IDAYAKOTTAI - கருமலை என்ற பதிவின் தொடர்ச்சி.........
இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்று மலைகள். ஒவ்வொரு மலையிலும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பல பொருட்கள் கிடைக்கின்றன. அரியவகை மரங்கள், மூலிகைத் தாவரங்கள், நீரூற்றுகள் எனப்பல பொக்கிஷங்கள் ஒவ்வொரு மலையிலும் இருக்கின்றன. அந்த வகையில் பல்வேறு தாவரங்களும், மயில், வானம்பாடி, பலவண்ண தேன்சிட்டுகள் மற்றும் குருவியினங்கள் முயல் உள்ளிட்டவற்றின் புகலிடமாக நமது கருமலை திகழ்கிறது .
பண்டைய சேர, சோழ, பாண்டிய அரசுகள் புகழ்பெற்று விளங்கிய காலத்தில் அந்த அரசுகளின் கீழடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றரசுகள் இன்றைய மாநிலங்கள், யுனியன் பிரதேசங்களைப்போல் அதிகாரம் பெற்றுத் திகழ்ந்தன.
”மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக்
கதித்துள வெள்ளமலை பெரும் பாலை கவின் வடக்குவிதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவி விண்ணோர்
மதித்திட வாழ்வு தழைத்திடுநீள் கொங்கு மண்டலமே”
-கொங்கு மண்டல சதகம்.
மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதுக்கரை (குளித்தலை அருகில் உள்ளது) வடக்கே பெரும்பாலை (தொப்பூர் மலை) தெற்கே பழநிமலை ஆகிய எல்லைக்குட்பட்ட பகுதி கொங்கு மண்டலமாக அறியப்படுகிறது. இந்த கொங்கு மண்டலத்தில் 24 சிற்றரசுகள் நிலவின.
தெற்கில் பன்றிமலை, மேற்கில் விருப்பாட்சி, வடக்கில் ரெங்கமலை, கிழக்கில் நமது கருமலை என பண்டைய கொங்கு மண்டலத்தில் சிறப்புப் பெற்ற அண்ட நாட்டின் கிழக்கு எல்லை நமது கருமலையாகும்.
அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்த மைசூர் புலி திப்புவின் நேசரும், ஓடாநிலை பெற்ற கொங்கு நாட்டுத் தீரன் சின்னமலை அவர்கள், திப்புவின் வீரமரணத்துக்குப்பின் வெள்ளையரின் காட்டுமிராண்டித் தாக்குதல் காரணமாக தனது கோட்டையை இழந்தபிறகு்ம் மீண்டும் வெள்ளையரைத்தாக்குவதற்காக கருமலையில் பதுங்கியிருந்துதான் படைதிரட்டினார். அவரின் நம்பிக்கைக்குரிய சமையல்காரனான சாமியப்பனால் காட்டிக்கொடுக்கப்பட்ட தீரன் சின்னமலை அவரகள் கைது செய்யப்பட்டதும் கருமலையில்தான்.
கருமலைக்கு இணையாகச் செல்லும் ஏழாம்எண் (NH-7) தேசிய நெடுஞ்சாலைதான் இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எனபது கொசுறு தகவல்.
ஆதார நூற்கள்
கொங்கு நாட்டு வரலாறு (1954) ராமச்சந்திரன் செட்டியார்
கொங்கு நாட்டுத் தீரன் (1969) கே.ஏ. மதியழகன்
கொங்கு மண்டல சதகம்
படங்கள் உதவி
திரு.சீனிவாசன் இடையகோட்டை நம்ம ஊரு முகநூல் பக்கம்
நன்றி https://www.tamildigitallibrary.in