ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

IDAYAKOTTAI - விசுவநாதன் சார்





காலை 9 40 மைதானத்தில் காலை வழிபாட்டுக்காக வரும் மாணவர்கள் அனைவரின் பார்வையும்  இடையகோட்டை, நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி  அருகே உள்ள சின்னக்காம்பட்டி சாலையின் மீது!! 
இதோ ஆனூர் அம்மன் பேருந்து செல்கிறது அப்படியானால் அவர் வந்து விட்டாரா? 
 பள்ளியில் நுழைவுப் பகுதியில் அவர் வந்துவிட்டார் என்றதும் ஹோம் ஒர்க் முடிக்காத  மாணவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். யார் அவர்? 
அவர்தான் திரு. L. விஸ்வநாதன் அவர்கள், 90களில் இடையகோட்டை, நேருஜி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக கண்டிப்புக்கு பெயர் பெற்றவர், அதுமட்டுமல்ல பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியரும் அவர்தான். அணிவகுப்பில் நிற்கும் ராணுவ வீரர்களை போல அவர் வந்துவிட்டால் மாணவர்கள் அட்டென்ஷன் ஆகிவிடுவார்கள். தனக்கே உரிய கம்பீரக் குரலில் ஆங்கில பாடங்கள்  நடத்தும் அழகே தனி, தலைமையாசிரியராக இருந்ததால் பணிச்சுமை காரணமாக ஒருநாள் கூட வகுப்பு எடுக்காமல் இருந்ததே இல்லை. அப்போதெல்லாம் பெரும்பாலான ஆசிரியர்கள் திண்டுக்கல்லில் இருந்து தான் இங்கு வந்து பணியாற்றினர், மேலும் மாணவர்களும் மிக நீண்ட தூரத்தில் இருந்து சைக்கிளில் வருவார்கள், அதையெல்லாம் கருத்தில் கொண்டு காலை பள்ளி துவங்கும் நேரம் ஒன்பதே முக்கால் ஆக இருந்தது. மாலை 4.20 மணிக்கு பள்ளி முடிவடையும். பத்து நிமிட இடைவேளைக்குப் பிறகு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 4 30 மணி முதல் 5.30 மணிவரை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகளை நாள் தவறாமல் நடத்துவார். ஆங்கில இலக்கணங்கள் அவரிடம் பயின்ற மாணவர்களுக்கு இன்று வரை மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருஜி அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் வரை கரூர் ரோட்டில் உள்ள  ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்தது. அதன் அருகிலேயே தென்னை ஓலை கூரைகளால் அமைக்கப்பட்ட மிக நெருக்கடியான இடத்திலேயே வகுப்புகள் நடைபெற்று வந்தன.  மழைக்காலம் வந்துவிட்டால் வகுப்புகளில் தண்ணீர் சேர்ந்துவிடும் எனவே தண்ணீர் வடியும் வரை சில வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுவதும் உண்டு இடப்பற்றாக்குறை காரணமாக காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் இடையகோட்டை ஜமீன் அரண்மனையில் நடைபெற்றதும் உண்டு. பிற்பாடு தற்போதுள்ள பெரிய பாலம் கட்டப்பட்ட பின்னர் நங்காஞ்சி ஆற்றில் பாலத்தின் அடியில் வகுப்புகளும்,  தேர்வுகளும் நடைபெற்றது உண்டு. திரு விசுவநாதன் அவர்கள் தலைமையாசிரியராக பொறுப்பேற்றவுடன் இத்தகைய சூழ்நிலைகளை கவனித்து தீர்வு காணும் முகமாக அப்போது ஜமீன்தார் மரியாதைக்குரிய திரு. ராஜா @ முத்து வெங்கடாத்திரி அவர்களால் ஏற்கனவே நன்கொடையாக நிலம் வழங்கப்பட்டு 2 கட்டிடங்கள் பள்ளிக்காக கட்டப்பட்டிருந்ததை யறிந்து பள்ளியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டதன் வாயிலாக 1989ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளி, அலுவலகம், ஆய்வுக்கூடம் மற்றும் 8, 9, 10 வகுப்புகள்  தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டன. வகுப்பறை பற்றாக்குறை காரணமாக ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மட்டும் பழைய கட்டிடத்தில் ஓராண்டு வரை இயங்கியது. பள்ளி இடமாற்றம் செய்யப்பட்ட பொழுது பள்ளி அமைந்துள்ள பகுதி, மைதானம் ஆகியவை முழுவதும்  மக்களால் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தப்பட்டு புதர் மண்டிக் கிடந்தது. பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் துணைகொண்டு மைதானமும் பள்ளி வளாகம் சீர் செய்யப்பட்டது இவரின் காலத்தில் தான். பள்ளி துவங்கப்பட் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வெள்ளி விழா 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி மிக விமரிசையாக நடைபெற்றது. அடுத்த ஓராண்டிலேயே திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளும் சிறப்புற நடத்தப்பட்டன. திரு விஸ்வநாதன் அவர்கள் பணியாற்றிய காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக சிறப்பு வகுப்புகள் காலையும் மாலையும் தவறாமல் நடத்தப்பட்டன அதுமட்டுமின்றி பொதுத் தேர்வுக்கு முன்பாக மாணவர்களை அழைத்துச் சென்று பழனி முருகன் கோவில், குளிப்பட்டி சர்க்கரை பாவா தர்கா, இடையகோட்டை கிறிஸ்துவ தேவாலயம் இடங்களில் சிறப்புசர்வ சமய  வழிபாடுகள் நடத்தப்பட்டன. பத்தாம் வகுப்பு தேர்வின் முக்கியத்துவம் கருதி ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மே மாதம் இரண்டாவது வாரத்திலேயே சிறப்பு வகுப்புகளை தொடங்கிவிடுவார். அப்போதெல்லாம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அஞ்சலட்டை மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படும் ,அந்த அஞ்சல் அட்டையிலேயே பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு வகுப்பு துவங்கும் நாள் அறிவிப்புடன் அஞ்சல் அட்டை வந்து சேரும்
. ஒட்டன்சத்திரம் கே ஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தான் நமது பள்ளிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு மையம் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது . 1992ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மற்ற தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் ஆங்கில பாட முதல் தாள் தேர்வு மட்டும் நடைபெற்றது.   அதற்கு முந்தைய தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடந்து கொண்டிருக்கும் பொழுது இடையகோட்டை , பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த தேர்வு அறைகளில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது அது வேறொன்றும் இல்லை ஆங்கில பாடம் தேர்வு நடைபெறும் வரை தினமும் மாணவர்களுக்கு இடையகோட்டை மாணவர்களுக்கு மீண்டும்  பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்ற அறிவிப்பு தான் அது அந்த அளவிற்கு மாணவர்கள் கல்வியின் மீது விசுவநாதன் சார் அவர்களின் அக்கறை மேலோங்கியிருக்கும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்துவார் இடையகோட்டை யில் ஜெராக்ஸ் வசதி ஏதும் இல்லாத அந்த காலகட்டத்தில் இந்தத் தேர்வுகளுக்கான கேள்வித்தாளை தானே டைப் செய்து ரோனியோ கொண்டு நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்குவார். ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோரிடமும் தொடர்புகொண்டு அவர்கள் கல்வி முன்னேற்றம் குறித்து ஆலோசிப்பார். கல்வி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் மாணவர்கள் சிறிது சறுக்கினாலும் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களின் பிள்ளைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவார். பெற்றோரின் முன்னிலையிலேயே மாணவர்களை அவர் அடிக்கும் போது கூட எந்த பெற்றோரும் அவரிடம் ஆட்சேபனை செய்ததில்லை என்பது ஒன்றே பெற்றோர் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு. கண்டிப்புக்கு பெயர் பெற்ற விசுவநாதன் சார் அவர்கள் வகுப்பறைகளில் பாடம் நடத்தும்போது கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது .தேவையான சமயங்களில் மாணவர்களுடன் நகைச்சுவையுடன் உஉரையாடுவதும் உண்டு அப்போதைய உயர் வகுப்பான பத்தாம் வகுப்பு மாணவர்கள்மீது எந்நேரமும் தனது கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக தலைமையாசிரியர் அறைக்கு பக்கத்திலேயே பத்தாம் வகுப்புக்கான அமைத்திருந்தார்.
ஒன்பது ஆண்டுகள் நமது பள்ளியில் பணிபுரிந்து மாற்றலாகிச் சென்றார். நமது பள்ளியில் பணிபுரிந்தபோதே தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற விசுவநாதன் சார் அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழ இந்த ஆசிரியர் தினத்தில் இறைவனை வேண்டுகிறேன்.
படங்கள் 
1. 1989-90ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு  மாணவர்கள் சிலருடன் விசுவநாதன் சார் மற்றும் அமரர். திரு. ராமலிங்கம் சார் 
2.  விசுவநாதன் சார் சமீபத்திய நிழற்படம்.
                              அன்புடன், 
                         ஷாகுல் ஹமீது சை.

3 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி. தங்களின் பெயர் தெரியவில்லை. இடையகோட்டை தொடர்பான பழைய புகைப்படங்கள், செய்திகள் ஏதுமிருந்தால் pugalzharasan@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக அனுப்புங்கள்.

      நீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி. நானும் அவருடைய மாணவன் என்பதில் பெருமை படுகிறேன்.

    பதிலளிநீக்கு