செவ்வாய், 12 அக்டோபர், 2021

IDAYAKOTTAI அம்மச்சி குளம்

 

·        கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 1686 ஆக இருக்கக்கூடும்) இடையகோட்டை பாளையக்காரராகப் பட்டமேற்ற லட்சுமிபதி நாயக்கர்  ஜவ்வாதுபட்டிக்கு வடமேற்கில் ஓடையாற்றின் குறுக்கே ஒரு அணையும் அதில் இருந்து கிழக்குத்திசையில் வாய்க்கால்மூலம் நிரம்பும் வகையில் மேலைக்குளம் என்ற குளமும் வெட்டியுள்ளார். மேலைக்குளத்தின் வடகிழக்கில் உபரி நீர் நிரம்பும் வகையில் செங்குளமும் அவரால் வெட்டப்பட்டது. இடையகோட்டைக்கு வடமேற்கில் பாண்டிய மன்னர் காலத்தில் கூரைக் கட்டடமாக அமைக்கப்பட்ட செல்லாண்டியம்மன் கோயிலை லட்சுமிபதி நாயக்கர் செங்கல்கட்டு காரைக் கட்டடமாகக் கட்டினார். இக்கோயிலின் மேற்குப் பகுதியில்   செல்லாண்டியம்மன் குளம் என்ற பெயரில் குளமும் வெட்டினார். இது தற்போது அம்மச்சி குளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

·         எண்பதுகளின் இறுதி காலம் வரை இந்த அம்மச்சி குளம் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் நிரம்பியிருக்கும் குளத்தின் தெற்குக் கரை கள்ளிமந்தயம்  சாலையில்  செல்லும் போது சாலையின் வடக்குப் புறம்    அம்மச்சி குளமும், சாலைக்கு தெற்குப் புறம் உள்ள தோட்டத்தில் வயல் வெளியிலும் நீர் நிரம்பி பழைய திரைப்படங்களில் வருவது போன்ற கவித்துவமான கண்ணுக்கினிய காட்சியாக திகழ்ந்தது உண்டு. நேருஜி அரசு உயர்(தற்போது மேல்)நிலைப்பள்ளி மாணவர்கள் மதிய உணவு இடைவேளையில் தாங்கள் கொண்டுவந்த உணவை குளக்கரையில் உள்ள மர நிழலில் அமர்ந்து உட்கொண்டபின் குளத்தில் இருந்த கைப்பம்பில் நீர் அருந்தி விட்டு அரட்டையடித்தவாறு வகுப்பறை திரும்பியதெல்லாம் பசுமை நிறைந்த நினைவுகள். பின்னாட்களில் ஓரிரு வருடங்கள் வறட்சி ஏற்பட்ட காலங்களில் அம்மச்சி குளத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, மக்களின் தாகத்தை தீர்த்து வைப்பதில் பெரும் பங்காற்றியது.

                  கால ஓட்டத்தில் செங்குளமும் அதன் வடிகால் ஓடையும் தூர்ந்துவிட, அம்மச்சி குளம் வறண்டு விட்டது. கடந்த 24.09.2021  வெள்ளியன்று மாலை பெய்த  கனமழையால் அம்மச்சி குளம் நிரம்பி, நமதூர் மக்களை பரவசப்படுத்தியது. 

படங்கள் 

நீர் நிரம்பிய அம்மச்சி குளம்

செல்லாண்டியம்மன் கோயில் (படஉதவி திரு.திருத்தனி)










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக