சாற்றுக்கவி வெண்பா
“பார்த்தேன் கவிகள் எல்லாம் பஞ்சை வயறு நொந்து
பூத்தேன் வடிந்த புதுமை போல் யாத்த செயல்
எல்லாம் கலை மகளின் இன்பப்
பெருங்கருணை நல்லோர் புகழும் நயம்“
-இடையகோட்டை ஜமீன் பூமி பாலக தாஸ்.
இடையகோட்டை ஜமீன்தார் ராவ்பகதூர் குமார முத்து வெங்கடாத்திரி நாயக்கர் அவர்கள், தமது 12-ஆம் வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டார்.
கோர்ட் ஆஃப் வேர்ட்ஸ்
அன்றைய ஆங்கிலேயச் சட்டங்களின் படி, பெற்றோரை இழந்த ஜமீன்தார் குமார முத்து வெங்கடாத்திரி நாயக்கரை ஆங்கிலேய அதிகாரிகள் கோர்ட் ஆஃப் வேர்ட்ஸ் என்ற அதிகாரத்தின் கீழ் மதுரை, பசுமலைக்கு அழைத்துச்சென்று தங்களின் பராமரிப்பில் வளர்த்தனர். இடையகோட்டை ஜமீன், திண்டுக்கல்லில் இருந்து மெங்கில்ஸ், ஸ்மித் ஆகிய இரு அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டது.
பசுமலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குமார முத்து வெங்கடாத்திரி நாயக்கர் அவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு ஆங்கிலக்கல்வி புகட்டப்பட்டது. முரட்டு மீசை முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதி, தமிழாசிரியராகப் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தனது உயர்கல்வியை முடித்தார்.
இளமையிலேயே ஆங்கிலக்கல்வி பயின்றதாலும், ஆறு ஆண்டுகள் ஆங்கில அதிகாரிகளிடம் வளர்ந்ததாலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் ஆற்றல் பெற்றவரானார். தனது 18-வது வயதில் இடையகோட்டை ஜமீன்தாராகப் பொறுப்பேற்றார்.
ஆறடிக்கும் குறைவில்லாத உயரம், அகன்ற மார்பு, விரிந்த தோள்கள், முழங்கால் தொடும் நீண்ட கரங்கள், பொன்னிரமேனி, தலையில் வெண்ணிற மகுடம், கம்பீரப்பார்வை, முறுக்கு மீசையுடன், இடையில் தொங்கும் நீண்ட வாளை வலது கையில் பற்றியபடி, இடையகோட்டை, அரண்மனை முன்மண்டபத்தில் படமாகக் காட்சிதருகிறார் ஜமீன்தார் குமார முத்து வெங்கடாத்திரி நாயக்கர் அவர்கள்.
இடையகோட்டை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பொற்காலம் அவரது ஆட்சிக்காலம்.
சமஸ்தானக் கவிஞர்
இடையகோட்டை, அரண்மனையில் பத்துக்கும் மேற்பட்ட புலவர்கள் சமஸ்தானக் கவிஞர்களாகப் பெருமை பெற்றனர். அவர்களில் கம்பனைப் போல் கவிபாடு்ம்திறன் பெற்றவரும், புதுக்கம்பன் என்று புலவர்களால் போற்றப்பட்ட,கடத்தூர் பூமி பாலகதாஸ் அவர்கள் முதன்மையானவர். ஜமீன்தார் குமார முத்து வெங்கடாத்திரி நாயக்கர் அவர்களைப் பாராட்டி கவிஞர் பூமி பாலகதாஸ் அவர்கள் எழுதிய கவிதைகளில் ஒன்றைத்தான் இந்தப் பதிவின் முகப்பில் உள்ளது.
பூமி பாலகதாஸ் திரைப்படப் பாடலாசிரியர்
திரைப்படங்கள் ஊமைப்படங்களாகத் தொடங்கி பேசும் படங்களாக வளர்ந்தபோது கதையின் சுவைகூட்டபாடல்கள் சேர்க்கப்பட்டன. .வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா என்ற துப்பறியும் நாவலைத் தழுவி டி.கே.எஸ்.சகோதரர்களால் மேடையேற்றப்பட்ட மேனகா என்ற நாடகம் . ராஜா சாண்டோ இயக்கத்தில் 06.04.1935 அன்று மேனகா என்ற பெயரிலேயே திரைப்படமாக வெளியானது. இத்திரைப்படத்தில் பாடல் எழுதியதன் மூலம் முதல் தமிழ் திரைப்படப் பாடலாசிரியரானார் கவிஞர் பூமி பாலகதாஸ் அவர்கள்.
மெரிலேண்ட் சுப்ரமணியம் தயாரித்த லட்சுமி அல்லது ஏழை ஹரிஜனப்பெண் படத்தில் தீண்டாமை வேண்டாமே என்ற பாடலை எழுதியதன் மூலம் அண்ணல் காந்தியடிகளின் தொண்டரானார்.
விடுதலைப் போரில்..
ஆங்கில அரசுக்கெதிராக கனல்கக்கும் பாடல்களைப் பாடி நாட்டுமக்களின் உள்ளத்தில் சுதந்திரக் கனலை கொழுந்து விட்டு எரியச் செய்தார். கொந்தளித்த ஆங்கில அரசு அவரைக் கைது செய்து கோவைச்சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது.
இறுதிக்காலம்
சமஸ்தானக் கவிஞராக, திரைப்படப் பாடலாசிரியராக வளமாக வாழ்ந்த பூமி பாலகதாஸ் அவர்கள் சிறையில் தான் அடைந்த சித்திரவதைகளை முகில் விடு தூது என கவிதையாக்கினார். படிப்போர் கண்களைக் கசியச் செய்யும் அந்த கவிதை இதோ,
முகில் விடு தூது
”முகிலே முகிலே முந்நீர் முகிலே
நீயும் நின்நேசனாம் நெடுந்திரைக் காற்றும்
தெற்குத் திக்கினை நோக்கிச் செல்வீராயின்
எம்மூர் கடத்தூர் இதம்பெறப் புக்கி
செம்மைகூர் சிற்றில் சீர்புதுமாடம்
முகடு பிரிந்து முன்றில் கதவு
இல்லா நிலையம் பந்தல் வீட்டைப்
பார்த்துள் நுழைந்து
பொன்னும் வெள்ளியும் பூணா ஒரு பெண்
மன்னிய தலைக்கு எண்ணெயும் இல்லாள்
வாடிய கொடியென வைகிய மங்கை
அன்னவள் எந்தன் ஆருயிர் காதலி
அவள்பால் என்னைக் கண்டனன் என்றும்
உத்தமர் காந்தியின் உயரிய சொற்படி
சத்தியப் போரினில் சார்ந்துள்ளேன் அதனால்
கோவையம்பதியில் கொடுஞ்சிறை தன்னில்
தாய் வயிற்றுற்ற சேயெனப்பந்தம்
யாவும் நீத்து ஆடையும் பாதியாய்
ஈயத் தகட்டின் ராஜமுத்ராங்கம்
ஏழாயிரத்து எழுநூற்று இருபத்து
ஏழாம் நெம்பர் கைதியாகி
கம்பளிச் சாக்கில் கண்துயில் கொணடும்
மூட்டுப்பூச்சியின் வாட்டுக்கிரங்கியும்
தண்டங்கீரைச் சாறொரு போதும்
தவறா உணவில் காலங்கழிப்பதாய்
மாறா அன்பில் மகிழ்ந்து கூறுதும்
அறவோன் திருவடி ஆணையாணையே”
-பூமி பாலக தாஸ்
சிறைக்காவலர் தாக்கியதில் காது கேட்கும் திறனையிழந்த பூமி பாலக தாஸ் அவர்கள், சாலையில் நடந்து செல்லும்போது அடையாளம் தொியாத வாகனம் மோதியதில் மரணமடைந்து ஊடக வெளிச்சமில்லாத லட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரா்களின் பட்டியலில் ஐக்கியமானதுதான் சோகம்.
கட்டுரையாளர்
மு.முகமது இஸ்மாயில்,
நெடுஞ்சாலைத்துறை (பணிநிறைவு)