புதன், 30 அக்டோபர், 2024
வெள்ளி, 11 அக்டோபர், 2024
IDAYAKOTTAI உப்பும், ஊரும்
"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே”
என்ற பழமொழி ஒன்று போதும் சமையலில் உப்பின் அவசியத்தைக் கூற.
உலக முழுவதும் இயற்கையாக அதிக அளவில் கிடைக்கும் வேதிப் பொருளாக உப்பு உள்ளது. புவிப்பரப்பில் பெருமளவு வியாபித்துள்ள சாதாரண கடல்நீரில் உப்பின் அளவு 3.5 சதவீதமும், இஸ்ரேல்-ஜோர்டான் எல்லையில் அமைந்துள்ள சாக்கடலில் சுமார் 30 சதவீதமும் உள்ளது.
பழங்காலந்தொட்டு இன்று வரை உப்பின் பயன்பாடு அளப்பரியது. உணவில் சுவைகூட்ட மட்டுமின்றி பல்வேறு உணவுப் பதார்த்தங்களை பதப்படுத்திட உப்பு முதன்மை வேதிப் பொருளாக உள்ளது. குறிப்பாக உப்பு மூலம் பதப்படுத்திய மீன் (கருவாடு), இறைச்சி (உப்புக்ண்டம்), காய்கறிகள் (ஊறுகாய்) ஆகியவை இன்றும்கூட மக்களின் விருப்ப உணவுப் பட்டியலில் முதன்மை வகிக்கின்றது.
பல்வேறு நாடுகளில் கலாச்சாரம் சார்ந்த விசேஷங்களில் அன்பளிப்பாக வழங்கப்படும் மதிப்பு மிக்க பொருளாக உப்பு கருதப்பட்டது.
அதனால்தான் நபிகள் நாயகம் அவர்கள்கூட ” நீங்கள் விருந்திற்கு அழைக்கப்பட்டால் விருந்தில் உப்பையும், தண்ணீரையும் தவிர வேறு எதையும் கேட்காதீர்கள் அது நாகரீகமல்ல” என அறிவுறுத்தியுள்ளார்கள்.
சமையலில் மட்டுமல்ல சரித்திரத்திலும் உப்பிற்கென தனியிடமுண்டு.
கடற்கரை பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தயாரிக்கப்பட்ட உப்பு, மற்ற பகுதிகளில் விநியோகம் செய்திட பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன.
உப்பு வணிகத்தை கைப்பற்றவும், காப்பாற்றவும் பழங்கால அரசுகளுக்கு இடையே போர்களும், உயிரிழப்புகளும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்தன.
பண்டைய காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மௌரிய அரசில் உப்புக்கு வரி விதிக்கப்பட்டதை கௌடில்யரின் "அர்த்த சாஸ்திரம்" குறிப்பிட்டுள்ளது. பின்னர் வந்த அரசுகளும் இந்த நடைமுறையை கடைப்பிடித்தனர்.
சிறிய ராஜ்யங்களில், ராஜ்யங்களுக்கிடையே கொண்டு செல்லப்படும் போதும் தனித்தனியாக உப்பு வரி வசூல் செய்யப்பட்டது.
இந்த உப்பு வரி மூலம் அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் கிடைத்தது இத்தனைக்கும் முகலாயர் ஆட்சி கால இறுதிவரை உப்பு வரியின் அளவு அதிகபட்சம் ஐந்து சதவீதத்தை தாண்டாமல் இருந்தது
நாடு பிடிக்க முயன்ற வெள்ளையர்களின் முதல் இலக்காகவும் உப்பு வரி திகழ்ந்தது பிளாசி போரில் சிராஜ் உத் தௌலாவை வீழ்த்தி வெற்றி பெற்ற ராபர்ட் கிளைவ் உப்பு வணிகத்தை கிழக்கிந்திய கம்பெனியின் முழுமையான அதிகாரத்துக்குள் கொண்டு வந்தான்.
அதன் விளைவு உப்பு மீது விதிக்கப்பட்ட வரி கொடூரமாக அதிகரிக்கப்பட்டது உப்பு உற்பத்தியாளர்களும் வணிகர்களும் கடுமையாக பிழிந்து எடுக்கப்பட்டனர் மேலும் உப்பு வரியில் கிடைத்த வருவாயை கண்ட கிளைவ் தனியாக புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்கி உப்பு வணிகத்தை தன்னுடைய கைக்குள் கொண்டு வந்ததன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு இணையான கொள்ளை லாபத்தை அடைந்தான். ஏறத்தாழ 30 சதவீதம் வரை எகிறிய இந்த கொடூர வரி விதிப்பின் காரணமாக வங்காளத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.
(தொழிற்சாலைகள் என்ற பெயரில் உப்பு உற்பத்தி நிலையங்களை தன் வசப்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதித்த வரலாற்றின் கொடூர கொள்ளையர்களில் ஒருவனான ராபர்ட் கிளைவ் இந்தியாவில் அதிகார துஷ்பிரயோகம் செய்து சொத்துக்களை குவித்ததாக லண்டனில் வழக்கு விசாரணைக்கு ஆளாகி மறை கழன்று தற்கொலை செய்து கொண்டான்.)
இது எல்லாவற்றையும் விட மிகக் கொடூரமான செயலை வெள்ளையர்கள் செய்தனர் அதுதான் கடற்கரையை அதிகம் கொண்டிருந்த தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவிற்கு உப்பு கொண்டு செல்வதை தடுப்பதற்கு உலகில் எங்கும் கேள்விப்படாத ஒரு காரியமாக இந்தியாவை இரண்டாகப் பிரிக்கும் வகையில் கிழக்கிலிருந்து மேற்கு வரை கடும் பாதுகாப்புகளுடன் கூடிய மிகப்பிரம்மாண்டமான முள்வேலி அமைத்தனர்.
இன்றைய பாகிஸ்தானின் சிந்து பகுதியிலிருந்து தற்போதைய ஒடிசா வரை சுமாராக 3700 கிலோமீட்டர் நீண்ட இந்த வேலியில் ஆங்காங்கே சுங்கச்சாவடி அமைத்து வரி வசூல் செய்தனர். இந்த புதர் வேலியை பாதுகாக்க 12000 பேர் பணியாற்றினர். நமது நாட்டின் இயற்கை வளங்கள் எந்த அளவிற்கு கொள்ளையடிக்கப்பட்டன என்பதற்கு வெள்ளையர் வசூலித்த உப்பு வரியும் உப்பு வேலியும் மிகச்சிறந்த ஆதாரங்கள்.
உப்பு வரியின் மூலம் மிகப்பெரும் ஆதாயத்தை அடைந்த கம்பெனியினர் ஒருபுறம் என்றால் மிகக் குறைந்த ஈன விலைக்கு உற்பத்தி செய்து தர வேண்டிய இன்னலுக்கு ஆளான இந்திய உப்பு உற்பத்தியாளர்கள் மறுபுறம். இவ்விருவருக்கும் மத்தியில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு உப்பை எடுத்துச் சென்று விநியோகிக்கும் உப்பு வியாபாரிகளின் பாடு சொல்லும் தரம் அன்று. (இதில் உப்பு மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகளுக்கு உரிமம் வேறு வழங்கப்பட்டது)
இந்த தேசம் விடுதலை பெற வேண்டுமானால் எளிய மக்களின் ஆதரவும் வேண்டும், அதே சமயம் பிரிட்டிஷ் அரசின் வருவாய் ஆதாரத்தையும் தகர்க்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் மகாத்மா காந்தியடிகள் தொடங்கியதுதான், அன்றைய பிரிட்டிஷ் அரசை கதிகலங்கச் செய்த "" உப்புச் சத்தியாக்கிரகம்"" ஆகும்.
நாடு அடிமைப்படுவதற்கும், பின்னாளில் விடுதலை பெறுவதற்கான போராட்டத்திலும் ஒரு முக்கிய காரணியாகத் திகழ்ந்தது உப்பு என்றால் அது மிகையில்லை.
இன்று சாதாரண பெட்டிக்கடைகளிலும் எளிதாக கிடைக்கும் உப்பால் கரைந்து போன சாம்ராஜ்யங்கள் எண்ணற்றவை.
பல்வேறு இன்னல்களைத் தாங்கி, உப்பு வணிகத்தில் ஈடுபட்ட உப்பு வியாபாரிகள் என்ன ஆனார்கள்?.
உப்பு உற்பத்தி, வியாபாரம் பரவலாக்கப்பட்டதில் தங்கள் தொழில்களை மாற்றிக் கொண்டு விட்டனர்.
என்றாலும், உப்பு வணிகர்களின் வாரிசுகள் தமிழகத்தின் பண்டைய வணிகப் பெருவழியில் அமைந்த நமது இடையகோட்டையில் உப்புக்கார வகையறா என்ற பெயரிலும், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் உப்புக்காரச்சி வகையறா என்ற பெயரிலும் வசித்து வருகின்றனர்.
ஆதார நூல். ராய் மாக்சிம் எழுதிய "உப்பு வேலி"
--சை ஷாகுல் ஹமீது,
9442326015.
சனி, 28 செப்டம்பர், 2024
திங்கள், 16 செப்டம்பர், 2024
IDAYAKOTTAI கடிதம்
இடையகோட்டை,
08.09.2024.
அன்புள்ள கடிதம் அவர்களுக்கு,
உங்களை என்றும் மறவாத லட்சக்கணக்கான கடித ஆர்வலர்களில் ஒருவன் ஷாகுல் ஹமீது எழுதுவது. எங்களின் நலன்களை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள தூது சென்ற உங்களின் நலத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
எத்தனை நூற்றாண்டுகள் எங்களுக்காக நீங்கள் அலைந்து இருப்பீர்கள் உங்கள் பயணம் எப்படி, எப்போது தொடங்கியது?
மனித உள்ளங்களுக்கு இணைப்புப் பாலமாக எவ்வாறு உருவெடுத்தீர்கள் என பள்ளி பாடங்களில் படித்தது நினைவுக்கு வருகிறது. பழங்காலத்தில் பனை, ஓலை, பட்டுத்துணி, கல்வெட்டு, செப்புப் பட்டயம் என விதவிதமான தோற்றங்களில் நீங்கள் சாதித்தவற்றை எழுத்தில் வடிக்க இந்த ஒரு பதிவு போதாது.
எதிரிநாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் உங்களை சுமந்து வரும் தூதுவனை பாதுகாப்பதும் அவனை பாதுகாப்புடன் திருப்பி அனுப்ப வேண்டும் என்பது அகில உலக அளவில் அக்கால நடைமுறையாகவே இருந்திருக்கிறது என்பது ஒன்றே போதும் உங்களின் முக்கியத்துவம் அறிய.
என்னுடைய சிறு வயது நினைவுகளை திரும்பிப் பார்க்கிறேன் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மூத்தோர்களைப் பொறுத்த அளவில் கடிதம் எழுத, படிக்க தெரிந்திருந்தால் படிப்பாளி, அதிலும் உங்களின் உடன்பிறப்பான தந்தி வாசிக்கத் தெரிந்தவர் அன்றைய நாட்களில் விஐபி யாக கருதப்பட்டார்.
மக்களின் பேரன்புக்குரிய மகத்தான தலைவர்கள் தங்களின் மனசாட்சியாக உங்களைத்தானே வைத்திருந்தனர், (நபிகள் நாயகம் அவர்கள், அபிசீனியா என்று அழைக்கப்பட்ட எத்தியோப்பியா மன்னருக்கு அனுப்பிய கடிதம் 1400 ஆண்டுகளுக்கு மேல் இன்றும் எகிப்து அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது)
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெரும் பெரும் தலைவர்கள் உங்கள் உதவி கொண்டே வரலாற்றில் சாதித்தனர்.
இந்திய விடுதலை வரலாற்றில் மைசூர் புலி திப்பு சுல்தான் அவர்கள், பிரெஞ்சு மன்னர் நெப்போலியனுக்கு எழுதிய கடிதம், விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கர் அவர்கள் மராத்திய தூந்தாஜி வாக், பல்லடம் ஹாஜி கான் ஆகியோருக்கு உங்கள் வாயிலாக செய்தி அனுப்ப, நீங்களோ வழிமாறி ஆங்கிலேயரின் கைகளில் சிக்கியதின் விளைவு நம் நாட்டின் விடுதலை போராட்டம் கூடுதலாக சுமார் 150 ஆண்டு காலம் நீடிக்க காரணமாகிவிட்டது
அவர்கள் மட்டுமல்ல ஹிட்லர், முசோலினி ஆகியோரும் கூட தங்களது விஷ வித்துக்களை மக்கள் மனதில் பதிக்க நீங்கள் தானே காரணமாக இருந்தீர்கள்.
அது மட்டுமா நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏதும் இல்லாத அந்த காலத்தில் இரு உள்ளங்கள் இணைவதற்கு இணைப்பு பாலமாகவும் நீங்கள் தானே 'காதல் கடிதம்' என்ற பெயரில் தூது சென்றீர்கள், அந்த காதல் கடிதத்துடன் இணைப்பாக எத்தனை அழகிய அன்பளிப்புகளை கொண்டு சென்று சேர்த்தீர்கள்.
(காதல் கடிதங்களை தங்களது மனம் கவர்ந்த மங்கையிடம்/காளையரிடம் சேர்க்கும் முறை குறித்து எழுதினால் பல பாகங்களில் பெரிய காவியமாக அமையும்)
"இந்த கடிதத்தை காகிதத்தில் மட்டும் எழுதவில்லை, கண்ணீரிலும் எழுதுகிறேன், எனக்கு வேறு வழி தெரியவில்லை என்னை மறந்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்" என்ற வசனங்களை ஏந்தி எத்தனை இளவட்டங்களின் கனவுகளை சல்லி சல்லியாக (💔break up) உடைத்தீர்கள்.
லட்சக்கணக்கான தம்பதிகள் தொழில் நிமித்தம் உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் இணைய நீங்கள்தானே காரணியாக இருந்தீர்கள்.
ஊருக்குள் ஒரு சில படித்தவர்கள் மட்டும் இருந்த காலத்தில் மாமியார் மருமகள் பஞ்சாயத்து தொலைவில் உள்ள கணவனுக்கு கடிதமாகச் செல்ல, அந்த கணவன் மனைவியின் மீது சில குறைகளை கூறி தாயிடம் எச்சரிக்கை கடிதம் எழுத, அந்த கடிதத்தை வாசிக்கத் தெரியாத தாய், தன் மருமகளிடமே வாசிக்கும்படி சொல்ல, அதன் பிறகு நடந்து கூத்துகள் சொல்லவும் வேண்டுமா?!!
எத்தனை இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, தங்கள் வாழ்வின் விடியலுக்காக உங்களை எதிர்பார்ப்புடன் இளமையை கடந்தே விட்டனர், ஆனால்????
நடந்து கூட செல்ல முடியாத தொலைதூர கிராமங்களுக்கும் சென்று வரக்கூடிய அரசு ஊழியராக தங்களை சுமந்து சென்ற தபால்காரர் தானே திகழ்ந்தார் அன்றைய மக்களின் வாழ்க்கையில் அனைத்து விதமான நிலைகளிலும் உங்களின் செயல்பாடுகள் பின்னிப்பிணைந்தவாறு திகழ்ந்தது என்பதை யாராலும் மறக்க இயலாது.
"கடிதம் என்பது வெறும் காகிதம் அல்ல கணக்கில் அடங்கா உணர்வுகளின் வரி வடிவம்" என்பது உண்மையிலும் உண்மை.
அன்றைய கல்வி முறைகளில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கக்கூடிய வள்ளலாக இருந்தது கடிதம் எழுதுதல் பகுதி தான்.
இன்றைக்கு எவ்வளவு சமூக ஊடகங்கள் அதிவிரைவில் தகவல்களை வழங்கினாலும், மக்களை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள செய்தாலும் கைக்கடிதம்(பெறுநர் இருக்கும் ஊருக்கு செல்பவர் கொண்டு செல்லும் கடிதம்), காதல் கடிதம், அலுவலக கடிதம் என உங்களின் பல்வேறு அவதானங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இந்த நவீன ஊடகங்களில் இல்லை என்பது உண்மையிலும் உண்மை.
என்றேனும் ஒருநாள் மீண்டும் வருவீர்கள். உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நான்.
அன்புடன்,
சை ஷாகுல் ஹமீது,
4/65, தெற்குத் தெரு,
இடையகோட்டை-624704,
திண்டுக்கல் மாவட்டம்.
சனி, 8 ஜூன், 2024
IDAYAKOTTAI வாழ்த்துகள்
நேற்று முன்தினம் வெளியான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET2024 தேர்வில் இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி செ. பிரதீபா, (D/o செல்லமுத்து) 556 மதிப்பெண்களும், மு. ரவ்லத்துல் ஜன்னா, (D/o. முஹம்மது ரசீது) 525 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
🎉🎉🎉
தொடர்ந்து மருத்துவப் படிப்பிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவ வல்லுநர்கள் ஆகிட இடையகோட்டை வலைப்பூ வாழ்த்துகிறது.
🎁🎁🎁🎁
அன்புடன்,
அட்மின்.
ஞாயிறு, 2 ஜூன், 2024
IDAYAKOTTAI வரலாறு பேசும் படங்கள்
இடையகோட்டை ஜமீன் குத்திலுப்பை கிராமம், துர்கையம்மன் கோவில் திருவிழா அழைப்பி தழ் 1969-ம் ஆண்டு

இடையகோட்டை, மஹாமாரியம்மன் கோவில் திருவிழா அழைப்பி தழ் 1963-ம் ஆண்டு
இடையகோட்டை, மஹாமாரியம்மன் திருவிழா அழைப்பி தழ் 1947-ம் ஆண்டு
இடையகோட்டையில் நடைபெற்ற கால்நடை அபிவிருத்தி வாரியக்கூட்டத்துக்கு வருகைதந்த அப்போதைய வேளாண் அமைச்சர் மாண்புமிகு.பக்தவத்சலம் அவர்களுக்கு வாசித்தளிக்கப்பட்ட வரவேற்பு மடல் 1955
பழனி தாலுகா விவசாயிகள் சங்க உருவாக்கம்

இடையகோட்டை, மாடுகளுக்கான தனித்துவ அடையாள அட்டை பதிவேடு 1958.
ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனி பெயர்
அங்க அடையாளங்கள்,
மாட்டின் வடிவம் முதற்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கால ஆதார்????!!!! 🤣🤣🤣


ஞாயிறு, 7 ஏப்ரல், 2024
IDAYAKOTTAI ஜெயராஜ் சார்
தலைமை ஆசிரியராக கல்விக்கு மட்டும் இல்லாமல் கலை, விளையாட்டு, சுற்றுலா என மாணவர்களை பக்குவப்படுத்தும் அனைத்து விஷயங்களிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர் ஐயா ஜெயராஜ் சார் அவர்கள். ஆசிரியராக இருந்து பதவி உயர்வில் தலைமை ஆசிரியராக இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி ஏற்ற ஐயா அவர்கள் தனது பணி நிறைவு வரை ஐந்தாண்டுகள் நமது பள்ளியில் பணியாற்றினார்.
அவர் பணியாற்றிய 5 ஆண்டுகளும் மாணவர்களுக்கு பொற்காலம். பள்ளியில் மாணவர் நலன் சார்ந்து பல்வேறு செயல் திட்டங்களை தீட்டியவர், பரந்து விரிந்த விளையாட்டு மைதானத்தில் ஃபுட்பால் கிரவுண்ட், பேஸ்கெட் பால் கிரவுண்ட் என பயனுள்ள அம்சங்களை உருவாக்கினார். நடுவில் மைதானம் சுற்றிலும் குளுமை தரும் வேப்ப மரங்கள் என அப்போதைய விவசாய ஆசிரியர் திரு.கந்தசாமி அவர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டில் செதுக்கப்பட்டது நம் பள்ளி என்றால் அது மிகையில்லை.
அவர் பணியாற்றிய 5 ஆண்டுகளும் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்து மாணவர்களை அழைத்துச் சென்றார் அதேபோல் மாணவர்களின் கலை திறனையும் விளையாட்டு ஆர்வத்தையும் வெளிப்படுத்த ஆண்டுதோறும் ஆண்டு விழாக்கள் நடத்தினார் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கியதும் பள்ளியிலேயே தங்கி மாலை நேரங்களில் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று படிக்க தூண்டுவார்.
தினமும் மாலை பள்ளி முடிந்ததும மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கைப்பந்து பேட்மிண்டன் விளையாட்டுகளை விளையாடுவார் கிராமப்புற மாணவர் மாணவிகள் பத்தாம் வகுப்பு உடன் பள்ளி பதிப்பை முடித்து விடுவது பார்த்து பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட உள்ளூர் பிரமுகர்களுடன் சேர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார் அவரிடம் பயின்ற 2002 பேட்ச் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளான எங்களுக்கு என்றுமே சூப்பர் ஸ்டார் எங்கள் ஜெயராஜ் சார் என்பதுதான் உண்மை.
மிக நீண்ட காலத்திற்கு பிறகு 30.03.2024 சனிக்கிழமையன்று அவரை அவரது வீட்டில் சந்தித்தோம் இடையகோட்டையில் பணியாற்றிய காலத்தையும் அங்கு தன்னுடைய செயல்பாட்டையும் மிகவும் ஆர்வத்துடனும், நெகிழ்ச்சியுடனும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது பணி காலத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளை சந்தித்திருப்பார்கள். ஆனால் அனைவரையும் நினைவு வைத்திருப்பது சாத்தியமில்லை. ஜெயராஜ் சார் அவர்கள் தான் பணியாற்றிய காலத்தில் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்புகளை இன்றைக்கும் தனது வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வருகிறார் என்பது அவர் நம் மீது கொண்டிருந்த பாசத்தின் அளவுகோலை காட்டும்
நெகிழ்ச்சியுடன்,
இம்ரானா & ராணி