வியாழன், 14 செப்டம்பர், 2023

IDAYAKOTTAI - கால்நடை வளா்ப்பு - மாடுகள்

             இடையகோட்டையில் விவசாயத்திற்கு இணையான கால்நடை வளர்ப்பு தொழில் மிக முக்கியமானதாக இருந்துள்ளது. இந்த அரண்மனையில் நாட்டு மாடுகள் இங்கு வளர்க்கப்பட்டு, இங்கு பிறந்த கன்று குட்டிகளை ஒவ்வொரு பண்ணைகளுக்கும் அனுப்பப்படும். காங்கேயம் காளைகளுக்கு இணையான பசுமாடுகள் இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. ஒவ்வொரு வகை மாடுகளும் ஒவ்வொரு பண்ணையில் வைத்து பராமரிக்கப்பட்டன.

காளைகள், நாரணப்பநாயக்கன்பட்டி (மேற்கு) பண்ணையிலும்,  பசுமாடுகள்  பங்களா (கிழக்கு) பண்ணையிலும்,  பால் வற்றிய   (வற்றக்கறவை) மாடுகள் (மேல, கீழ்) பண்ணைகளிலும், கருவுற்ற பசுக்கள்  அணை வயல் பண்ணையிலும் பராமரிக்கப்பட்டன. 

இந்த மாடுகளை பராமரிப்பதற்கு நாயக்க சமுதாய மக்களே நியமிக்கப்பட்டனர். இவர்கள் மருநூத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களிலும் குடியமர்த்தப்பட்டனர்.

இந்த மாடுகளில் இருந்து பெறப்படும் பாலில் இருந்து  பிள்ளைப்பால் என்ற பெயரில் பச்சிளம் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினசரி தானமாக வழங்கப்பட்டது. மதிய நேரத்தில் குழந்தைகளுக்காக பிள்ளை சோறு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பண்ணையில் பணியாற்றும் ஊழியர் முதல் காவல் காக்கும் நாய்கள் வரை அரண்மனையில் உணவு தயாரிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது.

              இடையகோட்டை- திண்டுக்கல்  நெடுஞ்சாலையில் உள்ள பங்களாபண்ணையிலிருந்து, விழாக்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக மாடுகள் அழைத்து வரப்படும்போது   முதல் மாடு இடையகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து, கடைசி மாடு பங்களா பண்ணை வரை (சுமார் 3 கி.மீ.) அணிவகுப்பு நீண்டிருக்கும்.  





         இந்த மாடுகளைப் பராமரிப்பதற்காகவே ஜமீனுக்குச் சொந்தமான  நிலமும், கட்டடமும் இலவசமாக வழங்கப்பட்டு கால்நடை மருத்துவமனை தொடங்கப்பட்டு இன்றளவும் பயன்பாட்டிலுள்ளது. (பழைய கட்டடம் சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டப்பட்டது.) 

 

        ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காணும் பொங்கலன்று மாலை சலகெருது என்னும் எருது தாண்டுதல் நடைபெறும். பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்படும் காளைகள் இடையகோட்டை அரண்மனை கிழக்கு வாசலில் இருந்து ஓடிவந்து மாரியம்மன் கோயில் முன்பு உள்ள சரிவு மேடையில் செங்குத்தாக தாண்டி கோயிலை வலம் வரும். இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகப் பிரபலமான இந்த நிகழ்ச்சி கடைசியாக 1989-ஆம் ஆண்டு  நடைபெற்றது

    

     பசுமைப் புரட்சியால்  பாரம்பரிய விவசாயமும், வெள்ளிப்புரட்சியால் நாட்டுக்கோழி முட்டைகளும் செல்வாக்கு இழந்ததுபோல வெண்மைப் புரட்சியால் பால் உற்பத்திக்காக  அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கலப்பின மாடுகளின் மூலம் அதிக பால் உற்பத்தி கிடைத்ததால், குறைந்த ஆனால் ஊட்டச்சத்து மிகுந்த பால் தரும் நாட்டு மாடுகளின் வளர்ப்பில் தொய்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட நாட்டு மாடுகள் இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டதுதான் வேதனை.

   

        எனினும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பிறகு தமிழகமெங்கும் பாரம்பாிய முறையிலான வேளாண்மை, கால்நடை வளர்ப்பு தொழில்கள் மீது மக்களின் பார்வை திரும்பியுள்ளது ஆறுதலான செய்தி.