"ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ்"
ஒரு ஊரின் அழகு அந்த ஊரில் ஓடும் ஆற்றின் மூலமாகத்தான் கிடைக்கும். மேலும் பழங்காலத்திலிருந்தே ஆற்றங்கரைகளில் மனித நாகரிகம் தழைத்தோங்கியது என படித்திருப்போம். அதிலும் குறிப்பாக முதன்முதலாக மனித இனம் தோன்றிய பகுதியாக கருதப்படுவது அறிவியல் ரீதியாகவும், கிறிஸ்தவ யூத, இஸ்லாமிய ஆன்மீக ரீதியாகவும் தமிழகத்தின் ராமேஸ்வரம் முதல் குமரிக்கடல் உள்ளடங்கிய குமரிக்கண்டம் பகுதியே ஆகும். குமரிக்கண்டத்தில் ஓடிய பாறூழி ஆறு குறித்த செய்திகள் சங்கத்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
அதுபோலவே நமது ஊரிலும் ஓடக்கூடிய நங்காஞ்சி நதி புவியியல் ரீதியாகவும் வரலாற்று அடிப்படையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நதியாகும். இந்த நதியின் கரையில்தான் இந்திய விடுதலை வரலாற்றில் முதல் புரட்சியாக கருதப்படும் தென்னாட்டு புரட்சியின் மையமான விருப்பாட்சி அமைந்துள்ளது. விருப்பாட்சி பாளையக்காரராக ஆட்சிபுரிந்த கோபால் நாயக்கர் வெள்ளையரை எதிர்த்து மைசூரின் திப்பு சுல்தான், திண்டுக்கல்லின் வேலுநாச்சியார், மராட்டியத்தளபதி தூந்தாஜி வாக், பல்லடம் ஹாஜி அலி போன்றோருடன் இணைந்து வெள்ளையரை எதிர்த்து களம் கண்டார். இவர்களில் ஒவ்வொருவரும் இந்த பரந்த நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தமையால் அவர்களுக்கிடையேயான தகவல் தொடர்பில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாகவும் இந்த தலைவர்களிடையே தூது சென்ற தூதுவர்கள் ஆங்காங்கே வெள்ளையரிடம் பிடிபட்டதாலும் ஒருங்கே தாக்குதல் நடத்தி வெள்ளையரை விரட்டியடிக்க வேண்டும் என்ற திட்டம் தோல்வியில் முடிந்தது இந்த வீரத் தளபதிகள் அனைவரும் வீரமரணம் அடைந்தனர். இந்த நங்காஞ்சியாற்றின் கரையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கோபால் நாயக்கர் தோல்வியடைந்து பின்னர் திண்டுக்கல்லில் தூக்கிலிடப்பட்டு மரணமடைந்தது வரலாறு.
இவ்வாறு ஒரு புரட்சி வரலாற்றை தன்னகத்தே கொண்ட இந்த நங்காஞ்சி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக திகழும் கொடைக்கானல் மலையில் உற்பத்தியாகி மலை மீது தவழ்ந்து விருப்பாட்சி அருகே தலைக்ககூத்து என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியாக தரைப் பகுதியை அடைகிறது மலைமீது ஓடிவரும் போது இந்த ஆற்றின் பெயர் பரப்பலாறு ஆகும். மலையிலிருந்து தரையிறங்கும் இடத்தில் 2 குன்றுகளுக்கு இடையே இந்த ஆறு செல்லும் வழியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது தலைக்கூத்து பகுதியிலிருந்து விருப்பாச்சி வழியாக மற்றும் ஒட்டன்சத்திரம் நகரின் எல்லையிலேயே சுற்றிவந்து கொசவபட்டி ஜவ்வாது பட்டி வழியாக இடையகோட்டை வருகிறது. வரும் வழியில் சடையகுளம்,கருங்குளம், மேலக்குளம், செங்குளம், செல்லாண்டியம்மன் குளம் (அம்மச்சி குளம்) உள்ளிட்ட பத்து குளங்களை நிரப்பி வருகிறது. இடையகோட்டை எல்லையில் நுழையும் இடத்தில் நங்காஞ்சி ஆறு அணை கட்டப்பட்டுள்ளது இங்கிருந்து கரூர் மாவட்டம் சேந்தமங்கலம், பள்ளப்பட்டி வழியாகச் சென்று அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது. ஒரே ஆறாக இருந்தபோதும் பரப்பலாறு என்ற பெயரில் மலை மீது தவழ்ந்து வரும் நமது ஆறு, கீழே இறங்கும் இடத்தில் தலைக்கூத்து நின்று பெயரிலும், தரையில் விழுந்த இடத்திலிருந்து இறுதியாக அமராவதியில் கலக்கும் இடம் வரையிலும் நங்காஞ்சி ஆறு இரண்டு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
பருவமழைக் காலங்களில் சுமார் நான்கு முதல் ஏழு மாதங்கள் வரை கூட ஆற்றில் நீர்வரத்து இருக்கும் நமது ஊரின் அமைப்பு முழுமையும் இந்த ஆற்றை சார்ந்தே உள்ளது. பண்டைய காலத்தில் இப்பகுதி இன்று பழனி என்று அழைக்கப்படும் பொதினி நாட்டை சார்ந்தே அமைந்துள்ளது. முப்பெரும் வேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் தேசங்கள் ஒன்று சேரும் பகுதியில் உள்ள ஊர் சேந்தமங்கலம் என்றே பெயர்பெற்று இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிக நுண்ணிய குறுமணல் பரப்பைக் கொண்ட அழகியதாகவே நமது ஆறு காட்சியளிக்கின்றது. அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களும் சிறுவர்களும் பெண்கள் பெரியவர்கள் என அனைவரும் பொழுதுபோக்கும் ஒரு அழகிய இடமாகவே நமது ஆறு இருந்து வந்தது, குறிப்பாக நமது ஊர்மக்களின் திருவிழாக்களில் இன்றுவரை நங்காஞ்சி ஆற்றுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. ரம்ஜான் பெருநாள், பக்ரீத் பெருநாள் மற்றும் அதற்கடுத்த இரண்டு நாள் என தலா மூன்று நாட்கள் ஆற்று கூட்டம் என்ற பெயரில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பொழுதை கழித்த நாட்கள் 35 வயதை கடந்த அனைவருக்கும் மிகச்சிறந்த மலரும் நினைவுகளாக ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகாசிவராத்திரி தொடர்ந்து வரக்கூடிய தினங்களில் நடைபெறும் அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழாவின் கடைசி நாள் நிகழ்வுகள் முழுக்க நங்காஞ்சி ஆற்றில் தான் நடைபெறும். நமது ஊரில் கோவில் திருவிழாக்களும், இந்த ஆற்றில் அக்னி சட்டி எடுத்து வரும் நிகழ்வுகளும் நமது ஆற்றின் உணவு உணர்வுபூர்வமான தொடர்புக்கு சான்றாகும். கங்கை முதல் காவிரி வரை மிகப்பெரிய ஆறுகளெல்லாம் நம் நாட்டில் வடக்கிலிருந்து தெற்காக பாயும்போது, நமது மாவட்டத்தில் உள்ள ஆறுகள் பெரும்பாலும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்கின்றன அவற்றில் நமது ஆறும் ஒன்று.
கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய பல தலைவர்களும் நமது ஊரில் இந்த ஆற்றின் மணற்பரப்பில் கால் பதித்துள்ளனர் 1977ஆம் ஆண்டு பெய்த கன மழையின் விளைவாக இந்த ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் ஆற்றின் கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள முஸ்லிம் தொடக்கப் பள்ளி வரை பெருக்கெடுத்தது. பின்னர் 1993 ஆம் ஆண்டு பெருக்கெடுத்த வெள்ளம் கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவு வரை கரைபுரண்டது, நமது ஊரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய பாலத்தின் மேல்வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை, அப்போது கட்டி முடிக்கப்பட்டநங்காஞ்சி அணையை உடைத்தது. கடைசியாக 2008ஆம் ஆண்டு நங்காஞ்சி ஆறு அணை நிறையும் அளவிற்கு நீர்வரத்து இருந்தது. அதன் பின்னர் நிலைமை எவ்வாறு ஆனது? சங்ககாலம் தொட்டே மக்கள் வாழ்ந்து வரும் நமது ஊருக்கு அழகு சேர்க்கும் மன்னிக்கவும் சேர்த்த இந்த நங்காஞ்சி ஆறு இன்று உயிர் தொலைத்த பிணமாய் மணல் தொலைத்த கட்டாந்தரையாக ஊர் சாக்கடைகளின் கூடல் ஆகிவிட்டது தான் கொடுமையிலும் கொடுமை.
படங்கள் அடுத்த பாகமாய் ...