#இடையகோட்டை_உரூஸ்
இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் தூய பணியை செய்து வந்த ஆன்மீக ஞானிகள் அவுலியாக்கள் எனப்படும் இறைநேச செல்வர்கள்.
இவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் சென்று ஆன்மீக சேவை ஆற்றுவது மட்டுமே தங்களது லட்சியமாகக் கொண்டிருந்தனர். இத்தகைய மகான்கள் மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டு மக்களோடு மக்களாக பழகி அவர்களிடம் ஆன்மீக நெறியை வாழ்வியலாக வாழ்ந்து காட்டியவர்கள். நமது நாட்டில் பெரும் பகுதிகளில் இவர்களது சேவை மூலமாகவே இஸ்லாம் பரவியது என்பது மறுக்க முடியாத உண்மை.
குறிப்பாக டெல்லியில் ஹஜ்ரத் நிஜாமுதீன் ஆலியா (ர. அ.) அவர்கள், ராஜஸ்தானின் அஜ்மீரில் காஜாமுதீன் சிஸ்தி (ர. அ.) அவர்கள், பஞ்சாப் பகுதிகளில் பாபா பரிதுத்தீன் (ர. அ.) அவர்கள், தமிழகத்தில் நாகூர் அப்துல் காதர் சாகுல் ஹமீது (ர. அ.) அவர்கள் உள்ளிட்ட பெயர் தெரிந்த பெயர் தெரியாத பல்வேறு மகான்கள் வாயிலாகவே இஸ்லாமிய நெறிகள் எளிய மக்களைச் சார்ந்தன.
இவர்களின் உள்ளம் பரந்து விரிந்தது இவர்களின் பலர் கவிஞர்களாகவும் மருத்துவர்கள் ஆகவும் இருந்துள்ளனர் இத்தகைய மகான்கள் மரணம் அடைந்ததும் அவர்கள் மரணம் அடைந்த அதே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டு நினைவிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வில் துயரங்களை நன்கு அறிந்து அதற்குரிய ஆலோசனைகளை, தீர்வுகளை வழங்கிய இந்த மகான்களின் மீது பேரன்பு கொண்ட மக்கள் இவர்களின் நினைவு நாட்களில் ஏழை எளியவருக்கு உணவளித்து மகிழ்வதே கந்தூரி எனப்படும் அன்னதானம்.
நாடு முழுக்க வெவ்வேறு ஊர்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்து மறைந்த மகான்களின் நினைவு நாளை ஹிஜ்ரி காலண்டரின் அடிப்படையில் அனுசரித்து கந்தூரி ஜியாரத் எனப்படும் அன்னதான பெரு விழாக்கள் நடைபெறுகின்றன. இந்த விழாக்கள் உரூஸ் விழா என பெயர் பெற்று திகழ்கின்றன. நாளடைவில் இந்த விழாக்கள் சற்றே ஆடம்பரம் மிகுந்ததாக மாறிவிட்டாலும் அடிப்படையான கந்தூரி அன்னதானம் நிகழ்ச்சி மட்டும் இன்றுவரை மாற்றங்கள் இன்றி நடைபெறுகிறது.
அரேபியா, ஆப்பிரிக்கா, சீனா என பல்வேறு நாடுகளில் ஆன்மீகப் பணி செய்த முகையதீன் அப்துல் காதர் ஜீலானி(ர. அ.) அவர்கள் நேரடியாக இந்தியாவில் ஆன்மீக சேவை செய்யாவிட்டாலும், அன்னாரது சீடர்கள் நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் சேவையாற்றியுள்ளனர் எனவே இந்தியா முழுவதும் அவர் மீதான அபிமானிகள் இலட்சக் கணக்கில் உள்ளனர் அதில் இடையகோட்டை மக்களும் உண்டு. அன்னாரின் நினைவு நாள் ஹிஜ்ரி காலண்டர் படி ரபியுல் ஆகிர் பிறை 10 அன்று நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் கொண்டாடப்படுவது போல் நமது ஊரிலும் சற்று விமரிசையாகவே கொண்டாடப்படுகிறது இன்று மாலை துவங்கும் நிகழ்ச்சிகள் ஞாயிறு மாலை கொடி இறக்கத்துடன் முடிவு பெறுகின்றன. இந்த நாட்களில் இடையகோட்டை முஹைதீன் ஆண்டவர் தர்காவில் நடைபெறும் கந்தூரி அன்னதான நிகழ்வுகளில் சாதி- மத பேதம் பணக்காரன்-ஏழை என்ற பாகுபாடு ஏதும் இன்றி அனைத்து மக்களும் உணவு அருந்தி செல்வதும் பாத்திரங்களின் உணவை பிரசாதமாக பெற்று செல்வதும் சிறப்பு. வெளியூரிலிருந்து இந்த விழாவிற்காக வருபவர்கள் உணவு குறித்த அச்சமின்றி வரும் அளவிற்கு சிறப்புடன் நடைபெறுவது இங்கு மட்டுமே இடையகோட்டை காரர்கள் எந்த ஊரில் வசித்து வருபவர்களாக இருந்தாலும் அவர்கள் மனதில் இடையகோட்டை முகைதீன் ஆண்டவர் உருஸ் விழா சிந்தனைகள் என்றைக்கும் மாறாது பக்ரீத் பண்டிகை முடிந்த சில நாட்களிலேயே வெளியூரில் வசிக்கும் இடையகோட்டை வாசிகளின் சிந்தனை உரூஸ் விழா மோடுக்கு (mode) மாறிவிடும் இத்தனைக்கும் இரு பண்டிகைகளுக்கும் இடையே சுமார் மூன்றரை மாதங்கள் இடைவெளி என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ இன்று மாலை தொடங்க இருக்கும் உரூஸ் விழாவிற்காக வெளியூர் வாழ் இடையகோட்டை மக்கள் வர தொடங்கி விட்டனர். நான்கு நாட்களுக்கு இடையகோட்டை தற்காலிகமாக கிராமத்திலிருந்து நகரமாக புரமோட்டாகிவிடும். விழா முடிந்து பிரசாதமாக பெற்றுச்செல்லும் சந்தனத்தில் உருஸ் விழா நினைவுகளின் நறுமணம் சற்று தூக்கலாகவே இருக்கும்.
குறிப்பு பல நூற்றாண்டுகளாக நம் நாடு முழுவதும் இந்த முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி உரூஸ் விழா என்ற பெயரில் தமிழகத்திலும், கியார்வீன் என்ற பெயரில் வட இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறைகள் பட்டியலில் கியார்வீன் பண்டிகையும் (ரபியுல் ஆகிர் பிறை 10) உள்ளது.
உரூஸ் விழாவிற்காக வருகை தரும் இடையகோட்டை மண்ணின் மைந்தர்களனைவரையும்
வருக வருக
என அன்புடன் வரவேற்கிறது இடையகோட்டை வலைப்பூ
https://idayakottai.blogspot.com.
ர. அ. என்பதன் விரிவாக்கம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அதாவது அவர்களுக்கு இறைவன் அருள் புரிவானாக என்பதாகும்
புதன், 25 அக்டோபர், 2023
IDAYAKOTTAI உரூஸ் கந்தூரி
வியாழன், 14 செப்டம்பர், 2023
IDAYAKOTTAI - கால்நடை வளா்ப்பு - மாடுகள்
இடையகோட்டையில் விவசாயத்திற்கு இணையான கால்நடை வளர்ப்பு தொழில் மிக முக்கியமானதாக இருந்துள்ளது. இந்த அரண்மனையில் நாட்டு மாடுகள் இங்கு வளர்க்கப்பட்டு, இங்கு பிறந்த கன்று குட்டிகளை ஒவ்வொரு பண்ணைகளுக்கும் அனுப்பப்படும். காங்கேயம் காளைகளுக்கு இணையான பசுமாடுகள் இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. ஒவ்வொரு வகை மாடுகளும் ஒவ்வொரு பண்ணையில் வைத்து பராமரிக்கப்பட்டன.
காளைகள், நாரணப்பநாயக்கன்பட்டி (மேற்கு) பண்ணையிலும், பசுமாடுகள் பங்களா (கிழக்கு) பண்ணையிலும், பால் வற்றிய (வற்றக்கறவை) மாடுகள் (மேல, கீழ்) பண்ணைகளிலும், கருவுற்ற பசுக்கள் அணை வயல் பண்ணையிலும் பராமரிக்கப்பட்டன.
இந்த மாடுகளை பராமரிப்பதற்கு நாயக்க சமுதாய மக்களே நியமிக்கப்பட்டனர். இவர்கள் மருநூத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களிலும் குடியமர்த்தப்பட்டனர்.
இந்த மாடுகளில் இருந்து பெறப்படும் பாலில் இருந்து பிள்ளைப்பால் என்ற பெயரில் பச்சிளம் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினசரி தானமாக வழங்கப்பட்டது. மதிய நேரத்தில் குழந்தைகளுக்காக பிள்ளை சோறு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பண்ணையில் பணியாற்றும் ஊழியர் முதல் காவல் காக்கும் நாய்கள் வரை அரண்மனையில் உணவு தயாரிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது.
இடையகோட்டை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள பங்களாபண்ணையிலிருந்து, விழாக்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக மாடுகள் அழைத்து வரப்படும்போது முதல் மாடு இடையகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து, கடைசி மாடு பங்களா பண்ணை வரை (சுமார் 3 கி.மீ.) அணிவகுப்பு நீண்டிருக்கும்.
இந்த மாடுகளைப் பராமரிப்பதற்காகவே ஜமீனுக்குச் சொந்தமான நிலமும், கட்டடமும் இலவசமாக வழங்கப்பட்டு கால்நடை மருத்துவமனை தொடங்கப்பட்டு இன்றளவும் பயன்பாட்டிலுள்ளது. (பழைய கட்டடம் சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டப்பட்டது.)
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காணும் பொங்கலன்று மாலை சலகெருது என்னும் எருது தாண்டுதல் நடைபெறும். பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்படும் காளைகள் இடையகோட்டை அரண்மனை கிழக்கு வாசலில் இருந்து ஓடிவந்து மாரியம்மன் கோயில் முன்பு உள்ள சரிவு மேடையில் செங்குத்தாக தாண்டி கோயிலை வலம் வரும். இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகப் பிரபலமான இந்த நிகழ்ச்சி கடைசியாக 1989-ஆம் ஆண்டு நடைபெற்றது
பசுமைப் புரட்சியால் பாரம்பரிய விவசாயமும், வெள்ளிப்புரட்சியால் நாட்டுக்கோழி முட்டைகளும் செல்வாக்கு இழந்ததுபோல வெண்மைப் புரட்சியால் பால் உற்பத்திக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கலப்பின மாடுகளின் மூலம் அதிக பால் உற்பத்தி கிடைத்ததால், குறைந்த ஆனால் ஊட்டச்சத்து மிகுந்த பால் தரும் நாட்டு மாடுகளின் வளர்ப்பில் தொய்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட நாட்டு மாடுகள் இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டதுதான் வேதனை.
சனி, 17 ஜூன், 2023
IDAYAKOTTAI அக்கம் பக்கம்- ஆயக்குடி இலவச பயிற்சி மையம்
ஏப்பா என்னப்பா எழுதி இருக்க!
புதன், 31 மே, 2023
IDAYAKOTTAI செங்கோல்
இடையகோட்டை முகைதீன் ஆண்டவர் சந்தனக்கூடு உரூஸ் விழாவில் தர்காவின் 'அஸா' என்னும் செங்கோல் ஏந்தி வரும் இடையகோட்டை ஜமீன் பணியாளர்கள் சகோதரர்கள் திரு. சிவகுமார் திரு. ராமதாஸ் திரு. சுப்பிரமணி திரு.ராஜேந்திர குமார் ஆகியோர். இவர்களில் திரு.சிவகுமார் இடையகோட்டை, பாளையத்தின் (ஜமீன்) பரம்பரை டஃபேதார் ஆவார், மற்றவர்கள் ஜமீன்தாரின் மெய்க்காவல் படையினர் ஆவர்.
அமைப்பு
இருபுறமும் கொடி, மேல்பகுதியில் நடுவில் நட்சத்திரத்துடன் கூடிய பிறையும் அதில் 786 என்று அரபியில் பொறிக்கப்பட்டுள்ளது. முகைதீன் செய்யது அப்துல் காதர் செய்லானி ஆண்டவர்கள் என வடமொழி கலவாத் தமிழில் தெளிவாக உள்ளது. பக்கவாட்டில் அதேபோல் பிறை முத்திரையுடன் தர்கா ஷரீபு, இடையகோட்டை என்ற முகவரியும், ஹிஜ்ரி நாட்காட்டிப்படி 11.04.1358 என அரபியிலும், 31.05.1939 என ஆங்கில நாட்காட்டிப்படியும் தேதி குறிக்கப்பட்டு உள்ளது.
இந்த செங்கோல்கள் ஒவ்வொரு ஆண்டும் உரூஸ் விழாவில் கொடியேற்றம், வாசனைமாலை ஊர்வலங்கள் சந்தனக்கூடு ஊர்வலம் (மூன்று நாட்கள்) என ஐந்து நாட்களும் எடுத்து வரப்படுகின்றன. இடையில் ஜமீன்தார் கலந்து கொள்ளாத பத்து ஆண்டுகளில் கமால் வகையறாவினர் செங்கோல் எடுத்து வந்தனர். புகழ்பெற்ற நாகூர் தர்காவில் வெள்ளித்தகடு அடிக்கப்பட்ட செங்கோல் ஏந்தி பணியாளர்கள் நிற்பதை தினமும் காணலாம்.
இந்த செங்கோல்கள் அனைத்தும் இன்றுடன் 84 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன.
1940-ம் ஆண்டு உரூஸ் ஊர்வலத்தில் அஸா (செங்கோல்) ஏந்தி வரும் சீருடை அணிந்த ஜமீன் காவல் படையினர்.
செவ்வாய், 23 மே, 2023
IDAYAKOTTAI கறுப்பு வெள்ளை படங்கள் 1
![]() |
திங்கள், 24 ஏப்ரல், 2023
செவ்வாய், 11 ஏப்ரல், 2023
சனி, 25 பிப்ரவரி, 2023
IDAYAKOTTAI - மரங்களும், மலரும் நினைவுகளும்
திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களிலிருந்து நமது ஊருக்குள் நுழையும்போது மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள மரத்தடிதான் இது. பல்லாண்டுகளாக நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் வருவோர் இளைப்பாறும் இடம். பழனி செல்லு்ம் உள்ளூர்- வெளியூர் பக்தர்களும் வழிபடும் கோயில் அமைந்துள்ள அழகிய மரத்தடி இது.
சனி, 28 ஜனவரி, 2023
72 பாளையங்கள்
1 | அம்பலத்தாறு |
2 | அம்பாத்துறை |
3 | அம்மையநாயக்கனூர் |
4 | அழகாபுரி |
5 | ஆயக்குடி |
6 | ஆற்றங்கரை |
7 | இடையகோட்டை |
8 | இராமகிரி |
9 | இராமநாதபுரம் |
10 | உத்தப்பநாயக்கனூர் |
11 | ஊர்க்காடு |
12 | எட்டையபுரம் |
13 | எமக்கலாபுரம் |
14 | எரசக்கநாயக்கனூர் |
15 | எரியோடு |
16 | ஏழாயிரம்பண்ணை |
17 | ஏழுமலை |
18 | ஒன்பதூர் |
19 | கடம்பூர் |
20 | கடவூர் என்ற பிள்ளைவிழுங்கி |
21 | கண்டமநாயக்கனூர் |
22 | கவுண்டன்கோட்டை |
23 | கன்னிவாடி |
24 | காடல்குடி |
25 | காமய்யநாயக்கனூர் |
26 | குருவிகுளம் |
27 | குளத்தூர் |
28 | கூழப்பநாயக்கனூர் |
29 | கொல்லபட்டி |
30 | கொல்லம்கொண்டான் |
31 | கோட்டையூர் |
32 | கோம்பை |
33 | கோலார்பட்டி |
34 | சத்திரப்பட்டி |
35 | சமத்தூர் |
36 | சிங்கம்பட்டி |
37 | சிவகிரி |
38 | சிறுபாலை |
39 | சுக்கம்பட்டி |
40 | சுரண்டை |
41 | செங்குறிச்சி |
42 | சேத்தூர் |
43 | சொக்கம்பட்டி என்ற வடகரை |
44 | தலைவன்கோட்டை |
45 | தவசிமேடு என்ற தவசிமடை |
46 | தும்பிச்சிநாயக்கனூர் |
47 | தேவதானப்பட்டி |
48 | தேவாரம் |
49 | தொட்டப்பநாயக்கனூர் |
50 | தோகைமலை |
51 | தோட்டியன்கோட்டை |
52 | நாகலாபுரம் |
53 | நிலக்கோட்டை |
54 | நெற்கட்டும்செவல் என்ற ஆவுடையாபுரம் |
55 | பழனி |
56 | பள்ளியப்பநாயக்கனூர் |
57 | பாவாலி |
58 | புதுக்கோட்டை |
59 | பெரியகுளம் |
60 | போடிநாயக்கனூர் |
61 | மணியாச்சி |
62 | மருங்காபுரி |
63 | மறவநாடு |
64 | மாதவநாயக்கனூர் |
65 | மாத்தூர் |
66 | மாம்பாறை |
67 | மாறனூத்து |
68 | மேல்மாந்தை |
69 | விருப்பாட்சி |
70 | வீரகேரளம்புதூர் என்ற ஊத்துமலை |
71 | வீரமலை |
72 | வெள்ளியங்குன்றம் |
குறிப்பு | |
16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாளையங்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் தற்போதைய மாநகர் சென்னை, ஒருசிறிய கடற்கரை கிராமமாக மட்டுமே இருந்தது. | |
மதுரை மைய ஆட்சிக்கு ஒத்துழைக்காத சில பாளையங்கள் கலைக்கப்பட்டும், பாஞ்சாலங்குறிச்சி போன்ற சில பாளையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் எண்ணிக்கை அவ்வப்போது மாறின. பின்னர் ஆங்கிலேயராட்சிக்கெதிரான
கிளர்ச்சி காரணமாக பல்வேறு பாளையங்கள் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டு
சுமார்முப்பதுக்கும் குறைவான பாளையங்களே ஜமீன்கள் என்ற பெயரில் மிஞ்சின. |
|
நூட்கள் | |
திருநெல்வேலி சீமை சரித்திரம் - எட்டையபுரம் குருகுஹதாஸப்பிள்ளை - 1931 | |
கொங்குமண்டல வரலாறுகள் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. |
ஞாயிறு, 15 ஜனவரி, 2023
IDAYAKOTTAI - பெயர்க்காரணம்
பண்டைய தமிழர்களின்
வாழ்வியலை தொல்காப்பியம் அகம், புறம் என இரண்டாக வகைப்படுத்துகிறது
.தனிமனித ஒழுக்கம், காதல்,கற்புநெறி ஆகியவற்றை அகப்பொருள் எனவும்,
போர்,வீரம், ஆட்சித்திறம், கொடை உள்ளிட்ட பொது மனித இயல்புகளைக் கூ,றுவது
புறப்பொருள் எனவும் சுட்டப்படுகின்றன. இதில் அகப்பொருளில் தமிழ் நிலவகைகளை
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து தன்மையதாய்
குறிப்பிடப்படுகிறது.
மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி எனவும்,
காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை எனவும்,
வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனவும்,
குறிஞ்சியும், முல்லையும் தன் நிலை திரிந்து பாழ்பட்டு வறண்ட நிலமாக மாறும் போது பாலை எனவும் பகுத்துள்ளனர் சான்றோர் .
சங்ககாலத்தில் பொதினி என்று அழைக்கப்பட்ட முல்லை நிலப்பகுதியான தற்போதைய பழனி முதல் இடையகோட்டை வரை பழங்காலத்தில் பொதினி நாடு என்றும் வையாவி நாடு என்றும் அழைக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் வாழ்வாதாரமாக ஆடு மாடு மேய்த்தல் தொழிலே பிரதானமாக இருந்தது. இன்றைக்கும் இத்தொழில் நிமித்தமாகவே நமது ஊர் இடையகோட்டை என்று அழைக்கப்படுகிறது
வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல்செல்வது வஞ்சியாம் - உட்கா(து)
எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அது வளைத்த லாகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க் களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்
-புறப்பொருள் வெண்பா மாலை
சங்ககால தமிழ்நாட்டில் பகை நாட்டின்மீது படையெடுத்து போர்செய்வதிலும் அழகிய நெறிமுறைகளை வகுத்தே செயல்பட்டனர். பகைவர்மீது போர் தொடுக்கும் முன்பாக எச்சரிக்கை செய்யும் வகையில் பகை நாட்டினரின் செல்வமான காடுகளில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்களை கைப்பற்றிச்செல்வர். அவ்வாறு நிரை (பசு) கவரச் செல்லும் வீரர்கள் வெட்சிப் பூச்சூடிச்செல்வர். கவர்ந்து செல்லப்பட்ட தங்களது நிரை(பசுக்)களை மீட்கச் செல்லும் வீரர்கள் கரந்தைப் பூச்சூடிச்செல்வர்.
இதிலிருந்து சங்ககால மேய்ச்சல் தொழிலின் மேன்மை விளங்கும். எனவேதான் மாடு மேய்ப்போரும்கூட போர்த் தொழிலில் வல்லவராகத்திகழ்ந்தனர். அவர்கள் கையில் தண்டம் வைத்திருந்தனர். மேய்ச்சல் தொழிலில் ஈடுபடும் மாடு மேய்ப்போர் ஆயர் எனவும், ஆடு மேய்ப்போர் இடையர் எனவும் அழைக்கப்பட்டனர். அவர்கள் வசித்த பகுதி ஆயக்குடி, இடையகோட்டை என அழைக்கப்பட்டன. இவற்றில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இப்பகுதியில் உள்ள படைவீடு திருஆவினன்குடி என்றே அழைக்கப்படுவதுடன், பழனிமலையில் கோயில் கொண்டுள்ள புகழ்பெற்ற முருகப்பெருமான் தண்டாயுதபாணி சுவாமி என்றழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கரின் ஆட்சியில் பரந்து விரிந்த நிலப்பகுதியை ஆட்சிசெய்வதில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டும், தன்னுடைய மிகப்பெரிய படையின் பராமரிப்பு செலவினங்களை கணக்கில்கொணடும், அவரின் முதன்மந்திரி தளவாய் அரியநாதரால் நிர்வாக வசதிக்காக 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. பிரம்மாண்டமான மதுரைக் கோட்டையின் 72 நுழைவாயில்களை காவல்காத்த படைத்தளபதிகள் அவர்தம் கீழடங்கிய படையினரைக் கொண்ட, போர்க்காலத்தில் தவறாது உதவிக்கு வந்துவிட வேண்டுமென்ற நிபந்தனையுடன் தனிப்படை வைத்துக் கொள்ளவும், தங்களின் ஆட்சிப்பகுதியில் வரி வசூலித்து அவ்வாறு வசூலாகும்வரியில் மூன்றில் ஒருபங்கு மதுரை மன்னருக்கு்ம், ஒருபங்கு பாளையக்காரருக்கும், மீதமுள்ள ஒரு பங்கு பாளையத்துக்குட்பட்ட மக்களுக்காக செலவிட வேண்டுமெனவும் விதிகள் வகுக்கப்பட்டன.
மதுரைக் கோட்டையின் திருமஞ்சன வாயிலைக் காத்துநின்ற வீரமல்ல மாக்கைய்ய நாயக்கருக்கு வழங்கப்பட்ட பாளையத்தின் தலைநகராக ஆரம்ப காலத்தில் இடையர் குடி(யிறுப்பு) என்றழைக்கப்பட்ட நமது ஊர் தேர்வு செய்யப்பட்டு நங்காஞ்சி நதிக்கரையில் கோட்டை கட்டப்பட்ட பின்னர் இடையகோட்டை எனப்பெயர் பெற்றது.
பழங்காலத்திலிருந்தே பாண்டிய நாட்டின் வடமேற்கெல்யைாகத் திகழ்ந்த நமது ஊரின் வடமேற்கில், சேர நாடும், வடகிழக்கில் சோழநாடும் (எல்லைகள்) ஒன்று சேரும் பகுதியே சேந்தமங்கலம் ஆகும்.முப்பெரும் பேரரசுகளுக்கும் உரசல் ஏற்பட்ட காலங்களில் பாதிக்கப்பட்ட வேதனைப் பக்கங்களும் நமது ஊர் வரலாற்றில் உண்டு.துணை நூற்கள்
பைந்தமிழும் பழகுதமிழும் - தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் (2004).
கொங்கு நாட்டு வரலாறு - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1954)
பாளையப்பட்டுகளின் வரலாறு தொகுதி 4 - தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை (1981)
பலிஜவாரு புராணம் - நரசிம்மலு நாயுடு(1905)