சனி, 6 ஏப்ரல், 2024

IDAYAKOTTAI வெயில்


 

To  
*Mr. / Mrs. Sun🌤️*

பேரன்புக்கும், பெருமதிப்புக்கும் உரிய சூரியப் பெருந்தகை அவர்களுக்கு,

நீங்கள் நலமா என நான் கேட்கப் போவதில்லை, ஏனெனில் நீங்கள் முழு உற்சாகத்துடன் பணியாற்றுவதில் இருந்தே இடையகோட்டை மக்கள் அனைவரும் அறிவோம் உங்கள் நலத்தை.

உங்களைப் போல நாங்களும் நலமுடன் இருக்க வேண்டுமல்லவா? அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டித்தான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

இடையகோட்டை மக்களாகிய எங்களுக்கு நீங்கள் எப்போதும் நீங்கா நேசத்துடனே திகழ்ந்து வருகிறீர், வருடத்தின் 365 நாட்களில் சுமார் 330 நாட்கள் உங்களைப் பார்க்காமல் நாங்கள் இருந்ததில்லை. மீதமுள்ள 30 (மழைக்கால) நாட்களிலும் நீங்கள் திரை மறைவில் அவ்வப்போது முகம் காட்டிய வண்ணம் தான் இருந்துள்ளீர். அப்போது கூட உங்கள் முகம் காண ஏங்கியதுண்டு.

தங்களின் முழு செயல்பாட்டுக் காலமான ஏப்ரல், மே மாதங்களில் முன்பெல்லாம் ரோட்டில் அடுப்பு இல்லாமல் ஆம்லெட் போடும் அளவுக்கு இருந்த நிலையில் இப்போது கடந்த இரண்டு மாதங்களாக அடுப்பில்லாமல் பிரியாணி சமைக்கும் அளவுக்கு உங்கள் ஆக்ரோஷம் உள்ளதே என்ன காரணம்?

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் உங்களால் எத்தனை பேர் நோன்பு வைக்க முடியுமால் தவிக்கின்றனர்.
இரவு நேர சிறப்பு (தராவீஹ்) தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசலில் கூடும் பலரும், மாலை 6. 30 மணியளவில் நீங்கள் விட்டுச் சென்ற அனலை சுமார் 3 மணிநேரம் கடந்தும்கூட  சமாளிக்க முடியாமல் வெளியே ஓடி வரும் அளவிற்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதே.
இரவு நேரங்களில் உங்களின் உடன்பிறப்பான தென்றல் காற்றும் எங்களிடம் கோபித்துக் கொண்டு வருவதில்லையே ஏன்?.

உலகயே அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் முக்கூட்டு நாடுகளை தாக்குப்பிடிக்க முடியாமல் வல்லரசுகள் எல்லாம் மூச்சுத்திணறியபோது சோவியத் ரஷ்யாவின் ஸ்டாலின் அவர்களே உங்கள் ஓய்வுக்காலத்தை (கடுங்குளிர்) ஆயுதமாக்கித்தானே இட்டலரை கதறவிட்டு விரட்டினார்.
  உங்களை இப்போதும் வெறுக்கவில்லை. அவ்வப்போது (எங்கள் நலனுக்காக) சற்றே ஓய்வெடுத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள் என்றுதான் கூறுகிறோம்.
 நன்றி.

                                   --- இப்படிக்கு,
என்றும் உங்கள் மீது பாசம் கொண்ட இடையகோட்டை மக்கள் சார்பாக,
சை. ஷாகுல் ஹமீது Hameed Imrans


குறிப்பு :
1. இன்று காலை 8.09 மணிக்கு எடுக்கப்பட்ட உங்களின் ஆக்ரோஷ முகம் (படம்)

2. இன்னும் சில நாட்களுக்கு இடையகோட்டையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் (42 டிகிரி செல்சியஸ்) வரை வெப்பநிலை தகிக்கக்கூடும் என்ற வானிலை அறிக்கைகளின் விளைவால் எழுதப்பட்ட கடிதம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக