சனி, 29 பிப்ரவரி, 2020

IDAYAKOTTAI - மு.பன்னீர்செல்வன்

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்           இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டு்ம்“ 

                  
கழக வரலாற்றில் மதுரை என்றால் முத்து 
மாநகர் காஞ்சி என்றால் அண்ணா
 செழும்மாங்கனி நகர் சேலம் என்றால் வீரபாண்டியார்
 செந்தமிழ் வளர்த்த கோனாரின் பிறந்த ஊர் இடையகோட்டை என்றால் பன்னீர்செல்வம். 
கழக வரலாறும் இவர்கள் வரலாறும் ஊடும் பாவுமாய் இணைந்தே வரும். 
அண்ணனை பற்றி எத்தனையோ நினைவுகள் அவற்றில் ஒரு சில மட்டுமே வரிவடிவில். 
26. 12. 1954 இடையகோட்டைக்கு அண்ணா வருகை புரிந்தார். 
வாடாமலரே வா 
தென்நாட்டு பெர்னாட்ஷா 
திண்மை  செயலாளா,
 நல்வரவு கூர்வோம் நயந்து 
செல்வ நக்கீரா 
தோன்றும் எழில் பரதா
 நற்செயலே நின் வருகை
 நன்கு மக்கள் பாட்டின்பம் வளர்க்க பணிபுரிவாய் 
.தக்கபுகழ் சான்றோன் தகும் அண்ணா  
மிக்க புகழ்  நாடே உமதுயிர்ப்பு
 நல்வாழ்வே சேவை களம் 
வாடாமலர் நீ வருக
 எழுத்தால் உணர்வூட்டி 
இன்பக் கருத்து நலம்
பழுத்த தமிழ் செல்வா
பைந்தமிழா நீ வருக
 பைந்தமிழா நின் வருகை பார்த்து 
அறியாமை எனும் செந்தமிழின் வைரி திசை தப்பியோடியதே
 ஓடியது ஓடியது உண்மையிலாக
 காரிருளில் தேடிப் பிடிக்கும் திறனரிது வாழியரோ!. 
            சென்ற 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று இடையகோட்டை வந்த அறிஞர் அண்ணா அவர்களுக்கு இடையகோட்டை திராவிட முன்னேற்றக் கழக கிளை யினரால் வாசித்து அளிக்கப்பட்ட வரவேற்பு மடல் தான் இது. 
           வரவேற்பிதழை தமிழில் எழுதி மேடையில் வாசித்து அண்ணா  அவர்களிடம் வழங்கியவர் இடையகோட்டை சமஸ்தான கவிஞர் ஜவ்வாதுபட்டி மு. க. அம்பலவாணன் அவர்கள். அன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மதுரை முத்து அவர்கள் தலைமை தாங்க இசைமுரசு அவர்களின் இசை  முழக்கத்திற்கு பின்பு சிவகங்கைச் சீமையிலிருந்து வருகை தந்த தென்னரசு சேலத்தில் இருந்து வருகை தந்த அன்புக்கரசு அவர்களும் பேசிய பின்பு பேரறிஞர் அண்ணா அவர்கள் நீண்ட நேரம் தமிழ் மழை பொழிந்தார். 
           அந்த மேடையில்தான் இடையகோட்டை இஸ்லாமிய இளைஞர்கள் நான்கு பேருக்கு அண்ணா அவர்கள் அழகு தமிழில் பெயரிட்டு மகிழ்ந்தார் அன்றிரவு அண்ணா அவர்கள் இடையகோட்டை இளைய ஜமீன்தார் K. T. பதியின் அரண்மனையில் தங்கினார். 

யார் அந்த நான்கு பேர்? 

 1.பூவை அனிபா

              அழகும் அன்பும் அடக்கமாய் காட்சிதரும் ஹனீபா என்ற இந்த தம்பிக்கு நல்லதம்பி என்று பெயர் சூட்டுகிறேன் வாழ்க நல்லதம்பி என்றார் கரகோஷம் தொடங்கியது .

2. சாகுல்அமீது 

             பண்ணையூர் பண்ணையார் பல்கலை பட்டம் பெற்றவர் பகுத்தறிவு பாசறையில் வைரத் தூண் மறைந்த பன்னீர் செல்வத்தின் பெயரை சாகுல்அமீது என்ற இந்த தம்பிக்கு சூட்டி மகிழ்கிறேன் வாழ்க பன்னீரசெல்வன்  என்றார் அண்ணா கரகோஷம் தொடர்ந்தது.

.3.சாகுல் ஹமீது 

             குடகு மலையில் இருந்து குதித்து கீழே இறங்கி பொங்கிப் பெருகி வரும் காவிரியை தடுத்து நிறுத்தி கல்லணை எழுப்பிய கரிகால் பெருவளத்தான் பெயரை இந்த நங்காஞ்சி நதி தீரத்திலே பிறந்த சாகுல் அமீது என்ற இந்த தம்பிக்கு சூட்டுகிறேன் வாழ்க கரிகாலன் என்றார் அண்ணா கரகோஷம் விண்ணை பிளந்தது. 

4.M. B. காதர் 

               பாண்டியன் என்ற பெயரை கேட்டால் பகைவனும் நடுங்கும் அந்த பாண்டியனின் பெயரை காதர் என்ற இந்த தம்பிக்கு சூட்டுகிறேன்  வாழ்க பாண்டியன் என்றார் அண்ணா கரகோஷம் அடங்க நீண்ட நேரம் ஆயிற்று. 
          அண்ணாவின் வருகை நங்காஞ்சி நதி தீரத்தில் கழகம் வலுவாக காலூன்ற கால்கோள் விழாவாக அமைந்தது. 
கழக வளர்ச்சியில் தென்றலாக தொடங்கிய அண்ணன் பன்னீர்செல்வன்  அவர்களின் பணி புயலாக மாறியது. 
      கலைஞர் வந்தார் 
தென்றலைத் தீண்டியதில்லை நான் தீயை தாண்டி இருக்கிறேன் 
        அண்ணா வந்து சென்ற நான்கு மாதத்தில் கலைஞர் அவர்கள் இடையகோட்டைக்கு வந்தார். கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேச்சு போட்டியில் கலந்து கொண்ட அண்ணன் பன்னீர்செல்வன்  அவர்கள் முதல் பரிசை கலைஞரின் கரத்தால் பெற்றார் 
      கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தூக்கு மேடை நாடகத்தில் பாண்டியன் என்ற பாத்திரத்தில் நடித்து அதற்கும் கலைஞரின் பாராட்டையும் பரிசையும் பெற்றார் அன்று இரவு கலைஞர் அவர்கள் இடையகோட்டை பாவா ராவுத்தர் அவர்கள் தோட்டத்து பங்களாவில் தங்கினார்.
 அரசமரமும் கல்கட்டு மேடையும்
ஆற்றின் மேற்கு கரையில் இருக்கும் அரசமரத்து கல்கட்டே கழகத் தலைவர்கள் பேசும் மேடையாக அமைந்தது அந்த மேடையில் நின்று பேசாத கழகத் தலைவர்கள் இல்லை 

குமார முத்து படித்துறையும் கருத்தரங்கமும் 

        கிளைக்கழகத் தலைவர் K. T. பதி அவர்களின் தந்தை இடையகோட்டை ஜமீன்தார் குமார முத்து வெங்கடாத்திரி நாயக்கர் அவர்களின் பெயரால் குமார முத்து படித்துறை என்றும் இடையகோட்டை பெரியார் என்று கழக நண்பர்களால் போற்றி பாராட்டப்பட்ட ஷேக் பரீத் அவர்களின் தந்தை வைத்த அவர்களின் பெயரால் பாவா ராவுத்தர் அரங்கம்  என்றும் அந்த கல்கட்டு மேடைக்கு பெயரிட்டு மகிழ்ந்தார். 
 கையில் முரசொலி நாளிதழ் உடன் ஐந்தாறு இளைஞர்கள் புடைசூழ சில நேரங்களில் அங்கு அமர்ந்திருக்கும் அண்ணன் பன்னீர்செல்வமன்  அவர்களை உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் கல்லிக்கட்டு பசங்க என்று கிண்டலாக பேசத் தொடங்கிய நேரத்தில் அண்ணன் சொன்னார் "போதி மரத்திற்கு அடியில்தான் புத்தனுக்கு ஞானம் பிறந்தது" என்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தார் போதி மரம் என்றால் அரச மரம் என்று சமீபத்தில்தான் நான் தெரிந்து கொண்டேன். அந்தப் பெயரை அன்றே பயன்படுத்திய அண்ணனின் பொதுஅறிவு என்னை இன்றும் வியக்கவைக்கிறது. அண்ணன் அவர்கள் கழகத்திற்கு  மட்டும் உழைத்தவரல்ல  ஊருக்கு உழைத்தவர் .  இடையகோட்டை வெள்ளிக்கிழமை சந்தையில் சுங்கம் வசூலிக்கும் நபர் இஷ்டம் போல்  வியாபாரிகளிடம் கட்டண வசூல் செய்து வந்தார். வியாபாரிகள் அண்ணனிடம் முறையிட்டனர்.  அண்ணன் வசூலிக்கும் நபரிடம் பேசிப் பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வெள்ளிக்கிழமையன்று இரட்டை மாட்டுவண்டியில் மூன்றை ஒன்றன் பின் ஒன்றாக  கொண்டு  வந்து நிறுத்தி சந்தைக்கு வந்த பொருட்கள் அனைத்தையும் அந்த வண்டிகளில் ஏற்றி 3 வண்டிக்கான கட்டணத்தை மட்டும் கொடுத்துவிட்டு அவரே முன்னின்று வண்டிகளை சந்தைக்குள் அழைத்துச்சென்றார். அதன்பிறகுதான் அந்த குத்தகைதாரர் வழிக்கு  வந்தார்.
      1963 ஆம் ஆண்டில் ஒருநாள் "இஸ்மாயில்" என  அண்ணன் என்னை அழைத்தார்.
 என்னண்ணே இது நான்.
 நாளைக்கு நம்ம ஊருக்கு அம்மை குத்தும்  இன்ஸ்பெக்டர் நம்ம ஊருக்கு வராங்க அவங்க பத்து நாளைக்கு நம்மூரில் இருப்பாங்களாம் அதுவரைக்கும் அவங்க தங்கறதுக்கு வெ. இ.-கிட்ட ஒரு வீடு கேட்டு இருக்கேன் அது வரைக்கும் நீங்க அவங்க கூட இருந்து பார்த்துக்குங்க சரிண்ணே!  இது நான்.
அண்ணியார் 
      அடுத்த நாள் வந்த அதிகாரிகள் உடனடியாக சென்சஸ் எடுக்க வேண்டும் என்று கூறினர் அண்ணனே ரிஜிஸ்டர் வாங்கி மேற்கு தெரு முழுவதும் கணக்கெடுப்பு செய்தார். கடைசி வீட்டில் ஒவ்வொரு பெயராக  எழுதியபின் கடைசியாக   எழுதிய பெயர் கமர் நீசா.  ஆம் அவர்தான் பின்னாளில் கமர் நீசா பன்னேர்செல்வன் ஆக பெயர் பெற்று இடையகோட்டை ஊராட்சி மன்ற தலைவியாக சிறப்புடன் பணியாற்றி இன்றும் தலைவரம்மா என அன்புடன் அழைக்கப்படும் அண்ணியார் ஆவார்.   
அண்ணனின்  எழுத்தின் அழகையும் எழுதிய வேகத்தையும் பார்த்து வியந்த அந்த அதிகாரி கேட்டார் 
சார் என்ன படிச்சு இருக்கீங்க?
 எட்டாம் வகுப்பு அதாவது எஸ்எஸ்எல்சி --இது அண்ணனின் பதில் 
அதிகாரிகளை ஆச்சரியம் பன்மடங்கு ஆனது.
      ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் காலத்தில் தான் ஜமீன்தார்  ராஜா அவர்கள் வழங்கிய இடத்தில் ஊராட்சி மன்றக் கட்டிடம், மேல்நிலை தண்ணீர் தொட்டி, ஆகியவற்றுடன் பெரிய பாலம், நங்காஞ்சி நீர்த்தேக்கம் ஆகிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 
ஏழை எளியவர்களின் இன்ப துன்பங்களின் சமபங்கு கொண்டவர் அண்ணன் அரை நூற்றாண்டுக்கும் மேலான இடையகோட்டை நிகழ்ச்சிகளிலும் கழக வளர்ச்சியிலும் பள்ளிவாசல் பராமரிப்பிலும் பன்னீர்செல்வம் என்ற பெயரோடு பின்னிப் பிணைந்திருக்கும் இடையகோட்டை யில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் அண்ணனின் வளமான  தமிழை  வாசித்து மகிழலாம்.

(அடுத்த பதிவில்,   தமிழ் திரையுலகின்  முதல்  பாடல் ஆசிரியர் ஆன நமது ஊரு கவிஞர்)  

 --மு.முகம்மது இஸ்மாயில்,