வியாழன், 27 மே, 2021

IDAYAKOTTAI நீர் மேலாண்மை

விவசாயத்தையும் மேய்ச்சல் தொழிலையும் அடிப்படையாகக் கொண்ட நமது இடையகோட்டையின் தொழில் அபிவிருத்திக்காக பலங்காலந்தொட்டே பல்வேறு நீர்மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவை குறித்த தகவல் துளிகள்

·        கி.பி.1529 இல்விசுவநாத நாயக்கரால் மதுரை நாயக்க அரசு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட இடையகோட்டை பாளையத்தின் முதல் பாளையக்காரரான பெஞ்சை மாக்கைய்ய நாயக்கர் 36 ஆண்டுகளும், அவருக்குப்பின் அவரது மகன் இரக்குடி திப்பைய நாயக்கர் 35 ஆண்டுகளும் பட்டம் வகித்தனர். இவரால் கட்டப்பட்டதுதான் இடையகோட்டை, சின்னப்பாலத்தின் மேற்குப்பகுதியில் திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலாகும். இவருக்குப்பின்னர் இவருடைய மகன் தம்மநாயக்கர் 35  ஆண்டுகள் பட்டம் வகித்தார்.

·        கி.பி.1636 இல் பட்டமேற்று 50 ஆண்டுகள் பட்டம் வகித்த தம்மநாயக்கரின் மகன் தண்டிகை ஏரத்தம்ம நாயக்கர் வெரியப்புரின் வடமேற்கில் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே அணை ஒன்றை கட்டியதுடன் வாய்க்கால் மூலமாக நிரம்பும் வகையில் பெரியகுளம் என்ற பெயரில் குளமும், குளத்தின் மேற்குப்பகுதியில் மல்லிகார்ச்சுன சிவாலயம் அமைத்தார். அதன் சன்னதி முன்பாக தன்னு்டைய உருவ கற்சிலையும் அமைத்துள்ளார்.

·        அடுத்து பட்டமேற்ற அவருடைய மகன் முத்துவெங்கிடாத்திரி நாயக்கர் ஜவ்வாதுபட்டிக்கு தெற்கே அணை கட்டி வாய்க்கால் பாசனம் மூலம் நஞ்சை பாசனம் உருவாக்கினார். ஜவ்வாதுபட்டிக்கு வடக்கே வர்த்தகன் அணை என்ற பெயரில் இன்னொரு அணையும் கட்டினார். இந்த அணைதான் தற்போது நங்காஞ்சி அணையின் மேற்குபுறத்தில் ஜவ்வாதுபட்டி அணை என்ற பெயரில் இன்றும் பயன்பட்டுவருகிறது. இந்த வர்த்தகன் அணையில் இருந்து கிழக்குத்திசையில் வாய்க்கால்மூலம் நிரம்பும் வகையில் அப்புசமுத்திரக்குளம் (பங்களாக்குளம்) என்ற குளமும் வெட்டியுள்ளார்.

·        கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 1686 ஆக இருக்கக்கூடும்) பட்டமேற்ற இவரின் மகன் லட்சுமிபதி நாயக்கர்  ஜவ்வாதுபட்டிக்கு வடமேற்கில் ஓடையாற்றின் குறுக்கே ஒரு அணையும் அதில் இருந்து கிழக்குத்திசையில் வாய்க்கால்மூலம் நிரம்பும் வகையில் மேலைக்குளம் என்ற குளமும் வெட்டியுள்ளார். மேலைக்குளத்தின் வடகிழக்கில் உபரி நீர் நிரம்பும் வகையில் செங்குளமும் அவரால் வெட்டப்பட்டது.  

·        செங்குளக் கிழக்குக்கரையை ஒட்டிய நிலமும் திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்கு மானியமாக லட்சுமிபதி நாயக்கரால் வழங்கப்பட்டது.

·        இடையகோட்டைக்கு வடமேற்கில் பாண்டிய மன்னனால் கூரைக் கட்டடமாக அமைக்கப்பட்ட செல்லாண்டியம்மன் கோயிலை லட்சுமிபதி நாயக்கர் செங்கல்கட்டு காரைக் கட்டடமாகக் கட்டினார். இக்கோயிலின் மேற்குப் பகுதியில்   செல்லாண்டியம்மன் குளம் என்ற பெயரில் குளமும் வெட்டினார். இது தற்போது அம்மச்சி குளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

·        இவரின் மகன் குமார சின்னோப்ப நாயக்கரின் காலத்தில் செல்லாண்டியம்மன் குளத்தின் வடகிழக்கில் ஒரு ஒட்டுக்குளம் வெட்டி மருகால் பாயும்படி செய்தார். இந்தக்குளத்தின் வடிகால் கோவிந்தாபுரம் அருகே நங்காஞ்சியாற்றில் கலக்கிறது.

·        தற்போது இந்த வடிகால் ஓடையே திணடுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களின் எல்லையாக உள்ளது.

நன்றி: பாளையப்பட்டுகளின் வம்சாவளி தொகுதி-4 (வெளியீடு தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.)

நன்றி: தமிழ்நாடு இணையக்கல்விக்கழக மின்னூலகம்.


1 கருத்து:

  1. செல்வராஜ்27 மே, 2021 அன்று 8:28 PM

    இடையகோட்டை நங்காஞ்சி அணைகுறித்தும் எழுதுங்கள்

    பதிலளிநீக்கு