நமது ஊரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டங்கள் பல உள்ளன. இவை இன்றைக்கும் பார்க்க கம்பீரமாகவும், கலைநயமிக்கதாகவும் காட்சியளிக்கின்றன.
அவற்றில்
இடையகோட்டை ஜும்ஆ பள்ளிவாசல், ஜமீன் அரண்மனை, முன்னாள் சட்டமன்ற
எதிர்க்கட்சித் தலைவர் காலஞ்சென்ற K.S.G.ஹாஜாசரீஃப் அவர்களின் (வடக்கு
மெத்தை) வீடு, K.V.K.M.ஷேக்ஃபரீத் வீடு தெற்கு மெத்தை வீடு, துருக்கி நாட்டுக்கான
முன்னாள் தூதர் காலஞ்சென்ற S.H.சையது யூசுஃப் அவர்களின் இல்லம் (கண்ணாடிக்காரர் வீடு) ஆகியவை
குறிப்பிடத்தக்கவை.
இவ்வகை வீடுகள் தற்போதைய கட்டங்கள் போல ஆழமான
அஸ்திவாரம் கொண்டவையல்ல, மாறாக அதிகபட்சமாக 2 அல்லது 3 அடி ஆழத்தில் ஆற்று
மணல் நிரப்பப்பட்டு அதன் மேல் செவ்வகம் அல்லது சதுர வடிவில் பாறாங்கற்கள்
நேர்த்தியாக அடுக்கப்பட்டு இடைவெளிகளில் செம்மண் சாந்து ஊற்றி
வலுவாக்கப்பட்டவை. ஆற்று மணல் மீது அமைக்கப்பட்டதால் நில அதிர்வுகளை
எதிர்கொள்ளும் திறன்மிக்க கட்டுமானங்கள் ஆக உள்ளன. வடக்கு மெத்தை
வீடு, தெற்கு மெத்தை வீடு, கண்ணாடிக்காரர் வீடு போன்ற சில கட்டிடங்கள் பர்மாவில் இருந்து
வரவைக்கப்பட்ட தேக்குகள் கொண்டு நிலை கதவு சன்னல் போன்ற மர வேலைப்பாடுகள்
எழில் மிகு வடிவில் செய்யப்பட்டுள்ளன இவ்வீடுகளின் வெளிப்புற உட்புற
அமைப்புகள் செட்டிநாடு அரண்மனைகளை ஒத்த வடிவமைப்பு கொண்டவை.
சுவர்கள்
குறைந்தபட்சம் இரண்டரையடி தடிமனிலும், திருடர்கள் சுவற்றில் துளையிட்டு
கொள்ளையடிப்பதை தடுக்க செங்கற்களுக்கு இடையே கற்பலகைகள் நிறுவப்பட்டு
இருக்கும். இந்த சுவர்கள் மூன்று செங்கல் வரிசை அல்லது நான்கு செங்கல்
வரிசை கொண்டதாக கட்டப்பட்டுள்ளன ஆனால் தற்போது ஒரு செங்கல் வரிசையில்
மட்டுமே கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
சுவர்கள் செங்கற்களைக் கொண்டு
கட்டப்பட்டு, வெளிப்புறச் சுவர்களில் சுண்ணாம்புக்காரை பூசப்பட்டுள்ளன.
உட்புறச் சுவர்களில் சுண்ணாம்புக் காரையின்மீது முட்டைப்பூச்சு பூசப்பட்டு,
பளபளப்பாகக் காட்சி தருகிறது. வடக்கு மெத்தை வீடு தவிர்த்து மற்ற
பெரும்பாலான கட்டிடங்களில் முட்டைபூச்சுகள் காலப்போக்கில் சுரண்டப்பட்டு
தற்போதைய பெயிண்டுகள் பூசப்பட்டு விட்டன.
சுண்ணாம்பு, மணல்,
கருப்பட்டி, கடுக்காய் ஆகியவற்றை அரைத்து முட்டையின் வெள்ளை கரு சேர்த்து
தற்போதைய டைல்ஸ்களை தோற்கடிக்கும் பளபளப்புடன் முட்டைப்பூச்சு
பூசப்பட்டுள்ளது. இந்தக் கலவை தயாரிப்பதற்காக சுண்ணாம்பு கலவை
அரைக்கும் பிரம்மாண்டமான மாடு பூட்டிய செக்குகள் நமது நங்காஞ்சி ஆற்றின்
மேற்கு கரையில் மசூதிக்கு கிழக்கே நிறுவப்பட்டிருந்தன. சிமெண்ட்
பிரபலமடைந்த பின் 70-களின் இறுதியில் இவை பயன்பாட்டில் இருந்து
அகற்றப்பட்டு விட்டன.
இந்த வீடுகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட
கற்கள் சுமாராக 50 கிலோ முதல் அரை டன் வரை எடை கொண்டவை. இவ்வளவு பெரிய
கற்களை அந்த காலத்தில் முழுவதும் மனித சக்தி கொண்டே கட்டடம் கட்ட
பயன்படுத்தியுள்ளனர்.
சுண்ணாம்பு, செம்மண், ஆற்று மணல் என இயற்கை
கனிமங்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த வகை கட்டடங்கள் தொடர்ந்து
பயன்படுத்தப்பட்டால் பல நூறு ஆண்டுகளுக்கு உறுதியுடன் திகழும். பறவைகளின்
எச்சங்களில் இருந்து பரவும் விதைகள் மழைநீரில் உயிர்ப்பிக்கப்படுவதால்
முளைக்கும் செடிகளை அவ்வப்போது அகற்றாமல் விடுவதே பல கட்டடங்களின்
சிதைவுக்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.
இடையகோட்டை ஜமீன் அரண்மனையின் முன்புறத்தோற்றம்
