ஞாயிறு, 19 ஜூலை, 2020

IDAYAKOTTAI - ராவ் பகதூர்



       பழைய தமிழ் திரைப்படங்களில் ராவ் பகதூர்  என்ற பெயரில் கதாபாத்திரங்கள் இடம்பெறுவதை பார்த்திருப்பீர்கள். ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தில்கூட ராதாரவி தன்னைத்தானே ராவ்
பகதூர் என்று கூறிக்கொள்வார். 
 அது என்ன ராவ்பகதூர்?
                பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நற்சேவை செய்தோருக்கு அவர்களின் சேவையை பாராட்டி வழங்கப்பட்ட ஒரு பட்டம் இது. இதற்க்கு மாண்புமிகு இளவரசர்  என்று பொருள். இஸ்லாமியர்களாக இருப்பின் இவ்விருது கான்பகதூர் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 
                 
           திரு.குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கர் 1909-ல் நமது இடையகோட்டை ஜமீன்தார் ஆக பொறுப்பேற்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியதால் அவர்களுக்கு இவ்விருது 1941-ம் ஆண்டு அப்போதைய கவர்னர் ஜெனரல் லின்லித்கோ  பிரபுவால் வழங்கப்பட்டுள்ளது. 
                   முதன்முதலில் ஊருக்குள் கப்பிச்சாலை அமைத்தவர் இவரே. இவரது காலத்தில் தோண்டப்பட்ட  மூன்று குடிநீர் கிணறுகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. 1937-ல் இவரின் முயற்சியால் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம்தான் இன்றும் பயன்பாட்டில் உள்ள சின்னப்பாலம். பேருந்து நிலையப்பகுதியில் இவரது பெயரால் அமைக்கப்பட்ட குமாரமுத்து நிலையம்தான்   இன்று கால்நடை மருத்துவமனை அமைந்துள்ள கட்டிடம். 
    எந்த செயலை செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மையில் முத்திரை பதித்தவராகவே இருந்துள்ளார். அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம்  இன்றும்கூட முழுமையான பயன்பாட்டில் உள்ள சின்னப்பாலம். உசினியப்பா ராவுத்தர் மற்றும்  மஜீது ராவுத்தர் ஆகிய தலைசிறந்த ஒப்பந்ததாரர்களைக் கொண்டு கட்டப்பட்டது. இவ்விருவரும் நமதூர்க்காரர்களே. 
     குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கரவர்கள்   மாம்பழ கவிச்சிங்க நாவலர், ஜவ்வாதுபட்டி அம்பலவாணன், காசிபாளையம் நடராஜன், சோழியப்பகவுண்டனூர் நடராஜன், பொருளூர் நடராஜன்,பூமி பாலகதாஸ், போன்ற தமிழ் புலவர்களை ஆதரித்துள்ளார். (இவர்களில்  பூமி பாலகதாஸ் அவர்கள் தமிழ் திரையுலகின்  ஆரம்ப காலத்தில் வெளியான மேனகா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். மேலும் சுதந்திரப் போராட்டத்தில் உணர்ச்சியூட்டும் பாடல்களை எழுதியதற்காக வெள்ளை அரசாங்கத்தால் கைதாகி கோவை சிறையில்  உண்ண சரியான உணவு வழங்கப்படாமல் வதைக்கப்பட்டவர்.)
   இரண்டாம் உலகப்போரின்போது இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதை ஊக்கப்படுத்த 1941-ம் ஆண்டு பழனியில் தன்சொந்த செலவில் பிரம்மாண்டமான யானைகளின் அணிவகுப்பை நடத்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தை வியக்கவைத்தார்.  இவர் பாவா ராவுத்தர் என்ற இடையகோட்டையின் பெரும் நிலக்கிழாருடன்  நெருங்கிய நட்பு பூண்டு   மக்களிடையே நல்லிணக்கம் நிலவச் செய்த நல்லிணக்க நாயகர் தான் இடையகோட்டை, ராக்வபகதூர் குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கர் அவர்கள். 
படங்கள் 
1. ராவ்பகதூர் குமாரமுத்து வெஙகடாத்திரி நாயக்கர் அவர்கள்
2. சின்னப்பாலம் கட்டப்பட்ட ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு 
3. பாவா ராவுத்தர் 1935-ல் கட்டிய நாகூர் ஆண்டவர் நினைவு மேடை