இன்னக்கி காவிரிப் பிரச்சினையைப்பத்தி பேசுரமே; சுமார் நூற்றைம்பது வருசத்துக்கு முன்னாடி ஒரு ஓடை யாருக்குச் சொந்தம்னு ரெண்டு ஜமீனுக்கிடையில போர் நடந்த வரலாறே இருக்குது தெரியுமா?
பழனிக்குப் பக்கத்துல ஆயக்குடி மற்றும் விருப்பாட்சி ஆகிய ரெண்டு ஜமீன்களுக்கிடையே ஒரு ஓடை நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சர்ச்சை மோதலாக உருவெடுத்தது.இந்த போரில் விருப்பாட்சி சார்பில் போரிட்ட தளபதி வீரத்துடன் போரிட்டு வெற்றியை நெருங்கிய நிலையில் எதிரணி போர்வீரனின் கொரில்லா முறையில் அவரை வெட்டியதையடுத்து தலை துண்டான நிலையில் வீரமரணம் அடைந்துள்ளார். தலையற்ற அவரது உடலை சுமந்து வந்த அவரது குதிரை அன்னார் வசித்த ஊரில் சேர்த்ததை அடுத்து அங்கு அன்னாரின் நினைவிடம் அப்போதைய விருப்பாட்சி பாளையக்காரரால் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும்வண்ணம் அவரின் வாரிசுகளுக்கு மானியமாக நிலம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியங்களை யாரேனும் அபகரிக்க முயன்றால் அவ்வாறு அபகரிக்க முயல்பவன் அவன் முஸ்லிமாக இருந்தால் புனித மெக்கா நகரில் தனது தாயை கெடுத்த பாவத்தையும், இந்துவாக இருந்தால் அவன் காசியில் வைத்து காராம்பசுவையும் அதன் கன்றையும் கொலை செய்த பாவத்தையும் அடைவார்கள் என்ற எச்சரிக்கையுடன் கல்வெட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடம் ஒட்டன்சத்திரம்-பழனி நெடுஞ்சாலையில் மாட்டுப்பாதை என்னும் இடத்திலிருந்து 4கி.மீ தூரத்தில் போடுவார்பட்டி என்னும் சிற்றூரில் ஒரு வழிபாட்டுத்தலமாக உள்ளது. இங்கு அன்னாரின் போர்வாள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இஸ்லாமிய ஹிஜ்ரி வருடத்தின் ஷவ்வால் மாதத்தில் அன்னாருக்கு விழா நடத்தப்படுகிறது. சையது உஸ்மான் ஷாதுப் பாபுஜி என்ற பெயர் கொண்ட அந்த மாவீரரின் தலை ஆயக்குடியில் போர் நடந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் உள்ளது. மதங்களை கடந்த நட்புக்கும் வீரத்துக்கும் அடையாளமாக திகழ்கிறது போடுவார்பட்டி கிராமம்..
படங்கள்
1.பெயர்ப்பலகை
2. அவரின் போர்வாள்
3. நினைவிடம்
4. அடக்கம் செய்யப்பட்ட இடம்
5. மானிய கல்வெட்டு
படங்கள்
1.பெயர்ப்பலகை
2. அவரின் போர்வாள்
3. நினைவிடம்
4. அடக்கம் செய்யப்பட்ட இடம்
5. மானிய கல்வெட்டு