சனி, 17 ஜூன், 2023

IDAYAKOTTAI அக்கம் பக்கம்- ஆயக்குடி இலவச பயிற்சி மையம்












 ஏப்பா என்னப்பா எழுதி இருக்க!

ஏப்பா சொன்னத விட்டுட்டு எண்ணத்த எழுதி இருக்க!!
 
தேவையில்லாதத படிக்காதப்பா!
 
பாட புத்தகத்தை மட்டும் படி!
 
நான் கொடுக்குற குறிப்புகள கவனமா ஞாபகம் வச்சுக்க,
 
தேவையில்லாம கத்தை கத்தையாக புக்கு வாங்கி காச வேஸ்ட் பண்ணாத,
 
இப்படி ஒரு மனிதர் காலையில் 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி சில சமயம் ஆறு மணி வரைகூட பாடம் நடத்த முடியுமா? அதுவும் பத்து பைசா ஊதியம் வாங்காமல்- இலவசமாக,

"முடியும்" என சாதித்துள்ளார், ஆயக்குடி இலவச பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு. ராமமூர்த்தி அவர்கள். 
    பழனியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ளது பழைய ஆயக்குடி ரயில்வே கேட். இங்கே உள்ள நந்தவன மரத்தடி தான் அவர் பாடம் நடத்தும் ஆயக்குடி மரத்தடி மையம் கல்விக்கூடம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக வகுப்பு நடத்துகிறார். 
    அவரும், அவருடைய தோழர்களும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை உருவாக்கியுள்ளனர். எவ்வித எதிர்பார்ப்புமின்றி பாடங்கள் நடத்தப்படுகின்றன. போட்டித் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்று திணறும் யார் வேண்டுமானாலும் அவரது பயிற்சி மையத்தில் சேர்ந்து இலவசமாக பயிற்சி பெறலாம். மேலும்  முப்பதுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்கள், டெலிகிராம் குழு மூலமாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் மீது மிகுந்த அக்கறையும் பொறுமையுடனும் கண்டிப்புடனும் பாடங்கள் நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே. மாணவர் நலன் கருதி போட்டித்தேர்வு முறை, பாடத்திட்டம் போன்ற விவகாரங்கள் தொடர்பாக அரசுக்கும், TNPSC, TRB, TNUSRB உளளிட்ட தேர்வாணையங்களுக்கும் பலகோரிக்கைகளை முன்வைத்து வென்றெடுத்துள்ளார்  ஞாயிற்றுக்கிழமை மட்டுமே நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் ஒவ்வொரு வாரமும் சுமார் 3000 பேர் வரை பயிற்சி பெறுகின்றனர். வாரத்தில் ஆறு நாட்கள் பாட குறிப்புகளை தயார் செய்து அச்சிட்டு, ஞாயிற்றுக்கிழமை வரும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றார். இங்கு பயிற்சி பெற்று தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் இந்தப் பாடக்குறிப்பை அச்சிட்டு பயிற்சி மையம் சார்பில் வழங்குகினர். லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற உறுதி மொழியை மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு என்னைப்போன்ற எண்ணற்ற அரசு ஊழியர்களை உருவாக்கிய மரியாதைக்குரிய எனது ஆசிரியர் திரு ராமமூர்த்தி சார் அவர்களுக்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 வாழ்த்துக்கள் 
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சை.ஷாகுல் ஹமீது,
இடையகோட்டை.