தமிழ் சினிமாக்கள் ஊமை படங்களாக இருந்து பேசும் படங்களாக பரிணாமம் பெற்ற போது அந்தக் காலத் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்கள் மிகுந்திருக்கும். அத்தகைய பாடல்கள் சிறந்த தமிழ் அறிவு பெற்ற தமிழ் புலவர்களால் இயற்றப்பட்டவை அவ்வாறு வெளியான பேசும் படமான "மேனகா" திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் பூமி பாலக தாஸ்.
இடையகோட்டை ஜமீன் அவையை அலங்கரித்த புலவர்கள் ஜவ்வாதுபட்டி அம்பலவாணன், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், காசிபாளையம் நடராஜன், சோளியப்ப கவுண்டனூர் நடராஜன், பொருளூர் நடராஜன் ஆகியோரின் வரிசையில் புலவர் பூமிபாலக தாஸ் அவர்களும் ஒருவர். இவர்களை ஆதரித்தது இடையகோட்டை, பாளையக்காரர் குமார முத்து வெங்கடாத்ரி நாயக்கர் அவர்கள். (இவர் பிரிட்டிஷாரிடம் ராவ்பகதூர் பட்டம் பெற்றவர்). பூமிபாலக தாஸ் அவர்கள் தனது பாடல்கள் மூலம் திரைத் துறைக்கு மட்டுமின்றி நாட்டு விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டவர், இவரின் பாடல்களில் இடம்பெற்ற விடுதலை வேட்கை வரிகளின் காரணமாக பிரிட்டிஷ் அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கொடும் சித்திரவதைகளை அனுபவித்தவர். கோவை சிறையில் சரியான உணவு வழங்கப்படாமல் உடல் நலிவுற்று நலிந்த நிலையில் தனது மனைவிக்கு தன் நிலையை விளக்கி எழுதிய கடிதத்தைக் கூட, (முகில் விடுதூது) சீட்டு கவியாக எழுதியவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் குறித்த மேலதிக விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.