வெள்ளி, 31 டிசம்பர், 2021
புதன், 3 நவம்பர், 2021
செவ்வாய், 12 அக்டோபர், 2021
IDAYAKOTTAI அம்மச்சி குளம்
· கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 1686 ஆக இருக்கக்கூடும்) இடையகோட்டை பாளையக்காரராகப் பட்டமேற்ற லட்சுமிபதி நாயக்கர் ஜவ்வாதுபட்டிக்கு வடமேற்கில் ஓடையாற்றின் குறுக்கே ஒரு அணையும் அதில் இருந்து கிழக்குத்திசையில் வாய்க்கால்மூலம் நிரம்பும் வகையில் மேலைக்குளம் என்ற குளமும் வெட்டியுள்ளார். மேலைக்குளத்தின் வடகிழக்கில் உபரி நீர் நிரம்பும் வகையில் செங்குளமும் அவரால் வெட்டப்பட்டது. இடையகோட்டைக்கு வடமேற்கில் பாண்டிய மன்னர் காலத்தில் கூரைக் கட்டடமாக அமைக்கப்பட்ட செல்லாண்டியம்மன் கோயிலை லட்சுமிபதி நாயக்கர் செங்கல்கட்டு காரைக் கட்டடமாகக் கட்டினார். இக்கோயிலின் மேற்குப் பகுதியில் செல்லாண்டியம்மன் குளம் என்ற பெயரில் குளமும் வெட்டினார். இது தற்போது அம்மச்சி குளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
· எண்பதுகளின் இறுதி காலம் வரை இந்த அம்மச்சி குளம் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் நிரம்பியிருக்கும் குளத்தின் தெற்குக் கரை கள்ளிமந்தயம் சாலையில் செல்லும் போது சாலையின் வடக்குப் புறம் அம்மச்சி குளமும், சாலைக்கு தெற்குப் புறம் உள்ள தோட்டத்தில் வயல் வெளியிலும் நீர் நிரம்பி பழைய திரைப்படங்களில் வருவது போன்ற கவித்துவமான கண்ணுக்கினிய காட்சியாக திகழ்ந்தது உண்டு. நேருஜி அரசு உயர்(தற்போது மேல்)நிலைப்பள்ளி மாணவர்கள் மதிய உணவு இடைவேளையில் தாங்கள் கொண்டுவந்த உணவை குளக்கரையில் உள்ள மர நிழலில் அமர்ந்து உட்கொண்டபின் குளத்தில் இருந்த கைப்பம்பில் நீர் அருந்தி விட்டு அரட்டையடித்தவாறு வகுப்பறை திரும்பியதெல்லாம் பசுமை நிறைந்த நினைவுகள். பின்னாட்களில் ஓரிரு வருடங்கள் வறட்சி ஏற்பட்ட காலங்களில் அம்மச்சி குளத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, மக்களின் தாகத்தை தீர்த்து வைப்பதில் பெரும் பங்காற்றியது.
கால ஓட்டத்தில் செங்குளமும் அதன் வடிகால் ஓடையும் தூர்ந்துவிட, அம்மச்சி குளம் வறண்டு விட்டது. கடந்த 24.09.2021 வெள்ளியன்று மாலை பெய்த கனமழையால் அம்மச்சி குளம் நிரம்பி, நமதூர் மக்களை பரவசப்படுத்தியது.
படங்கள்
நீர் நிரம்பிய அம்மச்சி குளம்
செல்லாண்டியம்மன் கோயில் (படஉதவி திரு.திருத்தனி)
வியாழன், 9 செப்டம்பர், 2021
IDAYAKOTTAI புலவர்
தமிழ் சினிமாக்கள் ஊமை படங்களாக இருந்து பேசும் படங்களாக பரிணாமம் பெற்ற போது அந்தக் காலத் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்கள் மிகுந்திருக்கும். அத்தகைய பாடல்கள் சிறந்த தமிழ் அறிவு பெற்ற தமிழ் புலவர்களால் இயற்றப்பட்டவை அவ்வாறு வெளியான பேசும் படமான "மேனகா" திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் பூமி பாலக தாஸ்.
இடையகோட்டை ஜமீன் அவையை அலங்கரித்த புலவர்கள் ஜவ்வாதுபட்டி அம்பலவாணன், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், காசிபாளையம் நடராஜன், சோளியப்ப கவுண்டனூர் நடராஜன், பொருளூர் நடராஜன் ஆகியோரின் வரிசையில் புலவர் பூமிபாலக தாஸ் அவர்களும் ஒருவர். இவர்களை ஆதரித்தது இடையகோட்டை, பாளையக்காரர் குமார முத்து வெங்கடாத்ரி நாயக்கர் அவர்கள். (இவர் பிரிட்டிஷாரிடம் ராவ்பகதூர் பட்டம் பெற்றவர்). பூமிபாலக தாஸ் அவர்கள் தனது பாடல்கள் மூலம் திரைத் துறைக்கு மட்டுமின்றி நாட்டு விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டவர், இவரின் பாடல்களில் இடம்பெற்ற விடுதலை வேட்கை வரிகளின் காரணமாக பிரிட்டிஷ் அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கொடும் சித்திரவதைகளை அனுபவித்தவர். கோவை சிறையில் சரியான உணவு வழங்கப்படாமல் உடல் நலிவுற்று நலிந்த நிலையில் தனது மனைவிக்கு தன் நிலையை விளக்கி எழுதிய கடிதத்தைக் கூட, (முகில் விடுதூது) சீட்டு கவியாக எழுதியவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் குறித்த மேலதிக விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
ஞாயிறு, 5 செப்டம்பர், 2021
IDAYAKOTTAI - விசுவநாதன் சார்
. ஒட்டன்சத்திரம் கே ஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தான் நமது பள்ளிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு மையம் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது . 1992ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மற்ற தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் ஆங்கில பாட முதல் தாள் தேர்வு மட்டும் நடைபெற்றது. அதற்கு முந்தைய தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடந்து கொண்டிருக்கும் பொழுது இடையகோட்டை , பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த தேர்வு அறைகளில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது அது வேறொன்றும் இல்லை ஆங்கில பாடம் தேர்வு நடைபெறும் வரை தினமும் மாணவர்களுக்கு இடையகோட்டை மாணவர்களுக்கு மீண்டும் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்ற அறிவிப்பு தான் அது அந்த அளவிற்கு மாணவர்கள் கல்வியின் மீது விசுவநாதன் சார் அவர்களின் அக்கறை மேலோங்கியிருக்கும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்துவார் இடையகோட்டை யில் ஜெராக்ஸ் வசதி ஏதும் இல்லாத அந்த காலகட்டத்தில் இந்தத் தேர்வுகளுக்கான கேள்வித்தாளை தானே டைப் செய்து ரோனியோ கொண்டு நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்குவார். ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோரிடமும் தொடர்புகொண்டு அவர்கள் கல்வி முன்னேற்றம் குறித்து ஆலோசிப்பார். கல்வி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் மாணவர்கள் சிறிது சறுக்கினாலும் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களின் பிள்ளைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவார். பெற்றோரின் முன்னிலையிலேயே மாணவர்களை அவர் அடிக்கும் போது கூட எந்த பெற்றோரும் அவரிடம் ஆட்சேபனை செய்ததில்லை என்பது ஒன்றே பெற்றோர் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு. கண்டிப்புக்கு பெயர் பெற்ற விசுவநாதன் சார் அவர்கள் வகுப்பறைகளில் பாடம் நடத்தும்போது கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது .தேவையான சமயங்களில் மாணவர்களுடன் நகைச்சுவையுடன் உஉரையாடுவதும் உண்டு அப்போதைய உயர் வகுப்பான பத்தாம் வகுப்பு மாணவர்கள்மீது எந்நேரமும் தனது கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக தலைமையாசிரியர் அறைக்கு பக்கத்திலேயே பத்தாம் வகுப்புக்கான அமைத்திருந்தார்.
வியாழன், 27 மே, 2021
IDAYAKOTTAI நீர் மேலாண்மை
விவசாயத்தையும் மேய்ச்சல் தொழிலையும் அடிப்படையாகக்
கொண்ட நமது இடையகோட்டையின் தொழில் அபிவிருத்திக்காக பலங்காலந்தொட்டே பல்வேறு நீர்மேலாண்மைத்
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவை குறித்த தகவல் துளிகள்
·
கி.பி.1529 இல்விசுவநாத நாயக்கரால் மதுரை நாயக்க அரசு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட
இடையகோட்டை பாளையத்தின் முதல் பாளையக்காரரான பெஞ்சை
மாக்கைய்ய நாயக்கர் 36 ஆண்டுகளும், அவருக்குப்பின் அவரது மகன் இரக்குடி திப்பைய நாயக்கர் 35 ஆண்டுகளும்
பட்டம் வகித்தனர். இவரால் கட்டப்பட்டதுதான் இடையகோட்டை, சின்னப்பாலத்தின் மேற்குப்பகுதியில்
திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலாகும். இவருக்குப்பின்னர் இவருடைய மகன் தம்மநாயக்கர் 35 ஆண்டுகள் பட்டம் வகித்தார்.
·
கி.பி.1636
இல் பட்டமேற்று 50 ஆண்டுகள் பட்டம் வகித்த தம்மநாயக்கரின் மகன் தண்டிகை ஏரத்தம்ம நாயக்கர் வெரியப்புரின்
வடமேற்கில் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே அணை ஒன்றை கட்டியதுடன் வாய்க்கால் மூலமாக நிரம்பும்
வகையில் பெரியகுளம் என்ற பெயரில் குளமும்,
குளத்தின் மேற்குப்பகுதியில் மல்லிகார்ச்சுன சிவாலயம் அமைத்தார். அதன் சன்னதி முன்பாக
தன்னு்டைய உருவ கற்சிலையும் அமைத்துள்ளார்.
·
அடுத்து
பட்டமேற்ற அவருடைய மகன் முத்துவெங்கிடாத்திரி
நாயக்கர் ஜவ்வாதுபட்டிக்கு தெற்கே அணை கட்டி வாய்க்கால் பாசனம் மூலம் நஞ்சை பாசனம்
உருவாக்கினார். ஜவ்வாதுபட்டிக்கு வடக்கே வர்த்தகன்
அணை என்ற பெயரில் இன்னொரு அணையும் கட்டினார். இந்த அணைதான் தற்போது நங்காஞ்சி அணையின்
மேற்குபுறத்தில் ஜவ்வாதுபட்டி அணை என்ற பெயரில் இன்றும் பயன்பட்டுவருகிறது. இந்த வர்த்தகன்
அணையில் இருந்து கிழக்குத்திசையில் வாய்க்கால்மூலம் நிரம்பும் வகையில் அப்புசமுத்திரக்குளம் (பங்களாக்குளம்) என்ற குளமும் வெட்டியுள்ளார்.
·
கி.பி.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 1686 ஆக இருக்கக்கூடும்) பட்டமேற்ற இவரின்
மகன் லட்சுமிபதி நாயக்கர் ஜவ்வாதுபட்டிக்கு வடமேற்கில் ஓடையாற்றின் குறுக்கே
ஒரு அணையும் அதில் இருந்து கிழக்குத்திசையில் வாய்க்கால்மூலம் நிரம்பும் வகையில் மேலைக்குளம் என்ற குளமும் வெட்டியுள்ளார்.
மேலைக்குளத்தின் வடகிழக்கில் உபரி நீர் நிரம்பும் வகையில் செங்குளமும் அவரால் வெட்டப்பட்டது.
·
செங்குளக்
கிழக்குக்கரையை ஒட்டிய நிலமும் திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்கு மானியமாக லட்சுமிபதி நாயக்கரால் வழங்கப்பட்டது.
·
இடையகோட்டைக்கு
வடமேற்கில் பாண்டிய மன்னனால் கூரைக் கட்டடமாக அமைக்கப்பட்ட செல்லாண்டியம்மன் கோயிலை
லட்சுமிபதி நாயக்கர் செங்கல்கட்டு காரைக் கட்டடமாகக் கட்டினார். இக்கோயிலின் மேற்குப்
பகுதியில் செல்லாண்டியம்மன்
குளம் என்ற பெயரில் குளமும் வெட்டினார். இது தற்போது அம்மச்சி குளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
·
இவரின்
மகன் குமார சின்னோப்ப நாயக்கரின் காலத்தில்
செல்லாண்டியம்மன் குளத்தின் வடகிழக்கில் ஒரு ஒட்டுக்குளம்
வெட்டி மருகால் பாயும்படி செய்தார். இந்தக்குளத்தின் வடிகால் கோவிந்தாபுரம் அருகே நங்காஞ்சியாற்றில்
கலக்கிறது.
·
தற்போது
இந்த வடிகால் ஓடையே திணடுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களின் எல்லையாக உள்ளது.
நன்றி: பாளையப்பட்டுகளின் வம்சாவளி தொகுதி-4 (வெளியீடு
தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.)
நன்றி: தமிழ்நாடு இணையக்கல்விக்கழக மின்னூலகம்.
ஞாயிறு, 23 மே, 2021
IDAYAKOTTAI வலைப்பூ 12ம் ஆண்டில்
நன்றி! நன்றி!!
நாளிதழ் ஒன்றின் இணைப்பாக கணினி தொழில்நுட்பம் குறித்த வார இதழ் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பாக வந்து கொண்டிருந்தது பேருந்து பயண நேரத்தில் பொழுதுபோக்கிற்காக புத்தகம் வாங்கிய பழக்கத்தில் அந்த இணைப்பிதழை நாளிதழுடன் சேர்த்து உடன் சேர்த்து வாங்கினேன். பிறிதொரு நாளில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இடையகோட்டையில் அதிகம் இணைய தள இணைப்புகள் இல்லாத காலகட்டத்தில் பெறப்பட்ட அகன்ற அலைவரிசை இணைப்பின் மூலம் பொழுதுபோக்கிற்காக அந்த இணைப்பிதழ் வாயிலாக பிளாக் எனப்படும் வலைப்பூ உருவாக்கும் முறையை அறிந்துகொண்டு உருவாக்கப்பட்டதுதான் நமது இடையகோட்டை வலைப்பூ http://idayakottai.blogspot.com ஆகும். எனக்குத் தெரிந்த நமது ஊர் குறித்த ஆச்சரியகரமான சில தகவல்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டு நமது ஊரின் சிறப்புகளை இணைய உலகில் எடுத்துச் சொல்லுவதற்காக இந்த வலைப்பூ 24.05.2010 ல் உருவாக்கப்பட்டது. இன்றுடன் (23.05.2021) பதினோரு ஆண்டுகள் முடிந்துவிட்டன முதலில் சுமார் ஒரு ஆண்டு காலம் எந்த பதிவும் செய்யப்படவில்லை. பின்னர் பல்வேறு தருணங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நேரம் கிடைக்கும் சமயங்கள் எல்லாம் வலைப்பூ இடுகைகள் வெளியிடப்பட்டன இதில் அதிகம் ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டு உள்ளது தனிச்சிறப்பாகும். 1570 ஆம் ஆண்டு விசுவநாத நாயக்கரின் முதன்மை அமைச்சராக இருந்த அரியநாத முதலியாரின் செயல் திட்டத்தில் உருவாக்கப்பட்ட 72 பாளையங்களில் நமது இடையகோட்டை பாளையம் ஒன்றாகும். சுமார் நான்கரை நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்டது நமது ஊர் ஆகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி பாளையம் உருவாவதற்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது நமது இடையகோட்டை என்றால் நமது ஊரின் சிறப்பு விளங்கும். பல்வேறு நூல்கள் மற்றும் ஜமீன் குடும்ப வாரிசுகள், பலபெரியவர்கள் உடனான நேரடி சந்திப்புகள், e-books என பல்வேறு தரவுகளின் அடிப்படையிலேயே இடுகைகள் பதிவிடப்படுகின்றன. நமது இடையகோட்டையின் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட பெரியோர்கள் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை அலுவலர் .திரு. முகமது இஸ்மாயில், ஓய்வுபெற்ற நல்லாசிரியர் திரு. காஜா ஷெரிப் (இடையகோட்டை வரலாற்றுத் தொகுப்புமையம், பூவிருந்தவல்லி) ஆகியோர் இடையகோட்டை குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை வழங்கிய நன்றிக்குரியவர்கள். இன்று இரவு 8.30 மணி வரை சுமார் 13095முறைகள் நமது வலைப்பூ வாசகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இவர்களில் இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நமது வலைப்பூ வாசகர்கள் உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். நமது இடுகைகளில் இடையகோட்டை வரலாறு குறித்த பதிவுகள் மட்டுமன்றி பல்வேறு தலைப்புகளிலும் இடுகைகள் பதிவிடப்பட்டுள்ளன. மலரும் நினைவாக பழைய ஒளிப்படங்களும் நமது ஊரில் வாழ்ந்து மறைந்த சான்றோர் பெருமக்கள் குறித்த பதிவுகள் இடுகையிடப்பட்டுள்ளன. அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகளில் இடையகோட்டை ஊர் வரலாறு இடுகை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. மலரும் நினைவுகளாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 600 தடவைக்கு மேலும், தேசிய வாக்காளர் தினம் என்ற தலைப்பில் வெளியான இடுகை 400முறைகளுக்குமேல் பார்க்கப்பட்டு மூன்றாம் இடத்தில் உள்ளது http://idayakottai.blogspot.com/2013/01/25.html என்ற இந்த இடுகையில் மதிப்புமிகு தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு நோட்டா குறித்த இரண்டு வேண்டுகோள்கள் வைக்கப்பட்டன. பின்னாளில் அதில் ஒரு கோரிக்கை அதாவது வாக்குப்பதிவு எந்த இடத்திலேயே நோட்டாவுக்கு பட்டன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டது சிறப்பம்சமாகும் இன்னும் பல சான்றோர்கள் குறித்தும் இடையகோட்டை மண்ணின் சிறப்புமிக்க இடங்கள் குறித்தும் பல்வேறு பதிவுகள் வெளியிடப்பட உள்ளன இந்த வலைப்பூவில் வெளியிடப்பட்ட , வெளியிடப்படவுள்ள பல்வேறு பதிவுகளை தொகுத்து புத்தகமாக வெளியிடும் திட்டமும் உள்ளது. ஒரு வலைப்பூ தேசிய அளவிலான அல்லது வட்டார அளவிலான வாசகர்களை கொண்டிருந்தால் 13000 பார்வைகளை 11 ஆண்டுகளில் கடப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல ஆனால் சுமார் 5000 மக்கள் தொகை மட்டுமே கொண்டு சிறிய கிராமம் குறித்த வலைப்பூ இந்த அளவிற்கு வாசிக்கப்பட்டது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் தான். மென்மேலும் இந்த வலைப்பூ வளர்ச்சி அடைய உங்கள் அனைவரின் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நமது ஊர் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் மற்றும் ஒளிப்படங்கள் இருப்பின் அவற்றை தகவல்களாக,கட்டுரையாக, படங்களாக pugalzharasan@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக வழங்கப்படும்பட்சத்தில் வழங்குபவரின் பெயருடன் வெளியிடப்படும்.
ஆதரவளித்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
திங்கள், 17 மே, 2021
IDAYAKOTTAI கே எஸ் ஜி ஹாஜா சரீப்
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட நமது முன்னோர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்பு உணர்வையும் நாம் உணர்ந்து நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட அர்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வாழ்ந்து மறைந்த நமது ஊரைச்சேர்ந்த ஒரு மாபெரும் தலைவரைப் பற்றியதுதான் இப்பதிவு
கே எஸ் ஜி ஹாஜா சரீப்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவராகவும் திகழ்ந்த இவர் நமது ஊரை சேர்ந்தவர் 15.07.1915 அன்று குலாம் மைதீன் ராவுத்தர் மகனாக பிறந்து ஆரம்பக் கல்விக்கு பின் சென்னை சென்று சிறந்த தொழிலதிபராக விளங்கியவர். மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்குரிய செயலாளராக பணியாற்றியவர் காந்தியடிகள் தமிழகத்திற்கு செய்திகள் அனுப்பும் பொழுது அவற்றை இதர தலைவர்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணியாற்றியவர் இவரே. காமராஜர், ராஜாஜி, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி என இவரது இல்லத்திற்கு வருகை தராத தலைவர்களே இல்லை. நமது இடையகோட்டையின் பிரபலமான பருப்பு ரசம் பண்டிதர் நேருவுக்கு இவர் மூலம் அறிமுகமாகி மிகவும் பிடித்தமானதாகியது. ஒருமுறை பம்பாயில் இருந்தபொழுது மகாத்மா காந்தி அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு மருந்து கிடைக்காமல் அவதிப்பட்டார், இந்த சமயம் அத்தகைய மருந்து சென்னையில் அரசு மருத்துவமனையில் என்பதை அறிந்து வெள்ளை அதிகாரிகளின் தடைகளை மீறி அந்த மருந்தை பெற்று உரிய சமயத்தில் காந்தியடிகளுக்கு சிகிச்சை பெற உதவியவர். இவ்வுதவிக்கு நன்றிக்கடனாக தன் கையால் நூற்ற நூலும், அவர் நெய்த கதர் துணியையும் மஹாத்மா அவர்கள் கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இவ்விரு பொருட்களும் சென்னை கே.பி.வி.எஸ் நிறுவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது
K P V Sheik Mohamed Rowthar & Co Pvt Ltd in Mylapore, என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும், கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்கள் இருந்ததுடன், தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளார் கலைத்துறையில் அமெச்சூர் நாடக நடிகர் மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.சட்டசபையில் கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்களுக்கும் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் இடையேயான விவாதங்கள் புகழ்பெற்றவை.1983-84ஆம் ஆண்டில் சட்டசபை எதிர்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
நாடகநடிகர், சுதந்திரப் போராட்ட வீரர், தொழிலதிபர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் எனப் பல்துறை வித்தகராகத் திகழ்ந்த கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்கள் 20.04.1999 அன்று சென்னையில் காலமானார் . இடையகோட்டை ஊர் உள்ளளவும் மண்ணின் மைந்தர் மாண்புமிகு.கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்கள் பெயர் நிலைத்திருக்கும்.
தகவல்கள் உதவி :
1. திரு.முகமது இஸ்மாயில், நெடுஞ்சாலைத்துறை(பணிநிறைவு),
2. திரு. H .ஹாஜா செரீப், நல்லாசிரியர் (பணிநிறைவு), இடையகோட்டை வரலாற்று தொகுப்பு மையம், சென்னை.
3. திரு.சௌகத் அலி, பூவிருந்தவல்லி & தமிழக சட்டமன்ற இணையதளம்