திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களிலிருந்து நமது ஊருக்குள் நுழையும்போது மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள மரத்தடிதான் இது. பல்லாண்டுகளாக நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் வருவோர் இளைப்பாறும் இடம். பழனி செல்லு்ம் உள்ளூர்- வெளியூர் பக்தர்களும் வழிபடும் கோயில் அமைந்துள்ள அழகிய மரத்தடி இது.
அதே சாலையில் இன்னும் சற்று முன்னேறிச் சென்றதும் எதிர்ப்படும் இந்த வேப்பமரம் சுமார் நூறாண்டுக்குமேல் வயதுடையது. புகழ்பெற்ற நாகூர் தர்ஹாவில் அடங்கியுள்ள மகான் அப்துல் காதிர் வலீயுல்லாஹ் அவர்களின் நினைவாக சிறிய மினராவுடன் கூடிய திண்ணை 1935-ஆம் ஆண்டு பாவா ராவுத்தரால் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாகூர் தர்ஹாவில் சந்தனக்கூடு உரூஸ் விழா நடைபெறும் நாளன்று இங்கு துஆ ஓதி பானகம் வழங்கப்படுவது வழக்கம். இந்த மேடைக்கு எதிரில் உள்ள மைதானத்தில் சுமார் அரை நூற்றாண்டுக்கு முந்தைய அரசியல் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றதுண்டு. இங்கு முழங்கியவர்களில் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோர் முதன்மையானவர்கள்.
இடையகோட்டை, நங்காஞ்சி ஆற்றின் மேற்கு கரையில், காலவெள்ளத்தில் எஞ்சிய தடயங்களின் அடையாளமாய் கற்திட்டாக மிச்சமிருக்கும் கோட்டைச்சுவரின் அருகிலமைந்துள்ள அரசமரம் இது. கடந்தநூற்றாண்டின் அனல் பறந்த அரசியல் சூறாவளிகளின் மையப்புள்ளி இந்த மரத்தடியாகும். ஜமீன் குமாரமுத்து படித்துறை, பாவாராவுத்தர் திடல் என்றழைக்கப்பட்ட இந்த மரத்தடியில்தான் காங்கிரஸ் கட்சியும் திராவிட இயக்கமு்ம் போட்டிபோட்டு மக்களை தம்பால் ஈர்த்தன. இந்த மரத்தடியில் நடந்த கலைஞரின் தூக்குமேடை நாடகம் வயதான பெரியவர்களின் எண்ண அலைகளில் இன்றும் சுழன்றடிப்பவை. இங்கு மேடையேறாத தலைவர்களே இல்லை என்னுமளவிற்கு பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், வாய்மையாளர் சாதிக்பாட்சா, ரகுமான்கான் ஆகியோர் நமது ஊர் மக்களை நேரில் சந்தித்த இந்த மரத்தடியில் 2010-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நினைவாக உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மரத்தடிகளில் இளைப்பாறுவோம்...........