மனித நாகரீகம் உருவான காலத்தில் இருந்தே ஆற்றுப்படுகை மற்றும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலேயே மனித இனம் வசித்துள்ளது இதற்குக்காரணம் அடிப்படைத் தேவையான உணவு மற்றும் குடிநீர் தடையின்றி கிடைத்ததும் ஒரு காரணம். உதாரணமாக சிந்து நதி,(பாகிஸ்தான்), யூப்ரடீஸ் மற்றும் டைகிறீஸ் நதிகள் (ஈராக்), நைல் நதி (எகிப்து), மஞ்சள் நதி (சீனா), காவிரி (திருச்சி,தஞ்சை உள்ளடங்கிய சோழ நாடு), வைகை (மதுரை, கீழடி), குமரிக்கடல் பகுதி (லெமூரியா) ஆகிய ஆதிமனிதன் வசித்த இடங்களை கூறலாம்.
சற்று முன்னேறிய காலத்தில் பல்வேறு வெளிநாடுகளுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வியாபாரிகள் சென்று வரும் வழியை வர்த்தக பெருவழி (நெடுஞ்சாலை) என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. உதாரணத்துக்கு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு இருந்த பட்டுப்பாதையை குறிப்பிடலாம். இப்பாதைகள் பெரும்பாலும் நீர் நிலைகள், ஆற்றுப்பகுதியை ஒட்டிய பாதுகாப்பான சமவெளிகள் வழியாக அமைந்திருக்கும்.. அத்தகைய பெருவழிகள் ஒன்று இடையகோட்டை வழியாகவும் இருந்திருக்கக்கூடும். ஏனென்றால் இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து செல்லும் பாதை தென்வடலாக இடையகோட்டையிலிருந்து அய்யம்பாளையம் வழியாகவும் (தற்போது மாவட்ட நெடுஞ்சாலையாக உள்ளது) இன்னொரு பிரிவு அத்தாம்பட்டி வழியாகவும் செல்கிறது இந்தப் பாதையில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை கடைகள் வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக இருந்துள்ளன.அவற்றில் பல கடைகள் இன்றும் காணப்படுகிறது. பண்டைய தமிழகத்தில்
பொதினி நாடு என்று அழைக்கப்பட்ட பழனி பகுதி மற்றும் வையாபுரி நாடு (ஆவி நாடு) என்று அழைக்கப்பட்ட பகுதியும் இப்பகுதியே ஆகும். சேர,சோழ,பாண்டிய நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் பகுதியும் நமது ஊரை ஒட்டியே அமைத்துள்ளது மேலும் நமது ஊர் வழியே செல்லும் நங்காஞ்சி ஆற்று பகுதியை ஆய்வு செய்தால் தொல்லியல் சின்னங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.