சென்னையைக் காட்டிலும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னணி கொண்ட,ஜாதி,மதபேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழும் எங்கள் கிராமத்தின் சிறப்புகளை அறிய அன்புடன் வரவேற்கிறது இடையகோட்டை வலைப்பூ.
எந்த ஒரு மனிதர் ஒரு செடியை நட்டுவைக்கிறாரோ, அந்த மரம் பலன்கொடுக்கும் காலமெல்லாம் அதன் நன்மை அவருக்குச் சேர்ந்து கொண்டிருக்கும்.
--நபிகள் நாயகம்.
உலகில் எங்கும் இதுவரை நடந்திராத மாபெரும் சூழலியல் நிகழ்வில் 600000-வது மரக்கன்றை தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நட்டுவைக்க நமது இடையகோட்டையில் நேற்று முன்தினம் (23.12.2022 வெள்ளிக்கிழமை) நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் அதிகமாக ஆறரை லட்சம் மரக்கன்றுகள் இரண்டு மணிநேரத்தில் நடப்பட்டன. (முன்னதாக நான்கு மணி நேரத்தில் ஆறு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.)
இடையகோட்டை, நங்காஞ்சி நதியி்ன் மேற்குக்கரைக்கு அருகில், இடையகோட்டையின் இரண்டாம் பாளையக்காரர் எர்ரகுடி திப்பைய நாயக்கரால் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1570களில்) திருவேங்கடநாதப் பெருமாள் கோவில் கட்டப்பட்டது. பின்னர் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் அப்போதைய பாளையக்காரர் லட்சுமிபதி நாயக்கர் அவர்கள் ஜவ்வாதுபட்டிக்கு வடமேற்கில் ஓடையாற்றின் குறுக்கே
ஒரு அணையும் அதில் இருந்து கிழக்குத்திசையில் வாய்க்கால்மூலம் நிரம்பும் வகையில் மேலைக்குளம் என்ற குளமும் வெட்டியுள்ளார்.
மேலைக்குளத்தின் வடகிழக்கில் உபரி நீர் நிரம்பும் வகையில் செங்குளமும் அவரால் வெட்டப்பட்டது. செங்குளக்
கிழக்குக்கரையை ஒட்டிய நிலமும் திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்கு மானியமாக லட்சுமிபதி நாயக்கரால் வழங்கப்பட்டது.
இந்த நிலம் பல ஆண்டுகளாக சீமைக்கருவேல மரங்களடர்ந்து பயன்பாடில்லாமல் இருந்த இந்த நிலத்தில்தான் மேற்கண்ட சாதனை நிகழ்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு நிலத்தை சீர்செய்து தயார்படுத்தி வைத்தனர்.
ஜப்பானிய விஞ்ஞானி மியாவாக்கி என்பவர் கண்டுபிடித்து உலகமெங்கும் வெற்றிகரமாகச் செயல்படும் “ மியாவாக்கி அடர்வனம்” என்ற தொழில்நுட்பம் மூலம் பெருமரங்கள் ஒன்றுக்கொன்று பிணைப்புடன் வேகமாக வளரும் வகையில் மாண்புமிகு. உணவுத்துறை அமைச்சர். திரு.அர.சக்கரபாணி அவர்களின் நேரடி கண்காணிப்பில் நடப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான கல்லுரி மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற இந்த சாதனை நிகழ்வின் இறுதியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர். திரு.இ. பெரியசாமி, மாண்புமிகு அமைச்சர். திரு. மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. செந்தில்குமார், திரு. காந்திராஜன், மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட வண்ணமய நிகழ்ச்சியில் எலைட் உலக சாதனை பதிவு நிறுவன அதிகாரி ரவி பால்பாக்ரீ, அமைச்சர்களிடம் உலக சாதனை பதிவுச்சான்றிதழை வழங்கினார்.
அடர்வனத்தின் ஊடாக பார்வையிட வரும் மக்களுக்கு பொழுது போக்கிட வசதியாக நீரூற்றுகள் பூங்காக்கள் மனம் மயக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
மரங்கள் ஒவ்வொன்றும் நமது பிள்ளைகளால் நடப்பட்டுள்ளதால் அவற்றை பாதுகாப்பது நமது கடமையாகு்ம். இத்திட்டத்தின் வெற்றி இத்துடன் முடிவதல்ல, அடர்வனம் தொடர்வனமாக அனைவரும் ஒன்றிணைவோம்.
இந்த அடர்வனம் மற்றும் பூங்கா ஆகியவற்றை மாவட்ட சுற்றுலாத்தலமாக அறிவித்து, திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தலங்களில் இதுகுறித்த அறிவிப்புப்பலகைகள் அமைத்தும் முக்கிய சாலைகளில் வழிகாட்டி பலகைகள் அமைத்து பிரபலப்படுத்தவும் வேணடுமென்பது இடையகோட்டை மக்களின் எதிர்பார்ப்பு.
இம்மாபெரும் நிகழ்வின் வேர்களாகத் திகழ்ந்த திரு.செல்லமுத்து (முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர்), திரு. செல்வராஜ் (PACS தலைவர்), திருமதி.செல்வி - திருமதி.ஜென்ஸி (ஒன்றியக்குழு உறுப்பினர்கள்) திரு. சரவணன் (ஊராட்சிமன்றத்தலைவர்), திருமதி.காளீஸ்வரி (ஊராட்சிமன்ற துணைத்தலைவர்), அரசு அதிகாரிகள்,தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
ஆங்ங் கடைசியா ஒரு விசயத்த மறந்துட்டேன்.
அது இடையகோட்டைக்குள்ள ஒரு தமிழ்நாடு இருக்கறத யாராச்சும் கவனிச்சீங்களா?
அதென்னப்பான்னு
கேக்காதீங்க நம்ம அடர்வனத்தோட அமைப்ப பாருங்க நுழைவாயில்ல இருக்குர
வரைபடத்த கவனிச்சா கிட்டத்தட்ட தமிழ்நாட்டு வரைபடம் மாதிரியே இருக்குதா?
(இத நான் மட்டும்தான் கண்டுபுடுச்சேன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக