நன்றி! நன்றி!!
நாளிதழ் ஒன்றின் இணைப்பாக கணினி தொழில்நுட்பம் குறித்த வார இதழ் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பாக வந்து கொண்டிருந்தது பேருந்து பயண நேரத்தில் பொழுதுபோக்கிற்காக புத்தகம் வாங்கிய பழக்கத்தில் அந்த இணைப்பிதழை நாளிதழுடன் சேர்த்து உடன் சேர்த்து வாங்கினேன். பிறிதொரு நாளில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இடையகோட்டையில் அதிகம் இணைய தள இணைப்புகள் இல்லாத காலகட்டத்தில் பெறப்பட்ட அகன்ற அலைவரிசை இணைப்பின் மூலம் பொழுதுபோக்கிற்காக அந்த இணைப்பிதழ் வாயிலாக பிளாக் எனப்படும் வலைப்பூ உருவாக்கும் முறையை அறிந்துகொண்டு உருவாக்கப்பட்டதுதான் நமது இடையகோட்டை வலைப்பூ http://idayakottai.blogspot.com ஆகும். எனக்குத் தெரிந்த நமது ஊர் குறித்த ஆச்சரியகரமான சில தகவல்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டு நமது ஊரின் சிறப்புகளை இணைய உலகில் எடுத்துச் சொல்லுவதற்காக இந்த வலைப்பூ 24.05.2010 ல் உருவாக்கப்பட்டது. இன்றுடன் (23.05.2021) பதினோரு ஆண்டுகள் முடிந்துவிட்டன முதலில் சுமார் ஒரு ஆண்டு காலம் எந்த பதிவும் செய்யப்படவில்லை. பின்னர் பல்வேறு தருணங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நேரம் கிடைக்கும் சமயங்கள் எல்லாம் வலைப்பூ இடுகைகள் வெளியிடப்பட்டன இதில் அதிகம் ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டு உள்ளது தனிச்சிறப்பாகும். 1570 ஆம் ஆண்டு விசுவநாத நாயக்கரின் முதன்மை அமைச்சராக இருந்த அரியநாத முதலியாரின் செயல் திட்டத்தில் உருவாக்கப்பட்ட 72 பாளையங்களில் நமது இடையகோட்டை பாளையம் ஒன்றாகும். சுமார் நான்கரை நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்டது நமது ஊர் ஆகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி பாளையம் உருவாவதற்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது நமது இடையகோட்டை என்றால் நமது ஊரின் சிறப்பு விளங்கும். பல்வேறு நூல்கள் மற்றும் ஜமீன் குடும்ப வாரிசுகள், பலபெரியவர்கள் உடனான நேரடி சந்திப்புகள், e-books என பல்வேறு தரவுகளின் அடிப்படையிலேயே இடுகைகள் பதிவிடப்படுகின்றன. நமது இடையகோட்டையின் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட பெரியோர்கள் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை அலுவலர் .திரு. முகமது இஸ்மாயில், ஓய்வுபெற்ற நல்லாசிரியர் திரு. காஜா ஷெரிப் (இடையகோட்டை வரலாற்றுத் தொகுப்புமையம், பூவிருந்தவல்லி) ஆகியோர் இடையகோட்டை குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை வழங்கிய நன்றிக்குரியவர்கள். இன்று இரவு 8.30 மணி வரை சுமார் 13095முறைகள் நமது வலைப்பூ வாசகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இவர்களில் இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நமது வலைப்பூ வாசகர்கள் உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். நமது இடுகைகளில் இடையகோட்டை வரலாறு குறித்த பதிவுகள் மட்டுமன்றி பல்வேறு தலைப்புகளிலும் இடுகைகள் பதிவிடப்பட்டுள்ளன. மலரும் நினைவாக பழைய ஒளிப்படங்களும் நமது ஊரில் வாழ்ந்து மறைந்த சான்றோர் பெருமக்கள் குறித்த பதிவுகள் இடுகையிடப்பட்டுள்ளன. அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகளில் இடையகோட்டை ஊர் வரலாறு இடுகை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. மலரும் நினைவுகளாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 600 தடவைக்கு மேலும், தேசிய வாக்காளர் தினம் என்ற தலைப்பில் வெளியான இடுகை 400முறைகளுக்குமேல் பார்க்கப்பட்டு மூன்றாம் இடத்தில் உள்ளது http://idayakottai.blogspot.com/2013/01/25.html என்ற இந்த இடுகையில் மதிப்புமிகு தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு நோட்டா குறித்த இரண்டு வேண்டுகோள்கள் வைக்கப்பட்டன. பின்னாளில் அதில் ஒரு கோரிக்கை அதாவது வாக்குப்பதிவு எந்த இடத்திலேயே நோட்டாவுக்கு பட்டன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டது சிறப்பம்சமாகும் இன்னும் பல சான்றோர்கள் குறித்தும் இடையகோட்டை மண்ணின் சிறப்புமிக்க இடங்கள் குறித்தும் பல்வேறு பதிவுகள் வெளியிடப்பட உள்ளன இந்த வலைப்பூவில் வெளியிடப்பட்ட , வெளியிடப்படவுள்ள பல்வேறு பதிவுகளை தொகுத்து புத்தகமாக வெளியிடும் திட்டமும் உள்ளது. ஒரு வலைப்பூ தேசிய அளவிலான அல்லது வட்டார அளவிலான வாசகர்களை கொண்டிருந்தால் 13000 பார்வைகளை 11 ஆண்டுகளில் கடப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல ஆனால் சுமார் 5000 மக்கள் தொகை மட்டுமே கொண்டு சிறிய கிராமம் குறித்த வலைப்பூ இந்த அளவிற்கு வாசிக்கப்பட்டது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் தான். மென்மேலும் இந்த வலைப்பூ வளர்ச்சி அடைய உங்கள் அனைவரின் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நமது ஊர் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் மற்றும் ஒளிப்படங்கள் இருப்பின் அவற்றை தகவல்களாக,கட்டுரையாக, படங்களாக pugalzharasan@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக வழங்கப்படும்பட்சத்தில் வழங்குபவரின் பெயருடன் வெளியிடப்படும்.
ஆதரவளித்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக