ஞாயிறு, 15 ஜனவரி, 2023

IDAYAKOTTAI - பெயர்க்காரணம்

     பண்டைய தமிழர்களின் வாழ்வியலை தொல்காப்பியம் அகம், புறம் என இரண்டாக வகைப்படுத்துகிறது .தனிமனித ஒழுக்கம், காதல்,கற்புநெறி ஆகியவற்றை அகப்பொருள் எனவும், போர்,வீரம், ஆட்சித்திறம், கொடை உள்ளிட்ட பொது மனித இயல்புகளைக் கூ,றுவது புறப்பொருள் எனவும் சுட்டப்படுகின்றன. இதில் அகப்பொருளில் தமிழ் நிலவகைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து தன்மையதாய் குறிப்பிடப்படுகிறது.

மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி எனவும், 

காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை எனவும், 

வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும், 

 கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனவும், 

குறிஞ்சியும், முல்லையும்  தன் நிலை திரிந்து பாழ்பட்டு வறண்ட நிலமாக மாறும் போது பாலை எனவும் பகுத்துள்ளனர் சான்றோர் .  

 

    சங்ககாலத்தில்  பொதினி  என்று அழைக்கப்பட்ட முல்லை நிலப்பகுதியான தற்போதைய பழனி முதல் இடையகோட்டை வரை பழங்காலத்தில் பொதினி  நாடு என்றும் வையாவி நாடு என்றும் அழைக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் வாழ்வாதாரமாக ஆடு மாடு மேய்த்தல் தொழிலே பிரதானமாக இருந்தது. இன்றைக்கும் இத்தொழில் நிமித்தமாகவே நமது ஊர் இடையகோட்டை என்று அழைக்கப்படுகிறது 

வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்

வட்கார்    மேல்செல்வது    வஞ்சியாம் - உட்கா(து)

எதிரூன்றல்    காஞ்சி    எயில்காத்தல்    நொச்சி

அது    வளைத்த    லாகும்    உழிஞை - அதிரப்     

பொருவது    தும்பையாம்    போர்க்    களத்து    மிக்கோர்     

செருவென்    றதுவாகை    யாம் 

                                                                        -புறப்பொருள் வெண்பா மாலை

    சங்ககால தமிழ்நாட்டில் பகை நாட்டின்மீது படையெடுத்து போர்செய்வதிலும்  அழகிய நெறிமுறைகளை வகுத்தே  செயல்பட்டனர். பகைவர்மீது போர் தொடுக்கும் முன்பாக எச்சரிக்கை செய்யும் வகையில் பகை நாட்டினரின் செல்வமான காடுகளில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்களை கைப்பற்றிச்செல்வர். அவ்வாறு நிரை (பசு) கவரச் செல்லும் வீரர்கள் வெட்சிப் பூச்சூடிச்செல்வர். கவர்ந்து செல்லப்பட்ட தங்களது நிரை(பசுக்)களை மீட்கச் செல்லும் வீரர்கள் கரந்தைப் பூச்சூடிச்செல்வர்.

    இதிலிருந்து சங்ககால மேய்ச்சல் தொழிலின்  மேன்மை விளங்கும். எனவேதான் மாடு மேய்ப்போரும்கூட போர்த் தொழிலில் வல்லவராகத்திகழ்ந்தனர். அவர்கள் கையில் தண்டம் வைத்திருந்தனர். மேய்ச்சல் தொழிலில் ஈடுபடும் மாடு மேய்ப்போர் ஆயர் எனவும், ஆடு மேய்ப்போர் இடையர் எனவும் அழைக்கப்பட்டனர். அவர்கள் வசித்த பகுதி ஆயக்குடி, இடையகோட்டை என அழைக்கப்பட்டன. இவற்றில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இப்பகுதியில் உள்ள படைவீடு திருஆவினன்குடி என்றே அழைக்கப்படுவதுடன், பழனிமலையில் கோயில் கொண்டுள்ள புகழ்பெற்ற முருகப்பெருமான் தண்டாயுதபாணி சுவாமி  என்றழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

     மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கரின் ஆட்சியில் பரந்து விரிந்த நிலப்பகுதியை ஆட்சிசெய்வதில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டும், தன்னுடைய மிகப்பெரிய படையின் பராமரிப்பு செலவினங்களை கணக்கில்கொணடும், அவரின்  முதன்மந்திரி தளவாய் அரியநாதரால் நிர்வாக வசதிக்காக 72  பாளையங்கள் உருவாக்கப்பட்டன. பிரம்மாண்டமான மதுரைக் கோட்டையின் 72 நுழைவாயில்களை காவல்காத்த படைத்தளபதிகள் அவர்தம் கீழடங்கிய படையினரைக் கொண்ட, போர்க்காலத்தில் தவறாது உதவிக்கு வந்துவிட வேண்டுமென்ற நிபந்தனையுடன் தனிப்படை வைத்துக் கொள்ளவும், தங்களின் ஆட்சிப்பகுதியில் வரி வசூலித்து அவ்வாறு வசூலாகும்வரியில் மூன்றில் ஒருபங்கு மதுரை மன்னருக்கு்ம், ஒருபங்கு பாளையக்காரருக்கும், மீதமுள்ள ஒரு பங்கு பாளையத்துக்குட்பட்ட மக்களுக்காக செலவிட வேண்டுமெனவும் விதிகள் வகுக்கப்பட்டன.

    மதுரைக் கோட்டையின் திருமஞ்சன வாயிலைக் காத்துநின்ற வீரமல்ல மாக்கைய்ய நாயக்கருக்கு வழங்கப்பட்ட பாளையத்தின் தலைநகராக ஆரம்ப காலத்தில் இடையர் குடி(யிறுப்பு) என்றழைக்கப்பட்ட நமது ஊர் தேர்வு செய்யப்பட்டு நங்காஞ்சி நதிக்கரையில் கோட்டை கட்டப்பட்ட பின்னர் இடையகோட்டை எனப்பெயர் பெற்றது.

    பழங்காலத்திலிருந்தே பாண்டிய நாட்டின் வடமேற்கெல்யைாகத் திகழ்ந்த நமது ஊரின் வடமேற்கில், சேர நாடும், வடகிழக்கில் சோழநாடும் (எல்லைகள்) ஒன்று சேரும் பகுதியே சேந்தமங்கலம் ஆகும்.முப்பெரும் பேரரசுகளுக்கும் உரசல் ஏற்பட்ட காலங்களில் பாதிக்கப்பட்ட வேதனைப் பக்கங்களும் நமது ஊர் வரலாற்றில் உண்டு.

துணை நூற்கள்

பைந்தமிழும் பழகுதமிழும் - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் (2004).

கொங்கு நாட்டு வரலாறு - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1954)

பாளையப்பட்டுகளின் வரலாறு தொகுதி 4 - தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை (1981)

பலிஜவாரு புராணம் - நரசிம்மலு நாயுடு(1905)


3 கருத்துகள்: