புதன், 30 அக்டோபர், 2024
வெள்ளி, 11 அக்டோபர், 2024
IDAYAKOTTAI உப்பும், ஊரும்
"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே”
என்ற பழமொழி ஒன்று போதும் சமையலில் உப்பின் அவசியத்தைக் கூற.
உலக முழுவதும் இயற்கையாக அதிக அளவில் கிடைக்கும் வேதிப் பொருளாக உப்பு உள்ளது. புவிப்பரப்பில் பெருமளவு வியாபித்துள்ள சாதாரண கடல்நீரில் உப்பின் அளவு 3.5 சதவீதமும், இஸ்ரேல்-ஜோர்டான் எல்லையில் அமைந்துள்ள சாக்கடலில் சுமார் 30 சதவீதமும் உள்ளது.
பழங்காலந்தொட்டு இன்று வரை உப்பின் பயன்பாடு அளப்பரியது. உணவில் சுவைகூட்ட மட்டுமின்றி பல்வேறு உணவுப் பதார்த்தங்களை பதப்படுத்திட உப்பு முதன்மை வேதிப் பொருளாக உள்ளது. குறிப்பாக உப்பு மூலம் பதப்படுத்திய மீன் (கருவாடு), இறைச்சி (உப்புக்ண்டம்), காய்கறிகள் (ஊறுகாய்) ஆகியவை இன்றும்கூட மக்களின் விருப்ப உணவுப் பட்டியலில் முதன்மை வகிக்கின்றது.
பல்வேறு நாடுகளில் கலாச்சாரம் சார்ந்த விசேஷங்களில் அன்பளிப்பாக வழங்கப்படும் மதிப்பு மிக்க பொருளாக உப்பு கருதப்பட்டது.
அதனால்தான் நபிகள் நாயகம் அவர்கள்கூட ” நீங்கள் விருந்திற்கு அழைக்கப்பட்டால் விருந்தில் உப்பையும், தண்ணீரையும் தவிர வேறு எதையும் கேட்காதீர்கள் அது நாகரீகமல்ல” என அறிவுறுத்தியுள்ளார்கள்.
சமையலில் மட்டுமல்ல சரித்திரத்திலும் உப்பிற்கென தனியிடமுண்டு.
கடற்கரை பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தயாரிக்கப்பட்ட உப்பு, மற்ற பகுதிகளில் விநியோகம் செய்திட பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன.
உப்பு வணிகத்தை கைப்பற்றவும், காப்பாற்றவும் பழங்கால அரசுகளுக்கு இடையே போர்களும், உயிரிழப்புகளும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்தன.
பண்டைய காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மௌரிய அரசில் உப்புக்கு வரி விதிக்கப்பட்டதை கௌடில்யரின் "அர்த்த சாஸ்திரம்" குறிப்பிட்டுள்ளது. பின்னர் வந்த அரசுகளும் இந்த நடைமுறையை கடைப்பிடித்தனர்.
சிறிய ராஜ்யங்களில், ராஜ்யங்களுக்கிடையே கொண்டு செல்லப்படும் போதும் தனித்தனியாக உப்பு வரி வசூல் செய்யப்பட்டது.
இந்த உப்பு வரி மூலம் அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் கிடைத்தது இத்தனைக்கும் முகலாயர் ஆட்சி கால இறுதிவரை உப்பு வரியின் அளவு அதிகபட்சம் ஐந்து சதவீதத்தை தாண்டாமல் இருந்தது
நாடு பிடிக்க முயன்ற வெள்ளையர்களின் முதல் இலக்காகவும் உப்பு வரி திகழ்ந்தது பிளாசி போரில் சிராஜ் உத் தௌலாவை வீழ்த்தி வெற்றி பெற்ற ராபர்ட் கிளைவ் உப்பு வணிகத்தை கிழக்கிந்திய கம்பெனியின் முழுமையான அதிகாரத்துக்குள் கொண்டு வந்தான்.
அதன் விளைவு உப்பு மீது விதிக்கப்பட்ட வரி கொடூரமாக அதிகரிக்கப்பட்டது உப்பு உற்பத்தியாளர்களும் வணிகர்களும் கடுமையாக பிழிந்து எடுக்கப்பட்டனர் மேலும் உப்பு வரியில் கிடைத்த வருவாயை கண்ட கிளைவ் தனியாக புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்கி உப்பு வணிகத்தை தன்னுடைய கைக்குள் கொண்டு வந்ததன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு இணையான கொள்ளை லாபத்தை அடைந்தான். ஏறத்தாழ 30 சதவீதம் வரை எகிறிய இந்த கொடூர வரி விதிப்பின் காரணமாக வங்காளத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.
(தொழிற்சாலைகள் என்ற பெயரில் உப்பு உற்பத்தி நிலையங்களை தன் வசப்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதித்த வரலாற்றின் கொடூர கொள்ளையர்களில் ஒருவனான ராபர்ட் கிளைவ் இந்தியாவில் அதிகார துஷ்பிரயோகம் செய்து சொத்துக்களை குவித்ததாக லண்டனில் வழக்கு விசாரணைக்கு ஆளாகி மறை கழன்று தற்கொலை செய்து கொண்டான்.)
இது எல்லாவற்றையும் விட மிகக் கொடூரமான செயலை வெள்ளையர்கள் செய்தனர் அதுதான் கடற்கரையை அதிகம் கொண்டிருந்த தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவிற்கு உப்பு கொண்டு செல்வதை தடுப்பதற்கு உலகில் எங்கும் கேள்விப்படாத ஒரு காரியமாக இந்தியாவை இரண்டாகப் பிரிக்கும் வகையில் கிழக்கிலிருந்து மேற்கு வரை கடும் பாதுகாப்புகளுடன் கூடிய மிகப்பிரம்மாண்டமான முள்வேலி அமைத்தனர்.
இன்றைய பாகிஸ்தானின் சிந்து பகுதியிலிருந்து தற்போதைய ஒடிசா வரை சுமாராக 3700 கிலோமீட்டர் நீண்ட இந்த வேலியில் ஆங்காங்கே சுங்கச்சாவடி அமைத்து வரி வசூல் செய்தனர். இந்த புதர் வேலியை பாதுகாக்க 12000 பேர் பணியாற்றினர். நமது நாட்டின் இயற்கை வளங்கள் எந்த அளவிற்கு கொள்ளையடிக்கப்பட்டன என்பதற்கு வெள்ளையர் வசூலித்த உப்பு வரியும் உப்பு வேலியும் மிகச்சிறந்த ஆதாரங்கள்.
உப்பு வரியின் மூலம் மிகப்பெரும் ஆதாயத்தை அடைந்த கம்பெனியினர் ஒருபுறம் என்றால் மிகக் குறைந்த ஈன விலைக்கு உற்பத்தி செய்து தர வேண்டிய இன்னலுக்கு ஆளான இந்திய உப்பு உற்பத்தியாளர்கள் மறுபுறம். இவ்விருவருக்கும் மத்தியில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு உப்பை எடுத்துச் சென்று விநியோகிக்கும் உப்பு வியாபாரிகளின் பாடு சொல்லும் தரம் அன்று. (இதில் உப்பு மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகளுக்கு உரிமம் வேறு வழங்கப்பட்டது)
இந்த தேசம் விடுதலை பெற வேண்டுமானால் எளிய மக்களின் ஆதரவும் வேண்டும், அதே சமயம் பிரிட்டிஷ் அரசின் வருவாய் ஆதாரத்தையும் தகர்க்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் மகாத்மா காந்தியடிகள் தொடங்கியதுதான், அன்றைய பிரிட்டிஷ் அரசை கதிகலங்கச் செய்த "" உப்புச் சத்தியாக்கிரகம்"" ஆகும்.
நாடு அடிமைப்படுவதற்கும், பின்னாளில் விடுதலை பெறுவதற்கான போராட்டத்திலும் ஒரு முக்கிய காரணியாகத் திகழ்ந்தது உப்பு என்றால் அது மிகையில்லை.
இன்று சாதாரண பெட்டிக்கடைகளிலும் எளிதாக கிடைக்கும் உப்பால் கரைந்து போன சாம்ராஜ்யங்கள் எண்ணற்றவை.
பல்வேறு இன்னல்களைத் தாங்கி, உப்பு வணிகத்தில் ஈடுபட்ட உப்பு வியாபாரிகள் என்ன ஆனார்கள்?.
உப்பு உற்பத்தி, வியாபாரம் பரவலாக்கப்பட்டதில் தங்கள் தொழில்களை மாற்றிக் கொண்டு விட்டனர்.
என்றாலும், உப்பு வணிகர்களின் வாரிசுகள் தமிழகத்தின் பண்டைய வணிகப் பெருவழியில் அமைந்த நமது இடையகோட்டையில் உப்புக்கார வகையறா என்ற பெயரிலும், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் உப்புக்காரச்சி வகையறா என்ற பெயரிலும் வசித்து வருகின்றனர்.
ஆதார நூல். ராய் மாக்சிம் எழுதிய "உப்பு வேலி"
--சை ஷாகுல் ஹமீது,
9442326015.