக்கூடிய இரண்டு நாட்கள் என மொத்தம் மூன்று நாட்கள் நங்காஞ்சி ஆற்று மணலில் ஆத்து கூட்டம் கூடுவதும் அந்தக் கூட்டத்தில் வயது வாரியாக அமர்ந்து அரட்டைக் கச்சேரி விளையாட்டுகளுடன் சாராக்கா, ஆய்ஷுகுப்பி, கமரக்கா, ஜோராக்கா(all akkaas above 60) ஆகியோரின் கைவண்ணத்தில் அச்சு முறுக்கு அரிசி முறுக்கு பூரணம் (இனிப்பு பூரி) விற்பனை களைகட்டும். ஆத்து கூட்டம் ரமலான் பெருநாள் மட்டுமின்றி பக்ரீத் பெருநாளின் போதும் 3 நாட்கள் நடைபெறும். எனது நினைவுகளில் விடுபட்ட தகவல் ஏதும் இருந்தால் கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதியை நிரப்புங்கள். 

அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்



.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக