செய்த தவறை தைரியமாக ஒத்துக்கொள்.
யாரிடமும் கை கட்டி நிற்காதே; அது ஆசிரியராகவே இருந்தாலும், நானாகவே இருந்தாலும் சரி.
நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்து முதல்நாள் முதல் பாட வேளையில் ஆசிரியர் ராஜேந்திரன் அவர்கள் மாணவர்களிடம் கூறிய அறிவுரை. 1981ஆம் ஆண்டு முதன்முதலில் இடையகோட்டை நேருஜி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்றதில் இருந்து கடைசிவரை இந்த மண்ணின் மைந்தர் ஆகவே மாறிவிட்டவர் ஆசிரியர் ராஜேந்திரன் அவர்கள், பாடம் நடத்துவதில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது. ஏழாம் வகுப்பில் அவர் நடத்திய முற்றொருமை சூத்திரம் இன்றுவரை அத்துபடி. மாணவர்களுக்கு எவ்வித செலவும் வைக்காமல் பாடம் எடுத்த ஆசிரியர் பாடம் மட்டுமன்றி பொது அறிவு தகவல்கள், வரலாற்று சம்பவங்கள், தமிழக அரசியல் நிலவரங்கள், இந்திய அரசியல் நிலவரங்கள் என மாணவர்களிடம் அவர் பேசாத தகவல்களே இல்லை. பாடங்களை நடத்தும் பொழுது மிகுந்த சுவாரசியத்துடன் நகைச்சுவை கலந்து பாடம் புகட்டுவது அவருடைய தனித்தன்மை. அவரது பாடவேளை எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். அப்போதெல்லாம் கைடு என்று சொல்லப்படக்கூடிய குறிப்புதவி நூல்கள் வாங்க வசதியின்றி புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுத திணறும் மாணவர்களுக்கு அவரே முழு புத்தகத்திற்கும் வினாவிடை தயார்செய்து எழுத செய்வார். சிறிய வகுப்பு பெரியவகுப்பு என்றெல்லாம் இல்லாமல் சிறப்பு வகுப்புகள் எடுத்து பாட குறிப்புகளை வழங்குவார்.
மாணவர்கள் மனச்சோர்வு அடையாமல் இருக்க ஆண்டு விழாக்கள், சுற்றுலாக்கள் என பல்வேறு பாடம் சாரா செயல்பாடுகள் மூலம் உற்சாகப்படுத்துவார். ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகள் மூலம் சாம்ராட் அசோகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும் மாணவர்கள் மனதில் பதிந்தனர். பரதநாட்டியம், கோலாட்டம், கும்மி, குறவர் கூத்து போன்ற பாரம்பரிய கலைகளை மாணவர்கள் மூலம் அரங்கேற்றம் செய்தார். படிக்காத மாணவர்களை கண்டிக்கும் போதும் சேட்டை செய்யும் மாணவர்களை கண்டிக்கும் போதும் கடுமை காட்டாமல் அவர்களின் தவறை நகைச்சுவையாகவே உணரச் செய்து கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்வார்.
சாரண சாரணியர் அமைப்பின் பொறுப்பாசிரியராக இருந்து மாணவர்களுக்கு சேவை மனப்பான்மையை ஏற்படுத்தினார். இடையகோட்டை உரூஸ் விழாவிலும், மாரியம்மன் கோயில் திருவிழா, பழனி தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களில் சாரண சாரணியர் மாணவர்களை அழைத்துச் சென்று கூட்டங்களை ஒழுங்கு படுத்துதல், பொதுமக்களுக்கு உதவுதல், தண்ணீர்ப்பந்தல் அமைத்து தாகம் தணித்தல் போன்ற சேவைகளை செய்தார். தன்னுடைய கல்லூரிப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
பலருக்கும் அவர் பற்றிய எண்ணம் அவர் கஞ்சத்தனம் மிக்கவர் என்று. ஆனால் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்த முயன்ற பல மாணவ மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் மட்டுமின்றி அவர்களின் குடும்ப செலவிற்கு பண உதவி என ஒரு கொடையாளர் ஆகவே இருந்தவர். தேவையான அத்தியாவசியமான உதவிகளை தேவைப்படும் நபர்களுக்கு சரியான நேரத்தில் செய்து அதுவும் வெளியில் தெரியாத வண்ணம் மறைமுகமாகவே செய்து வந்தவர். படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல என மாணவர்களை பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனம் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்தினார் தன்னுடைய சொந்த பணத்தில் ஒரு பகுதியை எப்போதுமே பிறருக்கு உதவ பயன்படுத்தியுள்ளார். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்களுக்கு பள்ளியில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டத்தில் பரிசுகள் வழங்கி ஊக்குவித்து வந்தார். தன்னுடைய சொந்த ஊருக்கு அருகிலேயே பணி மாறுதல் கிடைத்தும் கூட இரண்டே ஆண்டுகளில் மீண்டும் நமது பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்ததுடன் தன்னுடைய ஓய்வு காலம் வரை இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே பணிபுரிந்தார். ரமலான் ,பக்ரீத் பெருநாட்களில் பக்கத்து வீடுகளில் இருந்து ஸ்பெஷல் உணவுகள் அவரது வீட்டுக்கும்,தீபாவளி இனிப்புகள் ,பொங்கல் கரும்புகள் அவரிடமிருந்து பக்கத்து வீட்டாருக்கும் பயணப்படும்.
சுமார் 30 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட தலைமுறையில் பெரும்பாலானோர் அவரின் மாணவர்களே. 1993 ஆம் ஆண்டு நமது ஊர் நங்காஞ்சி ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்தது அவரது பழைய மாணவர் பலரை நேரில் சந்தித்து ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் உடனடியாக மக்களுக்கு உதவ தயாராக இருங்கள் என்று முன் தயாரிப்பு செய்ததுடன் கரையோர மக்களுக்கு நேரில் சென்று எச்சரிக்கை செய்து இரவெல்லாம் விழிப்புடன் இருக்கச் செய்தார். இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் டோர்னமெண்ட் நடத்த முயன்று அதற்கான வசூல் செய்த போது தன்னுடைய சார்பாக பரிசு வழங்கியதுடன் போட்டி நடைபெற்ற மூன்று நாட்களும் முழுமையாக அனைத்து போட்டிகளையும் நேரில் கண்டு ரசித்து சிறந்த வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
உழைப்பாளிகளுக்கு ஓய்வு என்பது கிடையாது என்பார்கள் எந்த நேரமும் பள்ளிக்கூடம், மாணவர்களுக்கு பயிற்சி என்றிருந்த அன்னாருக்கு ஓய்வுக்காலம் ஒத்துவரவில்லையோ என்னவோ ஓய்வுபெற்ற பெற்ற ஒரே ஆண்டில் 20 8 2006 அன்று இரவு இடையகோட்டையிலேயே மரணம் அடைந்தார். அன்னாரின் மரணச் செய்தி மறுநாள் ஊரெங்கும் அதிர்ச்சியுடன் விடிந்தது. அவர் எந்த அளவிற்கு நமது ஊரையும் மாணவர்களையும் நேசித்தார் என்பதற்கு அவரது சொந்த ஊரான நிலக்கோட்டையில் நடந்த அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட நமது ஊர் மக்களின் எண்ணிக்கையே சான்று. நமது ஊர் மக்கள் அவர் மீதும், அவர் நம்மீதும் கொண்டிருந்த பேரன்பை அவரின் சொந்த ஊர்க்காரர்களும் சொந்தங்களும் பிரமிப்புடன் கண்டனர். இன்றைய ஆசிரியர் தினத்தில் மட்டுமில்லாமல் எல்லா நாளிலும் ஆசிரியர் என்றாலே ராஜேந்திரன் சார் என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் விதைத்து சென்றுள்ளார்.
நீங்கா நினைவுகளுடன்(மாணவன்), சை. ஷாகுல் ஹமீது,
உரூஸ் விழா வாசனை மாலை ஊர்வலத்தில் சாரண மாணவர் (1983) 
எனது திருமண விழாவில் சக ஆசிரியர்களுடன் 
1990 சாரணர் இயக்க மாணவர்களுடன் குழு நிழற்படம் (குழுவில் நானும் ஒருவனாக)
1