இடையகோட்டையின் மண்ணின் மைந்தர் திரு.K.S.G. ஹாஜா சரீப் அவர்கள் சென்னை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அப்போதைய மத்திய,மாநில ஆளுங்கட்சியாக இருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தார். அப்போதைய முதலமைச்சர் திரு.பக்தவத்சலம் அவர்களுடனான தினசரி சந்திப்பில் ஒரு நாள் முதலமைச்சர் அவர்கள் ஹாஜா சரீப் அவர்களிடம் உங்கள் சொந்த ஊருக்கு (இடையகோட்டை) அருகில் உள்ள ஒரு கிராமத்துக்கு உயர்நிலைப்பள்ளி தேவை என்று விண்ணப்பம் வந்துள்ளதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்ற உள்ளதாகவும் கூறவே, அதற்கு பதிலளித்த ஹாஜா சரீப் அவர்கள் உயர்நிலைப்பள்ளி தேவைப்படும் அளவுக்கு மக்கள் தொகையும், மாணவர் எண்ணிக்கையும் இப்பகுதியில் இடையகோட்டைக்கு மட்டுமே உள்ளதாக கூறியதுடன் நில்லாமல் உடனடியாக மின்னல் வேகத்தில் இடையகோட்டை மக்கள் சார்பில் ஒரு கோரிக்கை மனு தயார் செய்து இடையகோட்டையில் உயர்நிலைப்பள்ளி அமைத்திடக் கேட்டுக்கொண்டார். (அவர் அப்போது சென்னை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் இடையகோட்டையில் மில்லுக்காரர் என்று அழைக்கப்பட்ட கே.எஸ்.எஸ்.ஹாஜா முஹம்மது அவர்கள் தலைநகருக்கு வரவழைக்கப்பட்டு அவர்மூலம் முதலைமைச்சர் திரு.பக்தவத்சலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இடையகோட்டையில் உயர்நிலைப்பள்ளி அமைக்க முதலைமைச்சர் திரு.பக்தவத்சலம் அவர்கள் உத்தரவின்படி 1964-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த இடையகோட்டையின் மண்ணின் மைந்தர் திரு.K.S.G. ஹாஜா சரீப் அவர்கள், முன்னாள் பிரதமர்கள் பண்டிதர் நேரு, இரும்புப்பெண்மணி இந்திராகாந்தி ஆகியோருடன் நட்புடன் திகழ்ந்தவர். இடையகோட்டையின் ருசிமிகுந்த உணவுபதார்த்தங்கள் ஹாஜா சரீப் அவர்கள் மூலம் பண்டிதர் நேரு அவர்களுக்கு பிடித்தமானவையாக இருந்ததென அமரர்.திரு.கரூர் சாகுல் ஹமீது (முன்னாள் கரூர், அ.இஅ.தி.மு.க மாவட்ட செயலாளர்) அவர்கள் பொதுக்கூட்டங்களில் கூறியுள்ளார்.
அரசு உயர்நிலைப்பள்ளி துவக்க விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சூழலில் அன்றைய பிரதமராக இருந்த பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் மரணம் அடைந்தார். அன்னாரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு பின்னர் தமிழகம் திரும்பிய முதலமைச்சர் அவர்களிடம் இடையகோட்டை மக்களின் அபிமானம் பெற்ற தலைவரான பண்டிதர் நேருஜி அவர்களின் பெயரை புதிதாக துவக்கப்படவுள்ள அரசு உயர்நிலைப்பள்ளகுச் சூட்ட விடுக்கப்பட்ட வேண்டுகோளின்படி இடையகோட்டையில் நேருஜி அரசு உயர்நிலைப்பள்ளி அப்போதைய முதலமைச்சர் திரு.பக்தவத்சலம் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.
தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் அண்ணா கிராம நூலகம் அமைந்துள்ள பகுதியில் நெரிசலான இடத்தில் விளையாட்டு மைதானம், கழிப்பறை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கி வந்த பள்ளிக்கு கொடைவள்ளல், இடையகோட்டை ஜமீன்தார்.அமரர்.திரு.ராஜா (எ) முத்துவெங்கடாத்திரி நாயக்கர் அவர்கள் பெருமனதுடன் அன்பளிப்பாக வழங்கிய இடத்தில் 1989ம் ஆண்டு முதல் இடையகோட்டை, நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பு
இடையகோட்டையின் நல்லுள்ளம் கொண்ட நல்லோரின் முயற்சியால் நன்கொடைகள் திரட்டி உயர்நிலைப்பள்ளியானது கடந்த 2006ம் ஆண்டிலிருந்து மேல்நிலைப்பள்ளியாகத் தரமுயர்த்தப்பட்டு செயல்பட்டுவருகிறது.
படங்கள்
1.நுழைவாயில் ஆர்ச்
2.,3. திரு.K.S.G. ஹாஜா சரீப் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
(1962 மற்றும் 1980ம் ஆண்டு சட்டமன்ற கையேட்டிலிருந்து.
நன்றி : சட்டசபை இணையதளம்)
4. பள்ளிக்கு நிலம் வழங்கிய கொடைவள்ளல், இடையகோட்டை ஜமீன்தார்.அமரர்.திரு.ராஜா (எ) முத்துவெங்கடாத்திரி நாயக்கர் அவர்கள்.
5. நேருஜி அரசு உயர்நிலைப்பள்ளயின் முதல் பேட்ச் 1966-67 எஸ் எஸ் எல்.சி (அப்போதைய கல்விமுறையில் பதினோராம் வகுப்பு) மாணவர்கள் உடன் தலைமை ஆசிரியர் திரு. முகமது இஸ்மாயில், துணைத்தலைமை ஆசிரியர் திரு.வைரவேல் மற்றும் ஆசிரியர்கள். (இந்த முதல் பேட்ச் மாணவர்களில் பலர் ஆசிரியர்களாகவும் அரசு ஊழியர்களாகவும் பணியாற்றி பணிநிறைவு பெற்றுள்ளனர்.)
6. மேல்நிலைப்பள்ளி துவக்கவிழா கல்வெட்டு
தகவல்கள்
திரு.மு.முகமதுஇஸ்மாயில், நெடுஞ்சாலைத்துறை (பணிநிறைவு),
தேசிய நல்லாசிரியர் திரு. ஹாஜா சரீப் தொடக்கக்கல்வித்துறை (பணிநிறைவு)
மற்றும் திரு.சையது முகமது த.நா.மின்வாரியம் (பணிநிறைவு)முதல் பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி படம் வழங்கியவர்