திங்கள், 17 மே, 2021

IDAYAKOTTAI கே எஸ் ஜி ஹாஜா சரீப்

 

 நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட நமது முன்னோர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்பு உணர்வையும் நாம் உணர்ந்து நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட அர்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வாழ்ந்து மறைந்த நமது ஊரைச்சேர்ந்த ஒரு மாபெரும் தலைவரைப் பற்றியதுதான் இப்பதிவு 

கே எஸ் ஜி ஹாஜா சரீப்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவராகவும் திகழ்ந்த இவர் நமது ஊரை சேர்ந்தவர் 15.07.1915 அன்று குலாம் மைதீன்   ராவுத்தர் மகனாக பிறந்து ஆரம்பக் கல்விக்கு பின் சென்னை சென்று சிறந்த தொழிலதிபராக விளங்கியவர். மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்குரிய செயலாளராக பணியாற்றியவர் காந்தியடிகள் தமிழகத்திற்கு செய்திகள் அனுப்பும் பொழுது அவற்றை இதர தலைவர்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணியாற்றியவர் இவரே. காமராஜர், ராஜாஜி, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி என இவரது இல்லத்திற்கு வருகை தராத தலைவர்களே இல்லை.  நமது இடையகோட்டையின் பிரபலமான பருப்பு ரசம் பண்டிதர் நேருவுக்கு இவர் மூலம் அறிமுகமாகி மிகவும் பிடித்தமானதாகியது. ஒருமுறை  பம்பாயில் இருந்தபொழுது மகாத்மா காந்தி அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு மருந்து கிடைக்காமல் அவதிப்பட்டார், இந்த சமயம் அத்தகைய மருந்து சென்னையில் அரசு மருத்துவமனையில் என்பதை அறிந்து வெள்ளை அதிகாரிகளின் தடைகளை மீறி அந்த மருந்தை பெற்று உரிய சமயத்தில் காந்தியடிகளுக்கு சிகிச்சை பெற உதவியவர். இவ்வுதவிக்கு நன்றிக்கடனாக தன்  கையால் நூற்ற நூலும், அவர்  நெய்த கதர் துணியையும் மஹாத்மா அவர்கள் கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இவ்விரு பொருட்களும் சென்னை கே.பி.வி.எஸ் நிறுவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது  

    பல்வேறு கட்ட விடுதலை  போராட்டங்களிலும் கலந்து கொண்டார் நாட்டு விடுதலைக்குப் பிறகு அன்னார் 1957  மற்றும் 1980  ஆகிய ஆண்டுகளில்   நடைபெற்ற  சட்டமன்ற தேர்தல்களில் திருவல்லிக்கேணி தொகுதியிலும், 1962 ம் ஆண்டு சென்னை துறைமுகம் தொகுதியிலும் வெற்றிபெற்று மூன்று முறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் 1965-ஆம் ஆண்டு சென்னை  மாநகரத்தின் செரீப் (மாநகர தலைவர் பதவி- அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் நடைமுறையில் உள்ளது) ஆகவும் பணியாற்றினார் பக்தவச்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது மக்கள் தொகை அதிகம் இல்லாத நமது பக்கத்து ஊருக்கு உயர்நிலைப்பள்ளி உருவாக்க விண்ணப்பிக்க பட்டபோது அந்த ஊரில் போதுமான மக்கள் தொகை இல்லை உயர்நிலைப்பள்ளி அமைவதற்கு தகுதியான ஊர் இடையகோட்டை தான் என்று முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி, இடையகோட்டையில்  உயர்நிலைப்பள்ளி அமைத்திட அனுமதி பெற்று தந்ததுடன் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களை நமது ஊருக்கு அழைத்து வந்து அவ்வாண்டு மரணமடைந்த முதல் பாரத பிரதமர் ஆசிய ஜோதி ஜவகர்லால் நேரு அவர்களின் நினைவாக நேருஜி அரசு உயர்நிலைப்பள்ளி என்ற பெயரில் நமது ஊரில் கல்விச்சாலை  திறந்த சான்றோர் இவரே. இவரின் செல்வாக்கின் மூலம் 1960ஆம் ஆண்டு முதன்முதலில் மின்சார வசதி நமது ஊருக்கு ஏற்படுத்தப்பட்டது முதல் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது விழாவில் அப்போதைய தமிழக அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர் அவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர் வெங்கட்ராமன் அவர்கள் பின்னாளில் இந்திய ஜனாதிபதியாக பொறுப்பு வகித்தார். கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு புதிதாக ரயில் பாதை அமைக்க மத்திய அரசு முயன்றபோது அப்பாதையினை இடையகோட்டை வழியாக அமைத்திட பொிதும் முயன்றார். அம்முயற்சி வென்றிருந்தால் இன்று நமது ஊர் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கும். ரயில்வேத்துறையால் கருமலையை ஒட்டிய பகுதியில் இதற்காக நிலம் கையகப்படுத்தபட்டதாகவும் கூறப்படுகிறது. வழியில் குறு்க்கிடும் கருமலை மற்றும் ரெங்கமலைக் குன்றுகளால் திட்டச்செலவு அதிகரிக்கும் என்று கூறி இப்பாதை பாளையம்(குஜிலியம்பாறை) வழியாக அமைக்கப்பட்டது. (என்றபோதிலும் புதிதாக சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, இடையகோட்டை வழியாக புதிய ரயில்பாதை அமைத்திட வேண்டி நமதூரில் பிறந்தவரும், அஇஅதிமுகவின் கரூர் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவருமான அமரர். திரு.சாகுல் மீது அவர்கள் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துள்ளார்.)      நமது ஊரின் அடையாளங்களில் ஒன்றான பிரமாண்டமான கலைநயமிக்க கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்களின் வீடு வடக்கு மெத்தை வீடு என்றழைக்கப்படுகிறது.

            K P V Sheik Mohamed Rowthar & Co Pvt Ltd in Mylapore, என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும், கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்கள்  இருந்ததுடன், தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளார் கலைத்துறையில் அமெச்சூர் நாடக நடிகர் மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.சட்டசபையில் கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்களுக்கும் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் இடையேயான விவாதங்கள் புகழ்பெற்றவை.1983-84ஆம் ஆண்டில் சட்டசபை எதிர்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்

    நாடகநடிகர், சுதந்திரப் போராட்ட வீரர், தொழிலதிபர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் எனப் பல்துறை வித்தகராகத் திகழ்ந்த கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்கள் 20.04.1999 அன்று சென்னையில் காலமானார் . இடையகோட்டை ஊர் உள்ளளவும் மண்ணின் மைந்தர்  மாண்புமிகு.கே எஸ் ஜி ஹாஜா சரீப் அவர்கள் பெயர் நிலைத்திருக்கும்.

 

தகவல்கள் உதவி :

1.      திரு.முகமது இஸ்மாயில், நெடுஞ்சாலைத்துறை(பணிநிறைவு),   

2.      திரு. H .ஹாஜா செரீப், நல்லாசிரியர் (பணிநிறைவு),  இடையகோட்டை வரலாற்று தொகுப்பு மையம், சென்னை.

3.      திரு.சௌகத் அலி, பூவிருந்தவல்லி                                                                                        & தமிழக சட்டமன்ற இணையதளம்


2 கருத்துகள்: