புதன், 25 அக்டோபர், 2023

IDAYAKOTTAI உரூஸ் கந்தூரி

 #இடையகோட்டை_உரூஸ்

இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் தூய பணியை செய்து வந்த ஆன்மீக ஞானிகள் அவுலியாக்கள் எனப்படும் இறைநேச செல்வர்கள்.
இவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் சென்று ஆன்மீக சேவை ஆற்றுவது மட்டுமே தங்களது லட்சியமாகக் கொண்டிருந்தனர். இத்தகைய மகான்கள் மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டு மக்களோடு மக்களாக பழகி அவர்களிடம் ஆன்மீக நெறியை வாழ்வியலாக வாழ்ந்து காட்டியவர்கள். நமது நாட்டில் பெரும் பகுதிகளில் இவர்களது சேவை மூலமாகவே இஸ்லாம் பரவியது என்பது மறுக்க முடியாத உண்மை.
குறிப்பாக டெல்லியில் ஹஜ்ரத் நிஜாமுதீன் ஆலியா (ர. அ.) அவர்கள், ராஜஸ்தானின் அஜ்மீரில் காஜாமுதீன் சிஸ்தி (ர. அ.) அவர்கள்,  பஞ்சாப் பகுதிகளில் பாபா பரிதுத்தீன் (ர. அ.) அவர்கள், தமிழகத்தில் நாகூர் அப்துல் காதர் சாகுல் ஹமீது (ர. அ.) அவர்கள் உள்ளிட்ட பெயர் தெரிந்த பெயர் தெரியாத பல்வேறு மகான்கள் வாயிலாகவே இஸ்லாமிய நெறிகள் எளிய மக்களைச் சார்ந்தன.
இவர்களின் உள்ளம் பரந்து விரிந்தது இவர்களின் பலர் கவிஞர்களாகவும் மருத்துவர்கள் ஆகவும் இருந்துள்ளனர் இத்தகைய மகான்கள் மரணம் அடைந்ததும் அவர்கள் மரணம் அடைந்த அதே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டு நினைவிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வில் துயரங்களை நன்கு அறிந்து அதற்குரிய ஆலோசனைகளை, தீர்வுகளை வழங்கிய இந்த மகான்களின் மீது பேரன்பு கொண்ட மக்கள் இவர்களின் நினைவு நாட்களில் ஏழை எளியவருக்கு உணவளித்து மகிழ்வதே கந்தூரி எனப்படும் அன்னதானம்.
நாடு முழுக்க வெவ்வேறு ஊர்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்து மறைந்த மகான்களின் நினைவு நாளை ஹிஜ்ரி காலண்டரின் அடிப்படையில் அனுசரித்து கந்தூரி ஜியாரத் எனப்படும் அன்னதான பெரு விழாக்கள் நடைபெறுகின்றன. இந்த விழாக்கள் உரூஸ் விழா என பெயர் பெற்று திகழ்கின்றன. நாளடைவில் இந்த விழாக்கள் சற்றே ஆடம்பரம் மிகுந்ததாக மாறிவிட்டாலும் அடிப்படையான கந்தூரி அன்னதானம் நிகழ்ச்சி மட்டும் இன்றுவரை மாற்றங்கள் இன்றி நடைபெறுகிறது.
அரேபியா, ஆப்பிரிக்கா, சீனா என பல்வேறு நாடுகளில் ஆன்மீகப் பணி செய்த முகையதீன் அப்துல் காதர் ஜீலானி(ர. அ.) அவர்கள்  நேரடியாக இந்தியாவில் ஆன்மீக சேவை செய்யாவிட்டாலும், அன்னாரது சீடர்கள் நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் சேவையாற்றியுள்ளனர் எனவே இந்தியா முழுவதும் அவர் மீதான அபிமானிகள் இலட்சக் கணக்கில் உள்ளனர் அதில் இடையகோட்டை மக்களும் உண்டு. அன்னாரின் நினைவு நாள் ஹிஜ்ரி காலண்டர் படி ரபியுல் ஆகிர் பிறை 10 அன்று நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் கொண்டாடப்படுவது போல் நமது ஊரிலும் சற்று விமரிசையாகவே கொண்டாடப்படுகிறது இன்று மாலை துவங்கும் நிகழ்ச்சிகள் ஞாயிறு மாலை கொடி இறக்கத்துடன் முடிவு பெறுகின்றன. இந்த நாட்களில் இடையகோட்டை முஹைதீன் ஆண்டவர் தர்காவில் நடைபெறும் கந்தூரி அன்னதான நிகழ்வுகளில் சாதி- மத பேதம் பணக்காரன்-ஏழை என்ற பாகுபாடு ஏதும் இன்றி அனைத்து மக்களும் உணவு அருந்தி செல்வதும் பாத்திரங்களின் உணவை பிரசாதமாக பெற்று செல்வதும் சிறப்பு. வெளியூரிலிருந்து இந்த விழாவிற்காக வருபவர்கள் உணவு குறித்த அச்சமின்றி வரும் அளவிற்கு சிறப்புடன் நடைபெறுவது இங்கு மட்டுமே இடையகோட்டை காரர்கள் எந்த ஊரில் வசித்து வருபவர்களாக இருந்தாலும் அவர்கள் மனதில் இடையகோட்டை முகைதீன் ஆண்டவர் உருஸ் விழா சிந்தனைகள் என்றைக்கும் மாறாது பக்ரீத் பண்டிகை முடிந்த சில நாட்களிலேயே வெளியூரில் வசிக்கும் இடையகோட்டை வாசிகளின் சிந்தனை உரூஸ் விழா மோடுக்கு (mode) மாறிவிடும் இத்தனைக்கும் இரு பண்டிகைகளுக்கும் இடையே சுமார் மூன்றரை மாதங்கள் இடைவெளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ இன்று மாலை தொடங்க இருக்கும் உரூஸ் விழாவிற்காக வெளியூர் வாழ் இடையகோட்டை மக்கள் வர தொடங்கி விட்டனர். நான்கு நாட்களுக்கு இடையகோட்டை தற்காலிகமாக கிராமத்திலிருந்து நகரமாக புரமோட்டாகிவிடும். விழா முடிந்து பிரசாதமாக பெற்றுச்செல்லும் சந்தனத்தில் உருஸ் விழா நினைவுகளின் நறுமணம் சற்று தூக்கலாகவே இருக்கும்.

குறிப்பு பல நூற்றாண்டுகளாக நம் நாடு முழுவதும் இந்த முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி உரூஸ் விழா என்ற பெயரில் தமிழகத்திலும், கியார்வீன் என்ற பெயரில் வட இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறைகள் பட்டியலில் கியார்வீன் பண்டிகையும் (ரபியுல் ஆகிர் பிறை 10) உள்ளது.

உரூஸ் விழாவிற்காக வருகை தரும் இடையகோட்டை மண்ணின் மைந்தர்களனைவரையும்
 வருக வருக
 என அன்புடன் வரவேற்கிறது இடையகோட்டை வலைப்பூ

 https://idayakottai.blogspot.com.

ர. அ. என்பதன் விரிவாக்கம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அதாவது அவர்களுக்கு இறைவன் அருள் புரிவானாக என்பதாகும்